Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

“எனக்கு நண்பர்கள் குறைவு!“ - எம்.என்.நம்பியார் #AppExclusive

நாங்கள் திரு.எம்.என்.நம்பியார் வீட்டிற்குப் போகும் போதே குறிப்பிட்ட நேரம் தவறிச் சென்றோம்.

“வாருங்கள்... வாருங்கள்... ‘லேட்’ போலிக்கிறதே! நாமெல்லோரும் இந்தியர்கள் அல்லவா?” என்ற சூடான வரவேற்பை வாரிக் கட்டிக் கொண்டோம்.

“நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்கிறேன். ஏனென்றால், எனக்கு நன்றாகப் பேச வராது” என்று கூறியவர், தன் உதட்டைத் தடவிக் கொண்டிருந்தார். அது அவர் பழக்கமாக்கும் என்று நினைத்தோம்.

“நீங்கள் வரும் முன்புதான் எறும்பு ஒன்று உதட்டில் கடித்து விட்டது. சிறிய எறும்புதான். ஆனால், உதட்டில் வீங்கிப் போய் விட்டது” என்று கூறியவர், பேச்சை நிறுத்திவிட்டார், ஏதோ ஒன்று ஞாபகத்திற்கு வந்தாற்போல.

My friend circle is small - Actor M.N.Nambiar

“ஒரு சமயம் ஒரு கதாநாயகி நடிகை ஊட்டி ‘அவுட்டோரில்’ நடித்துக் கொண்டிருந்தார். நானும் அப்போது அவருடன் நடித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இன்று ‘இன்சுலின்’ (Insulin) ஊசிபோட்டுக் கொண்டீர்களா?” என்று கேட்டேன்.

‘சர்க்கரை வியாதி’ (டயபடீஸ்) இருக்கிறது என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டார்.

நான் பதில் ஏதும் கூறாமல் இருந்து விட்டேன். ஆனால் அவரோ, என்னை விடவில்லை!“‘தங்க கிளியே மெழி பேசு; சர்க்கரை இதழால் கவி பாடு’- என்று கதாநாயகன் உங்களை வர்ணித்தார் இல்லையா? அதனால் தான் உங்களுக்கு ‘சர்க்கரை நோய்’ கட்டாயமாக இருக்க வேண்டுமே என்ற நினைத்துக் கேட்டேன்!”

நம்பியாரை வில்லனாகவும், பயங்கர மனிதனாகவும் பார்த்துத் தான் பழக்கம். இப்படி ‘ஜோக்’ அடிப்பார் என்று நாங்கள் கனவிலும் கருதவில்லை!

“நல்ல நடிகராக இருந்தும் ஏன் இப்போது எல்லாம் உங்களுக்குப் படங்கள் இல்லை?” - எங்களுடைய முதல் கேள்வி.

“ஒருவேளை நான் இன்னும் பரதநாட்டிய முத்திரைகளைக் கற்றுக் கொள்ள வில்லையோ, என்னவோ? அதோடு இப்போது சிறந்த தயாரிப்பாளர்களும் இல்லை” என்ற சட்டென்று பதில் வந்தது. மீண்டும் அவரே தொடர்ந்தார்:“ஆமாம்! முன்பு போல் சிறந்த படங்களை எடுக்க சிறந்த தயாரிப்பாளர்கள் இப்போது இல்லை.

ஆகையால், சிறந்த நடிகர்களை வைத்து அவர்களால் படம் எடுக்க முடிவதில்லை. அதற்கு வேண்டிய வசதிகளும் அவர்களிடம் இல்லை. முன்போல், இந்த வேடத்திற்கு ‘இந்த நடிகர்’ தான் என்ற நியதியும் மாறி விட்டது. மேலும், இன்றைய நடிகனுக்கு உரிய ‘தகுதிகள்’ எனக்கில்லை!” திடுக்கிட்டு நிமிர்கிறோம். ஒரு நல்ல நடிகர் இப்படிச் சொல்கிறாரே என்று.“நான் புலால் உண்ணுவதில்லை! மது அருந்துவதில்லை! வெளியில் ‘சாப்பிடும்’ பழக்கமும் எனக்கில்லை. அதனால், எனக்கு நண்பர்களும் குறைவு! சிறு வயதிலிருந்தே நான் என்னை இப்படி வளர்த்துக் கொண்டு விட்டேன். இப்படி இருப்பவனைப் படவுலகத்தினால் எத்துணை நாள்தான் தாக்குப் பிடிக்க முடியும்?“ஒரு முறை, வெளியூர் படப்பிடிப்பிற்கு திரு.எம்.ஜி.ஆருடன் சென்றிருந்தேன். ‘மேக்அப்’ முடிந்த பிற்பாடு, இருவருக்கும் காலை உணவு வந்தது. எனக்கு இட்டிலிகளும், சாம்பாரும்; எம்.ஜி.ஆருக்கு இட்டிலிகளும், மீன் சாம்பாரும் வந்திருந்தன.ஒரே டிபன் காரியரில் அடுத்தடுத்து ‘சாம்பார்’ டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்ட நான், எனக்கு ‘டிபன்’ வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் மிகவும் சுத்த சைவம். எம்.ஜி.ஆர். சாப்பிடுமாறு என்னை வற்புறுத்தினார்.

ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவரும் காலை உணவைச் சாப்பிடாமல் எழுந்துவிட்டார். மற்றவர்களின் துன்பத்தைப் பொறுக்காதவர் அவர். நான் பிற்பகலில் சாப்பிட்டேன். ஆனால் அவரோ, பிற்பகலிலும் ஒன்றும் சாப்பிடவில்லை. இத்தகைய என் கொள்கைகள் பல சமயங்களில் மற்றவர்களுக்கு வேதனைனையும், கஷ்டத்தையும் கொடுக்கின்றன. என்ன செய்வது?”

My friend circle is small - Actor M.N.Nambiar

“எனக்குள்ளேயே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதனுள்ளேயே நான் சுற்றிச் சுற்றி வருகிறேன். இப்படியெல்லாம் கடினமாக வாழ்வதற்கு ஒரே ஒரு காரணம், அதுதான்....“மனது!

நாம் செய்யும் எந்தக் காரியத்திற்கும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து யாரிடமும் எதை வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம். நீங்கள் நேரம் கழித்து வந்ததற்கு ஒரு காரணத்தைக் கூறினீர்கள். ஆனால், நம் மனத்தினிடம் ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கூற முடியாதே! நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நம் மனத்தினிடம் நாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். கடைசி வரையில் நம்முடன் இருக்கப்போவது நம் மனதுதான் - மற்றவர்கள் அல்ல!“சமீபத்தில் எனக்கு ஒரு படக் கம்பெனியார் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத் தொகையைவிட அதிகமாகக் கொடுத்தார்கள். நான், அதிகமாகக் கொடுத்த தொகையைத் திரும்ப அவர்களிடம் கொடுக்க முயன்ற போது வாங்க மறுத்தார்கள்;“‘உங்களுக்கு இன்னமும் நிறையக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் முடியவில்லை... இத்தொகையை நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும்' என்று அவர்கள் மிகவும் வற்புறுத்தியதால் வாங்கிக் கொண்டேன். தர்மத்திற்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டு, மனச்சாட்சியின்படி வாழ விரும்புகிறேன் நான்!”

நம்பியாரிடம் இருக்கும் இரண்டு கெட்ட பழக்கங்களில் ஒன்றை மூன்று வருடங்களுக்க முன் விட்டு விட்டாராம். இன்னொன்றை இவர் கூடிய விரைவில் விடப் போகிறாராம். சிகரெட்டு பிடிப்பதை விட்டு விட்டவரால், சீட்டாட்டப் பழக்கத்தை விட முடியாமல் இருக்குமா என்ன? “நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிவாஜி கணேசனின் படங்களில் அதிகமாக நடிப்பதில்லை?” - மீண்டும் அவரை சினிமாவுக்கு இழுக்கிறோம்.

“எனக்கு அவருடன்கூட நடிக்கத் தகுதி இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவருடைய படங்களில் நான் நடிக்கவில்லையோ, என்னவோ?”

“இன்றையத் தமிழ்ப்பட உலகின் நிலை என்ன?”

“தரம் தாழ்ந்து போயிருக்கிறது. காரணம், 'தொழில்’ பரவலாக்கப்பட்டு விட்டதுதான். பணமில்லாமல் யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்று ஆகிவிட்டதால், இன்றைய படங்களின் தரம் தாழ்ந்து போயிருக்கிறது. “மேலும், நடிகர்கள் தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைப்பதில்லை. பணம் கொடுக்க முடியாத தயாரிப்பாளர்க்ள், நடிகர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி 'கால்ஷீட்' பெற வேண்டி இருக்கிறது! இதனால் நேரம் வீணாக்கப்பட்டு, பணமும் செலவழிகிறது. படத்தொழிலைப் பற்றி அறியாதவர்கள் பலர், இதில் புகுந்து இதைச் சீர்குலைத்திருக்கிறார்கள்.

My friend circle is small - Actor M.N.Nambiar

“இன்றையத் தமிழ்த் தயாரிப்பாளர்கள் 'செட்’ போட்டு படமெடுப்பதற்கு வசதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தெலுங்கு, கன்னடப் படங்களுக்குப் போட்ட 'செட்’டை உபயோகித்துப் படமெடுக்கிறார்கள். அந்த அளவிற்குத் தமிழ்ப்பட உலகம் தரம் தாழ்ந்து போய் இருக்கிறது! “மேலும், நாம் மற்ற மொழி தயாரிப்பாளர்களைக் குறை சொல்லிக் குறை சொல்லி நாட்களை வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களின் நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம், நம் நிலையைச் சீர்ப்படுத்திக் கொள்ள ஆவண செய்ய வேண்டும்.”

“இன்ஸ்டிடியூட் நடிகர்கள் பிரபல நடிகர்களின் நடிப்பைக் குறை கூறுகிறார்கள். இதைப் பற்றித் தங்களின் கருத்து என்ன?”

“‘கிணற்றுத் தவளைகள்' போல இவர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் இதற்கெல்லாம் காரணம், ‘தலைமுறையில் இடைவெளி’(Generation gap). பழைய தலைமுறையினர் செய்தது தவறு என்று இன்றைய தலைமுறையினர் கூற, நாளைய தலைமுறையினர் இன்றைய தலைமுறையினர் செய்வதைப் பற்றிக் குறை கூற - இதற்கு ஏது முடிவு? இன்றைய பிரபல நடிகர்கள் எல்லோரும் அன்று நாடகங்களில் நடித்தவர்கள். நாடகங்களில் நடிக்கும்போது, கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவனுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகச் சற்று மிகைப்படுத்தி நடிக்க வேண்டி வந்திருக்கிறது. அந்தப் பழக்கம் இன்னும் மாறவில்லை. ஆனால், அதற்காகப் பரத நாட்டிய முத்திரைகளைத் தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பதும் இல்லை.

‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு' என்பது பழமொழி. நடிப்பில் யாரும் சூரப்புலிகளாகவும், நடிப்பில் தேர்ந்து விட்டேன் என்றும் கூற முடியாது. காரணம், எதிலுமே கல்லாதது நிறைய இருக்கிறது!”

நம்பியார் தன் மனைவியை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரும் ஒரு ‘மோடா' வை எடுத்துப் போட்டுக் கொண்டு அமருகிறார்.

“என் மனைவியைக் கேட்காமல் நான் எதையும் செய்வதில்லை! எனக்கு 'ஷர்ட்’ தேர்ந்தெடுப்பதிலிருந்து எனக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் என் மனைவி தான் செய்வது வழக்கம்.

வீட்டு நிர்வாகத்திலிருந்து என்னை நிர்வகிப்பது வரை எல்லாமே என் மனைவிதான். மனைவிக்கு அடங்கிய கணவன் நான்!” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறுகிறார் நம்பியார். அவர் மனைவி மிகவும் வெட்கத்துடன் அமர்ந்திருக்கிறார். “‘நல்லவர்கள்’ எல்லோரும் தம் மனைவியை இப்படித்தான் புகழ்வார்கள்- புகழ வேண்டி இருக்கும்! காரணம், அவர்களுடைய வாழ்வில் மனைவி ஒரு 'அஸெட்’ (Asset). எனக்கு மனைவி தான் எல்லாமே என்று சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படுவதில்லை. சிவனே உமையைத் தன் உடலில்தானே வைத்துக் கொண்டிருக்கிறார். கணவனுக்கும் - மனைவிக்கும் உள்ள உறவு தான் (Mutual understanding) வாழ்க்கையை ஒருவருக்கு மிகவும் அழகாக அமைக்க முடியும்! என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்!" என்கிறார் நம்பியார். “இப்போதெல்லாம் வெளிப்புறப் படப்பிடிப்பிற்குக்கூட நான் என் மனைவியை அழைத்துச் செல்கிறேன். ஏனென்றால் நன்கு சமைப்பாள். நான் தான் மற்றவர்கள் தயாரிக்கும் உணவை விரும்பி ஏற்பதில்லையே!” என்று நம்பியார் கூற, மனைவி ‘கலகல’ வென சிரிக்கிறார்.

பேட்டி: சியாமளன்

(13.10.1974 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


source https://www.vikatan.com/government-and-politics/cinema/my-friend-circle-is-small-actor-mnnambiar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக