Ad

திங்கள், 2 மே, 2022

ஆளுநர் பதவி அநாவசியமா? - மாநில சுயாட்சி பற்றி கொஞ்சம் பேசுவோமா? -2

ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு நியமன உறுப்பினர் தானே தவிர அவர் ஒன்றும் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு சனநாயக முறையில் தேர்தலை சந்தித்தவர் அல்ல, மாறாக அவர் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவை பேணி காக்கும் பொருட்டு செயல்படக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர்.

இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுநர் தன்னிச்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் முட்டுக்கட்டை போட முடியாது, அதை அவருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழங்க வில்லை. இதைத் தான் , கடந்த வாரம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் மனு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம்,

"மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது கூட்டாட்சிக்கு விரோதமானது. அமைச்சரவைக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரமில்லை'' என்று கூறி இருந்தது.

உச்ச நீதிமன்றம்

ஒரு மாநிலத்தின் மக்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யும் பொறுப்பும் , கடமையும் அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு தான் உண்டு, அந்த உரிமை நியமன ஆளுநருக்கு இல்லை. ஏனென்றால் , ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களை சந்தித்து வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்திப்பது மாநிலத்தை ஆளும் கட்சிகள் தானே தவிர, ஆளுநர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், தேர்தல் நேரத்தில் ஆளுநரின் பங்களிப்பு என்பது மிக மிக குறைவே ஆகும் , தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெரும் கட்சிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர தேர்தலில் அவரின் பங்கு பெரிதாக ஏதுமில்லை, இந்த பதவி பிரமாணத்தை கூட அந்த மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி செய்து வைக்க முடியும்.

ஒரு காலத்தில் ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பதவியாகவே இருந்தது, ஆனால், இப்போது அந்த நிலை மாறி இந்த பதவிக்கு ஒய்வு பெற்ற ஐ.பி. எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இப்படி நியமிக்கப்படும் ஒரு ஆளுநருக்கு அந்த மாநில அரசுகள் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை மட்டும் ஏறக்குறைய 150 ஏக்கர். இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனம் செய்யப்படக் கூடிய ஆளுநருக்கான செலவைப் பற்றி முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரியும், முன்னாள் கவர்னருமான திருமதி.விஜயலட்சுமி பண்டிட் அவர்கள் கூறுகையில் "கவர்னர் பதவி என்பது ஒரு அநாவசியமான பதவி, காரணமில்லாமல் இப்பதவிக்கு மிக அதிகப் பணம் செலவிடப்படுகிறது." என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் சில முதன்மைகளுக்கு சொந்தக்காரர் விஜயலட்சுமி பண்டிட்!

இவர் கூறுவது போல ஆளுநர் பதவி என்பது அநாவசியமான பதவி தானா என்பதை பார்ப்போம்.

ஒரு அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, ஒரு நபரை தேர்வு செய்ய நினைக்கும் போது அதே அலுவலகத்தில் ஏற்கனவே பணிபுரியும் ஒருவரால் அந்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்றால் ,புதிய நபருக்கான தேவை என்ன? என்று கேள்வி நமக்குள் எழும்? கண்டிப்பாக இப்படி ஒரு நிலையில் புதிய நபர் தேவையில்லை தான். அதுபோலதான் ஆளுநருக்கான பணியும் கூட.

மேலும், ஆளுநருக்கான முக்கியமான பணிகளை பார்ப்போம், அதை எப்படி ஏற்கனவே உயர் பதவியில் இருக்கும் வேறு ஒருவர் செய்து முடிக்க முடியும் என்பதையும் பார்ப்போம்.

*முதலாவதாக, மாநிலத்தில் புதிய அரசு அமையும் போது பெரும்பான்மை பெற்ற கூட்டணியோ அல்லது கட்சியோ ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது. அதனை ஏற்று பெரும்பான்மை பெற்ற கட்சியை சேர்ந்தவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர். இந்த பதவி பிரமாணம் செய்து வைக்கும் பணியை அந்த மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி செய்து வைக்க முடியும், இதற்கு எதற்கு ஆளுநர்?

*இரண்டாவதாக, சட்டமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை என்பது நடக்கிறது, இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடும் விசயங்கள் எல்லாம் ஏதோ ஆளுநர் தயாரித்து வாசிப்பது அல்ல. அந்த மாநில அமைச்சரவை தயாரித்து கொடுப்பதை அப்படியே அவர் வாசிப்பார். இப்படியான ஒரு உரையை ஏன் சபாநாயகர் நிகழ்த்த முடியாது?

அதாவது ஆளுநருக்கு பதிலாக சபாநாயகரே அந்த உரையை நிகழ்த்த முடியும். அந்த உரையை “ஆளுநர் உரை” என்பதற்கு பதிலாக “சபாநாயகர் உரை” என்று சொன்னால் என்ன தவறு?

*மூன்றாவதாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களில் ஆளுநரே வேந்தராக உள்ளார், இந்த பொறுப்பை கூட முதலமைச்சரோ அல்லது உயர் கல்வி துறை அமைச்சரோ திறம்பட செய்ய முடியும். கல்வியில் சிறந்து விளங்க கூடியவர்களை துணை வேந்தராக மாநில அரசே நியமிக்க முடியும். இதற்கு ஏன் ஆளுநர் தேவைபடுகிறார்?

சட்டமன்றம்

*நான்காவதாக, சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களை ஆளுநர் ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளிப்பது அல்லது அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது, ஒரு முறை ஒரு மசோதா நிறைவேறினால் அது அந்த மாநில சட்டமன்ற சபாநாயகர் மூலம் நேராக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும், இடையில் ஆளுநர் என்பவர் எதற்கு? ,

இந்த மசோதாக்கள் விவகாரத்தில் “ஆளுநர் மாளிகை அஞ்சலகம் போலவும், ஆளுநர் தபால் காரர் போலவும் ஏன் செயல்பட வேண்டும்?” இப்படியாக அவர் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய அரசாங்கத்தில் ஏற்கனவே கற்று தேர்ந்த நபர்கள் இருக்கும் போது ஆளுநர் என்பவரின் பணி என்ன? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், இன்று ஆளுநர் செய்யும் பணிகளை குடியரசுத் தலைவரோ, அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோ அல்லது சட்டமன்ற சபாநாயகரோ மிக சிறப்பாக செய்து முடிக்க முடியும். குறிப்பாக சொல்லவேண்டுமானால், கவர்னர் என்ற பதவியே பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் மட்டுமே இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது.

மேற்சொன்ன காரணங்களின் படி ஆளுநரின் பணிகளை வேறு ஒருவர் செய்ய முடியுமென்றால், ஆளுநர் என்ற பதவியே ஒரு மாநிலத்திற்கு தேவைப்படாது. அப்படி ஆளுநர் என்பவர் தேவையில்லாத போது அவருக்கான பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகும். மேலும், ஏறக்குறைய 150 ஏக்கரில் மாநகரின் முக்கிய இடத்தில் ஆளுநர் மாளிகை என்பதும் தேவைப்படாது அப்படி இருக்கும் பட்சத்தில், ஆளுநர் என்ற ஒரு நபர் அந்த 150 ஏக்கர் நிலத்தை பயன்படுத்துவதற்கு மாறாக அதை அரசு மருத்துவமனையாகவோ, அருங்காட்சியகமாகவோ, நூலகமாகவோ, விளையாட்டு திடலாகவோ மாற்றினால் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பயனடையுமாறு செய்யலாம்.

Indian flag

இந்தியா போன்ற கூட்டாட்சி முறையில் இயங்கக் கூடிய ஒரு ஒன்றியத்தில், மாநிலத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதி என்று ஒருவர் தேவையில்லை. அப்படி ஒரு பதவி இருப்பது என்பது கூட்டாட்சி முறைக்கு உகந்ததல்ல. கூட்டாட்சி முறையில், சனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் ஒரு நாட்டில் மக்களே எஜமானர்கள், அப்படியான எஜமானர்கள் தேர்ந்தெடுக்கும் அரசே அவர்களுக்கான அரசாக இருந்து அவர்களுக்கு பணி செய்து வழிநடத்த முடியுமே தவிர நியமனம் செய்யப்படும் ஆளுநர் அந்த மாநில மக்களை வழிநடத்த முடியாது.

மேலும், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில், கொரோனா போன்ற கொடிய தொற்று காலத்தில் மக்களை பாதுகாக்கும் மற்றும் மக்களுக்கு பதிலளிக்கும் நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசே இருக்குமே தவிர ,நியமனம் செய்யப்படும் ஆளுநர் இருக்கமாட்டார். அதனால் எந்த ஒரு சூழலிலும் மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகளே தவிர நியமன ஆளுநர் அல்ல. இப்படி எந்த ஒரு நிலையிலும் மக்களுக்கு நெருக்கமாக இல்லாத ஒரு நியமனம் செய்யப்படும் ஆளுநர் எப்படி அந்த மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் முடிவு செய்யும் இடத்தில் இருப்பார்.

மேற்சொன்ன விசயங்களை பார்க்கும் போது "ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? " என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆளுநரை பற்றி அன்றே சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. அதனால் ஆளுநரை மாற்றுவது, திரும்ப பெறுவது என்று சொல்வதால் கூட்டாட்சி முறையில் எந்த மாற்றமும் வந்து விட போவதில்லை, மாறாக ஆளுநர் பதவியே ஒழிக்கப் பட வேண்டும் என்பதே கூட்டாட்சி முறையில் சரியான மாற்றமாக இருக்க முடியும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-state-autonomy-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக