Ad

செவ்வாய், 5 ஜூலை, 2022

மீண்டும் மீண்டும் நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு விடியல் எப்போது?!

கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. இந்த நெருக்கடிக்கு ராஜபக்சே அரசுதான் காரணம் என்றும், அவர்கள் பதவி விலக வேண்டுமென்றும் இலங்கை மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டும் பதவி விலகினார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, `எனது பதவிக்காலம் முடியும் வரை அதிபராகத்தான் இருப்பேன்' என்று சொல்லி பதவி விலக மறுத்துவருகிறார். இருந்தும், எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கோத்தபயவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இந்த நிலையில், மேலும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது இலங்கை. அங்கு, அத்தியாவசிய சேவைகளிலிருக்கும் சுகாதாரத் துறையினர், முப்படையினர் உள்ளிட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை விதித்திருக்கிறது அரசு. இதனால், தனியார் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றன. அரசுப் பேருந்துகளும், ரயில்களும் தொடர்ந்து செயல்படும் என்று அரசு தெரிவித்திருந்தாலும், அவையும் முடங்கிவிட்டதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. இதனால் போக்குவரத்து வசதியில்லாமல் மக்கள் பெரும் அவஸ்தைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பற்றாக்குறை காரணமாகவும், உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மேலும், நகர்ப்புறங்களிலுள்ள பள்ளிகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டிருக்கிறது இலங்கை அரசு. கிராமப்புறங்களில், நடந்து செல்லக்கூடிய தூரத்திலுள்ள பள்ளிகள் மட்டும் இயங்கலாம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. சில காலம் கட்டுக்குள் இருந்த மின்வெட்டும், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கியிருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

இதற்கிடையில், எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் வாங்கக் காத்திருந்த இளைஞர் ஒருவரை, ராணுவ அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒரு சில இடங்களிலும், ராணுவத்தினர் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. `இந்த நிலை தொடர்ந்தால், உலக அரங்கில் இலங்கையின் பெயர் மேலும் கெடும்' என்று எதிர்க்கட்சிகள் அரசை எச்சரித்திருக்கின்றன.

இலங்கை கலவரம்

இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடும் மக்களோ, ``பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால், உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் விண்ணை முட்டியிருக்கின்றன. போக்குவரத்து தடைப்பட்டிருப்பதால், அரசு, தனியார் அலுவலகங்கள் சரிவரச் செயல்படவில்லை. பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையை அரசு எப்படிச் சரி செய்யப்போகிறதோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்திருக்கிறது. எனவே, கோத்தபய, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஊழல் அரசு பதவி விலக வேண்டும். தேர்ந்த ஆட்சியாளர்கள் பொறுப்புக்கு வர வேண்டும்'' என்கிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாடு வாழ் இலங்கை மக்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் அமைச்சர் விஜேசேகரா. ``வெளிநாடுகளில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதில், இலங்கையிலுள்ள உறவினர்களுக்குப் பணம் அனுப்புபவர்கள், முறைசாரா நிறுவனங்கள் மூலம் அனுப்பாமல், வங்கிகள் மூலம் பணம் அனுப்பி இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும்'' என்பதுதான் அமைச்சரின் கோரிக்கை.

இலங்கை

இது குறித்து இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ``ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்குச் சுமார் 800 மில்லியன் டாலர் வழங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருளுக்கு 587 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக அமைச்சர் கூறியிருக்கிறார். வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் வங்கிகள் மூலம் பணம் அனுப்பினால்கூட, நாட்டுக்குத் தேவைப்படும் அளவுக்கான அந்நியச் செலாவணியை ஈட்டிவிட முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் வேறெந்த திட்டமும் இல்லை. அதேபோல பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த ராஜபக்சே அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. எனவே, நாடு எப்போது மீண்டெழும் என்ற கேள்விக்கு தற்போது யாரிடமும் பதில் இல்லை'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-srilankas-present-situation-and-solution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக