Ad

வியாழன், 7 ஜூலை, 2022

``ஆங்கிலேயர்கள் கூறியதை அரசியலமைப்பில் எழுதிவைத்துள்ளனர்"- சர்ச்சைப் பேச்சால் கேரள அமைச்சர் ராஜினாமா

கேரள மாநிலத்தில் இரண்டாவது முறையாகத் தேர்தலில் வெற்றிபெற்று சி.பி.எம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்களை மாற்றிவிட்டு இந்த முறை புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார் பினராயி விஜயன். பினராயி விஜயன் 2.0 ஆட்சி ஓராண்டு கடந்த நிலையில் அமைச்சர்கள் சர்சையில் சிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் சி.பி.எம் கட்சி சார்பில் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாராந்தர அரசியல் கண்காணிப்புக் கூட்டத்தில் கேரள மீன்வளத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஷாஜி செரியன், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களைக் கொள்ளையடிப்பதற்கே உதவுகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறியதைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதிவைத்துள்ளனர். சாதாரண மக்களைச் சுரண்டுவதுதான் இதன் நோக்கம்" எனப் பேசியிருக்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஷாஜி செரியன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஷாஜி செரியன் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமைச்சர் ஷாஜி செரியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் உள்ளிடோர் கவர்னர் ஆரிஃப் முகமதுகானைச் சந்தித்து மனு அளித்தனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் அமைச்சர் ஷாஜி செரியன் பேசிய விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவதாகவும், சபையை நிறுத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனவும் கூறினர். ஆனால், கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் அது பற்றி விவாதிக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்தார். ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் அமளி செய்ததை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே அமைச்சர் ஷாஜி செரியனின் பேச்சு குறித்து ஆளுநர், முதல்வரிடம் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் அரசியல் அமைப்புக்கு எதிராகப் பேசவில்லை என்றும், அரசு நிர்வாகத்துக்கு எதிராகவே பேசினேன் எனவும் ஷாஜி செரியன் கூறியிருக்கிறார். ஆனாலும் அந்த விளக்கத்தை ஏற்காத சி.பி.எம் தலைமை, ஷாஜி செரியன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஷாஜி செரியன், "கடந்த 3-ம் தேதி மல்லப்பள்ளியில் சி.பி.எம் ஏரியா கமிட்டி சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் பேசியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என செய்திகள் வெளியாகிவருகின்றன. நம் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கும் அரசியல்வாதி நான். அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என உறுதிபூண்டவர்கள் சி.பி.எம் கட்சியினரும், இடதுசாரிகளும்.

ஷாஜி செரியன்

கடந்த 42 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடித்துவருகிறேன். என்னைத் தவறாகக் காட்டும் பிரசாரங்கள் நடக்கின்றன. ஒரு மணி நேரம் நான் பேசியதின் சில பகுதிகளை எடிட் செய்து பரப்புகின்றனர். நான் பேசியதைத் தவறாகச் சித்திரித்து இடதுசாரி அரசை பலவீனப்படுத்த முயல்கிறார்கள். நான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசவில்லை என்பதை மீண்டும் கூறுகிறேன். இந்த நிலையில் நான் சுயமாக ஒரு முடிவெடுத்திருக்கிறேன். அமைச்சர் பதவியில் இனியும் நான் தொடர்வது நல்லதல்ல என முடிவு செய்திருக்கிறேன். எனவே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறேன்" என்றார். `அமைச்சர் ஷாஜி செரியன் ராஜினாமா செய்திருப்பதுது பினராயி விஜயன் 2.0 ஆட்சியில் முதல் விக்கெட்’ என எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-minister-resigns-after-controversial-remarks-on-indian-constitution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக