Ad

திங்கள், 11 ஜூலை, 2022

`மானியக் கோரிக்கை எழுத என் வீட்டுக் கதவைத் தட்டாத அதிமுக அமைச்சர் உண்டா?' -கொதிக்கும் மருது அழகுராஜ்

அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் இப்போதுதான் க்ளைமாக்ஸை எட்டியிருக்கிறது. கட்சியில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

``பெரும்பாலானவர்களின் விருப்பம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதாகத்தானே இருக்கிறது?”

``அப்படியானால் ஏன் இரட்டைத் தலைமைக்கான தேர்தலை நடத்தினார்கள்... நில அபகரிப்பு செய்வதுபோல திட்டமிட்டு, அரசியல் அபகரிப்பு செய்வதற்கான திரைக்கதையை எழுதி, நடத்தியிருக்கிறார்கள்.”

மருது அழகுராஜ்

``எதைவைத்து திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்கள் என்கிறீர்கள்?”

``10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் கொடுக்கக் கூடாது. சரியாக வராது. அதற்காக கமிட்டி அமைத்து ஆட்சி அமைக்கப்பட்டதும் அனைத்துச் சாதியினரையும் சரிக்கட்டி இதைச் செயல்படுத்தலாம்’ என்றார் ஓ.பி.எஸ். `இப்போது கொண்டுவருவது வன்னிய மக்களையும் ஏமாற்றும் செயல்’ எனவும் ஓ.பி.எஸ் பேசியதை ராமதாஸிடம் சென்று ‘வன்னிய மக்களுக்கு எதிராக ஓ.பி.எஸ் இருக்கிறார்’ எனப் போட்டுக்கொடுத்தனர். உள்ளரங்கத்தில் அண்ணனும் தம்பியுமாக இருந்தபோது பேசியதை வெளியில் சொல்லி அய்யா ராமதாஸுக்கு எதிராக ஓ.பி.எஸ்-ஸை நிறுத்தினார்கள்.

இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பின்னடவைச் சந்தித்தார்கள். வன்னிய சமூகத்தினர் வாழும் பகுதியிலும் தோற்றார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகத்தோடு கூட்டணிவைக்க வேண்டும். உள் ஒதுக்கீட்டில் அ.ம.மு.க உள்ளே கொண்டுவர வேண்டும் என ஓ.பி.எஸ் சொன்ன எதையும் கேட்காமல் சர்வாதிகாரமாக நடந்துகொண்டதன் விளைவை இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஓ.பி.எஸ்-ஸை வன்னிய சமூகத்துக்கு எதிராக நிறுத்த வேண்டும், தென் மாவட்டத்திலும் அவர் தோற்க வேண்டும் எனத் தேர்தலிலேயே அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள்தான்.”

``ஏன் இரட்டைத் தலைமை வேண்டுமென்பதில் இவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள்?”

“அம்மா, அப்பா இல்லாத காலத்தில் அண்ணன், தம்பி சேர்ந்து வீட்டை வழி நடத்துவதில்லையா... இவர்கள் எம்.ஜி.ஆரோ, அம்மாவோ இல்லையே. அப்படியான நட்சத்திர அந்தஸ்துடனான தலைமை இல்லாத நேரத்தில் கூட்டுத்தலைமைதான் கைகொடுக்கும். கூட்டுத் தலைமையால் ஒரு நாட்டையே சிறப்பாக வழிநடத்தும்போது அ.தி.மு.க-வை வழிநடத்த முடியாதா என்ன... அதனால்தான் இருவரையும் `நதி காக்கும் இரு கரைகள், விழி காக்கும் இரு இமைகள்’ என்றேன். இப்போது உள்ளது தேவையற்ற குழப்பம். இது அ.தி.மு.க-வின் அழிவுக்கு விதையிடும் என்பதால் இரட்டைத் தலைமை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

எடப்பாடி - பன்னீர்

``பொதுச்செயலாளராக எடப்பாடியை ஏற்றுக்கொள்வீர்களா?”

``கட்சியின் தலைவர் இல்லை, அவைத்தலைவர் இல்லை, மூன்றாவது அதிகாரம் பொருளாளருக்குத்தானே இருக்கிறது... கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாதான் என்றார்கள். இதைவிட மற்றொருவர் சொன்னார் ‘அம்மா இருக்கையில் எந்த நாய் அமரவும் ஒப்புக்கொள்ள மாட்டோம்’ என்றார். ஆனால், இன்றைக்கு. மூன்று மாதங்களுக்குப் பிறகு மற்றொரு பிரச்னை வந்தால் எடப்பாடியை மாற்றி அதிபர் முறை கொண்டு வருவீர்களா... ஓ.பி.எஸ்., அம்மாவால் இரண்டு முறை முடிசூட்டப்பட்டவர். அம்மா உயிரோடு இருந்தவரை ஓ.பி.எஸ் இடத்தில் மற்றொருவரை அமர்த்திப் பார்க்க நினைக்கவில்லை. மூத்தவர், முன்னவர், கட்சியின் பொருளாளர். அப்படியான ஒருவரை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ‘கட்சியை எடப்பாடியிடம் கொடுக்கிறேன்’ எனப் பட்டாப் போட்டுக்கொடுக்கச் சொன்னால் அது நியாயமா... கூவத்தூரில் டெண்டர் எடுத்து முதல்வரான ஃபார்முலாவை பொதுக்குழுவில் பயன்படுத்துவேன், மாவட்டச் செயலாளர்களிடம் பயன்படுத்துவேன் என்று சொல்வது தவறு. ஜனநாயகத்தை அனுமதியுங்கள். அதன்படி தலைமைக்கு வாருங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.”

``ஜனநாயகம் இல்லை என எதைச் சொல்கிறீர்கள்?”

“ஒரு கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை நேரலை செய்ததை எங்காவது நாம் பார்த்திருக்க முடியுமா... ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிர்ப்பு இருக்குமாறு காட்டுவதற்காகவே நடத்தப்பட்ட நிகழ்வு. தவறான வார்த்தைகளைப் பேசி, தண்ணீர் பாட்டில் வீசி, கேட்கக் கூடாத வார்த்தைகளையெல்லாம் பேசி அவமானப்படுத்தப்பட்டார்கள். உண்மையில் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தியிருக்க வேண்டுமில்லையா, எப்படிக் கட்சியின் மூத்தவரை அவமானப்படுத்தலாம் எனக் கேட்டிருக்க வேண்டுமில்லையா... எல்லாவற்றையும் நடக்கவிட்டு வேடிக்கை பார்ப்பவர் எப்படித் தலைமைக்கு ஆசைப்படலாம்?”

அதிமுக பொதுக்குழு

``கட்சியின் செயல்பாட்டிலும் இவ்வளவு விமர்சனம் வைப்பது எதனால்?”

``கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஐந்தாயிரம் பேரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். அ.தி.மு.க-வில் யாராவது புதியவர்கள் வந்து சேர்ந்தார்களா... ஆளுமங்கட்சியாக இருந்தபோது பலர் சென்றுவிட்டார்கள். தனிநபர் விருப்பு வெறுப்புகளில் எடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ் பையன் ஸ்டாலினைச் சென்று சந்தித்ததைப் பேசுகிறார்கள். அவர் இருட்டில் சென்று பார்க்கவில்லை. ஏன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், செல்லூர் ராஜூ தி.மு.க குறித்து சட்டப்பேரவையில் பாராட்டவில்லையா... தி.மு.க எதிர்ப்பு என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தவர் ஓ.பி.எஸ். அவர் சொல்வதற்கெல்லாம் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். அவரைக் களங்கப்படுத்துவது, காயப்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம். ஆளைச் சொல்... ரூலைச் சொல்கிறேன் என்கிறார்கள். இது தர்மமா?”

``உங்கள்மீதும் மோசடிப் புகார் சொல்கிறார்களே... அதற்கு என்ன பதில்?”

“என்னுடைய கருத்துக்கு பதில் சொல்லாமல் அவ்வாறு பழி போடுகிறார்கள். ஜெயக்குமார் தன் அரசியல் அசிங்கத்தால்தான் ராயபுரத்தில் தோற்றார். ஒற்றுமையாக இருங்க, களம் வேறு மாதிரி இருக்கிறது. நமக்கு எதிராக வேறு ஒருவன் வருகிறான் எனக் கட்சியின் நலனுக்காகச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் அளவுக்கு ஜெயக்குமார் யோக்கியனும் இல்லை. எனக்கு ஜெயக்குமார் மாதிரி அச்சப்பட ஒன்றுமில்லை. என்னைப் போய் கூலிக்கு மாரடிப்பதாகச் சொன்னார்கள். எல்லோரும் உட்கார்ந்து மிக்சர் தின்னபோது நான் உழைத்தேன். `முதல் மானியக் கோரிக்கை. பேச வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள்’ என எனக்கு போனில் அழைத்து கெஞ்சினார் எடப்பாடி. மானியக் கோரிக்கைக்காக என் வீட்டின் கதவைத் தட்டாத அ.தி.மு.க அமைச்சர்கள் உண்டா... என்னை வருத்தப்படுத்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.”

பன்னீர்செல்வம் தரப்பு

``ஓ.பி.எஸ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தப் பாசமா?”

``அ.தி.மு.க-வில் சாதிகள் கடந்து ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். சாதியாகப் போய்விடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஓ.பி.எஸ் ஒரு பிள்ளைப்பூச்சி... நல்ல மனிதர். ஏன் இப்படிப் பிரச்னை கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தென் மாவட்டம் அ.தி.மு.க-வுக்கு நம்பிக்கையான பகுதி. இந்தப் பகுதியில் தோற்றதால்தான் அ.தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. தென்பகுதியில் இரட்டைத் தலைமையாக இருந்தபோதே இவ்வளவு பெரிய தோல்வியென்றால் அதில் ஒற்றைத் தலைவரை நீக்கிவிட்டால் என்ன நடக்கும்... யோசித்துப் பாருங்கள். `7.5 உள் ஒதுக்கீடு மூலம் ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கினார், குடிமராமத்துப் பணி செய்தார், கரிகாலன் காலத்தைக் கண்முன் நிறுத்தினார், அத்திக்கடவு அவினாசி திட்டம் தந்தார்’ என்று சொல்லும்போதெல்லாம் அதைப் பற்றி எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். எது சரியோ, அதைச் சரி என்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்று பார்க்க வேண்டுமே தவிர அதற்கொரு சாயம் பூச முயலக் கூடாது.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/marudhu-alaguraj-interview-regarding-admk-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக