Ad

புதன், 16 மார்ச், 2022

ஆளுநர் Vs திமுக - அடுத்தடுத்த பரபரப்பு நகர்வுகள் செல்லும் பாதை எது?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளும் அரசுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்படும்போதே விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து, நீட் தேர்வு வந்தபிறகுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்த கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை உண்டாக்கியது. ''பெரியண்ணன் மனப்பான்மையோடு ஆளுநர் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது நாகலாந்து அல்ல தமிழ்நாடு'' என தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது, 'இந்தியா ஓர் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல' என கோவையில் தென் மண்டல பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேசியதற்கு கடுமையான மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது முரசொலி.

டி.ஆர்.பாலு

தவிர, நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, தமிழக அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மசோதாக்களைக் குறிப்பிட்டு, ஆளுநரின் செயல் வெட்கக் கேடானது என கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என இரண்டாவது முறையாக கோரிக்கை வைத்திருக்கிறார். ஆளும் திமுக மட்டுமல்ல, 'இந்திய ஒன்றியம் குறித்து ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக கல்வி அமைச்சர்களே பொறுப்பு வகிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே வருவது ஏன்?

திமுகவின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம்,

``அண்ணா காலத்திலிருந்தே ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்பதுதான் திமுகவின் கொள்கை. அதிலும், மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கப்படும் நேரங்களில் தீவிரமாக அந்த முழக்கத்தை முன்னெடுக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுதான் சட்டப்படி அதைச் செய்யமுடியும். ஆனால், கொள்கை ரீதியான குரலை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

சிவ ஜெயராஜ்

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருந்தாலும், அதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. 200-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக நீட் தேர்வு தேவை என்று அவர் பேசுவது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான, அவர்களை அவமானப்படுத்துவதற்குச் சமமான செயல். அதுபோன்ற கருத்துகளை அவர் திரும்பப் பெறவேண்டும். அவர் உள்நோக்கத்தோடு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டத்தைப் பாதுக்காக்க வேண்டிய அவரே அதை மீறக்கூடாது.

துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உற்றுநோக்கும்போது, ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் அலுவலகமாக மாற்றும் சூழ்நிலையை அவர் உருவாக்குகிறார் என்று தெரிகிறது. அதனால்தான், ஆளுநரே தேவையில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆளுநர் மாளிகையைக்காட்டி மிரட்டும் வேலையெல்லாம் இங்கே எடுபடாது. இவரைவிடக் கடுமையான ஆளுநர்களை எல்லாம் பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறோம். திமுகவின் வரலாறு தெரியாதவர்கள்தான் அப்படியான வேலைகளைச் செய்ய முற்படுகிறார்கள். அந்த முயற்சிகள் எங்களிடம் எடுபடாது.

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் ஐந்தாறு முறைகளுக்கு மேல் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆளுநர் மாளிகையோடு, தமிழக அரசு சுமுகமான உறவை கடைபிடிக்கவே நினைக்கிறோம். ஆனால், அவர்கள்தான் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறார்கள். அது தொடர்ந்தால், தெலங்கானாவைப் போல தமிழ்நாட்டிலும் ஆளுநரைப் புறக்கணித்துவிட்டு சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் வரும்'' என்கிறார் அவர்.

நாராயணன் திருப்பதி

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்து, பாஜகவின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``ஒருபுறம் முதல்வர் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைக்கிறார். மறுபுறம், டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் ஆளுநரைக் கடுமையாகப் பேசுகிறார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின், உத்தரவின்பேரில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட் விஷயத்தில் உண்மையிலேயே திமுகவுக்கு அக்கறை இருந்தால், இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாதங்களை ஏன் முன்வைக்கவில்லை . நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை முன்வைத்து திட்டமிட்டு திமுக அரசியல் செய்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இவர்களுடைய தவறுகளை மறைப்பதற்காக, இந்த ஆட்சியில் நடக்ககூடிய தவறுகளை தட்டிக்கேட்பதற்காக ஆளுநரைப் பற்றி இப்படிப் பேசுவது தவறு. துணைவேந்தர்கள் மாநாட்டில், இந்தியா என்கிற தேசம் குறித்து ஆளுநர் மிகத் தெளிவாகப் பேசியது இவர்களுக்குப் பிடிக்காததாலேயே இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/governor-vs-dmk-what-was-happening-in-tamilnadu-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக