விளையாடி முடித்துவிட்டு குளிர்பானம் அருந்திய சென்னை இளைஞர் உயிரிழந்த செய்தியை டி.வியில் பார்த்தேன். உடற்பயிற்சி, விளையாட்டுக்குப் பிறகு குளிர்ந்த நீர், குளிர்பானம் குடிப்பது அவ்வளவு ஆபத்தானதா? உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் உயிரைப் பறிப்பவை என்று நினைக்கவைக்கும்படியான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறதே...
- சுஜித் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
``உடற்பயிற்சி செய்யும்போதோ, விளையாடும்போதோ உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். விளையாடத் தொடங்கும் முன்பும் வொர்க் அவுட் செய்யும் முன்பும் உடலில் போதுமான நீர்ச்சத்து உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டுக்குப் பிறகோ, வொர்க் அவுட்டுக்கு பிறகோ குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பதால் மரணம் நிகழும் என்பதற்கு எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.
கடினமான விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளுக்குப் பிறகு உடனடியாக குளிர்ந்த நீர் அல்லது குளிர்பானம் குடித்தால் அதை ஏற்று நார்மலாக உடல் சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்.
நீண்ட நேரம் விளையாடுவதாலும் உடற்பயிற்சி செய்வதாலும் நம் இதயத்துடிப்பின் ரிதம் மாற வாய்ப்புண்டு. அது அசாதாரணமாக இருப்பதை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தாமதித்தால் ரிஸ்க் அதிகம். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞருக்கு சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டு, அது உடனடியாக கவனிக்கப்படாததால் மாரடைப்பை ஏற்படுத்தி, உயிரைப் பறித்திருக்கலாம்.
புகைப்பழக்கம், தவறான உணவுப்பழக்கம், குடும்ப பின்னணியில் உடல்நல பாதிப்புகள் இருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.
விளையாடுவதாலோ, உடற்பயிற்சிகள் செய்வதாலோ ஆரோக்கிய வாழ்க்கைமுறை அவசியமில்லை என நினைக்க வேண்டாம். உடலியக்கத்தோடு ஆரோக்கியமான உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறையும் அவசியம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/why-there-is-frequent-deaths-among-people-who-do-workouts-and-involve-in-sports
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக