Ad

திங்கள், 4 ஏப்ரல், 2022

தண்டவாளத்தில் விரிசல்; சிவப்பு நிறப் புடவையைக் காட்டி எச்சரித்த மூதாட்டி - தவிர்க்கப்பட்ட விபத்து

உத்தரப்பிரதேச மாவட்டம், எட்டா மாவட்டத்தின் அவகர் தொகுதியிலுள்ள குலேரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. இந்த மூதாட்டி, வயல்களுக்கு வேலைக்குச் சென்றபோது, ​​ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசலைக் கண்டார். இதையடுத்து ரயில் ஓட்டுநரை எச்சரிக்க நினைத்த அந்த மூதாட்டி , தான் உடுத்தியிருந்த சிவப்பு நிறப் புடவையை அவிழ்த்து, தண்டவாளத்தில் இரண்டு குச்சிகளை நட்டு, அதில் அந்தப் புடவையைக் கட்டி, ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை தூரத்திலிருந்து பார்த்த ரயில் ஓட்டுநர், சற்று நேரம் போராடி ரயிலை நிறுத்திவிட்டார். அதன் பிறகு ஓட்டுநர் இந்தச் சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தண்டவாளத்தைச் சரிசெய்தனர். ரயிலில் இருந்த எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய, அந்த மூதாட்டியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் போல்சானி முரளிதர் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில், 70 வயதான ஓம்வதி என்ற மூதாட்டி, தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசலைக் கண்டு, தனது சிவப்பு நிறப் புடவையைக் காட்டி, ரயிலை நிறுத்தியிருக்கிறார். பல விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அந்த மூதாட்டியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது'' எனப் பதிவிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/india/village-woman-raises-red-saree-flag-to-avert-rail-accident-in-uttar-pradesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக