Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

இந்தியாவின் எமெர்ஜென்சி காலம்… ஒரு ப்ளாஷ்பேக்! #MyVikatan 

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

1975 ஜூன் 26-ம் தேதி காலை 6 மணி.

மத்திய மந்திரி சபை கூட்டப்பட்டது. முதல் நாள் நள்ளிரவு செயலில் இருந்த அவசரநிலை தெரிவிக்கப்பட்டு அமைச்சர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதுவரை எதிர்க்கட்சி தலைவர்கள் 675 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜார்ஜ் பெர்னான்டஸ், நானாஜி தேஷ்முக், சுப்பிரமணியன் சாமி ஆகியோர் மட்டும் கைதிலிருந்து தப்பித்தனர். அடுத்த நாள் இது குறித்து தலைப்புச் செய்தி எதுவும் வராமல் இருக்க டெல்லி துணை நிலை ஆளுநர் கிஷன் சந்த் மின்சாரத்தை நிறுத்தி டெல்லியை இருளில் மூழ்கடித்தார். சண்டிகரிலிருந்து டெல்லி வந்த பத்திரிகைகள் நடுவழியிலேயே கொளுத்தப்பட்டன.

Indira Gandhi

பிரதமர் இந்திரா காந்தி, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டவுடன் காலையில் அகில இந்திய வானொலி நிலையத்துக்குச் சென்றார். ``ஜனாதிபதி அவசர நிலையை அறிவித்துள்ளார். ஆனால், கலவரப்பட ஏதுமில்லை" என்றார்.

உள்நாட்டு குழப்பங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.1977 மார்ச் வரை சுமார் 19 மாதங்கள் நீடித்தது.

இந்திராவின் எழுச்சி

லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் பிரதமருக்கான போட்டியில் மொரார்ஜி தேசாயும் இந்திரா காந்தியும் இருந்தனர்.1966-ல் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராவுக்கு ஆதரவாக 355 பேரும், தேசாய்க்கு 169 பேரும் ஆதரவளித்தனர். பின் கட்சியில் கோஷ்டிப் பூசலால் அதிகாரப் போராட்டத்தை எதிர்கொண்டார். 1967-ல் நடைபெற்ற தேர்தலில் ரேபரேலியில் வென்றார்.1969-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ் பிளவுபட காரணமாய் இருந்தது. இந்திரா காங்கிரஸ் (ஆர்) என்றும் ஸ்தாபன காங்கிரஸ் (ஓ) என்றும் இருவேறு கட்சிகளாயின.

பஞ்சாப் பிரிவினை மீண்டும் ஆரம்பித்தது. இந்திரா துணிவுடன் சீக்கியர் பெரும்பான்மையினர் இருந்த பகுதி பஞ்சாப் மாநிலமாகவும், இந்துக்கள் பெரும்பான்மையினர் உள்ளதை ஹரியானாவாகவும் பிரித்தார்.

அதனைத் தொடர்ந்து வங்கிகளை தேசியமயமாக்கம் செய்தார். மன்னர் மானிய ஒழிப்பு விவகாரத்தில் சட்ட நெருக்கடி ஏற்பட்டதால் மக்களவை கலைந்து 1972-ல் நடைபெற வேண்டிய தேர்தல் முன் கூட்டியே 1971-ல் நடைபெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி பெற்றார்.

1971-ல் பங்களாதேஷ் பிரச்னையைக் கையில் எடுத்ததன் மூலம் பாகிஸ்தான் போரை சிம்லா ஒப்பந்தம் மூலம் வெற்றிகரமாகக் கையாண்டார்.

1974 மே 18-ல் பொக்ரான் அணுகுண்டு வெடிப்புச் சோதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்காட்டினார்.

வீழ்ச்சி

பொருளாதார வீழ்ச்சியால் விலைவாசி உயர்ந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாகின. இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி மாருதிகார் தயாரிக்கும் திட்டத்திற்கு ராணுவ தளத்தைப் பயன்படுத்தினார் என்றும், வங்கியில் பணம் பெற்றதாகவும் எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்தனர். அமைதியின்மையும் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தபோது குஜராத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களால் துவக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் விரிவடைந்து. மக்கள் இயக்கமாக `நவ நிர்மாண் இயக்கம்' மாறியது.

போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் இன்னும் கலவரம் அதிகமானது.

1974-ல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைக்காக ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் இறங்கினர். ஜார்ஜ் பெர்னான்டஸ் ரயில்வே ஊழியர் சங்கத் தலைவராய் இருந்து ஒருங்கிணைத்தார். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதில் ரயில்வே ஸ்தம்பித்தது. மிசா சட்டத்தில் 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். பலர் வேலை இழந்தனர்.

1974 ஜூன் மாதத்தில் பீகாரில் விலைவாசி உயர்வு, பஞ்சம், வேலையின்மையைக் கண்டித்து முழுப்புரட்சி நடைபெற்றது. ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். போராட்டங்கள் நாடு முழுதும் கவனம் ஈர்த்தது. இந்திராவின் அரசுக்கு நெருக்கடி அதிகமாகியது.

நாடெங்கிலும் போராட்டம் நடைபெற்றபோது 1971 நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது எனக்கூறி அவரிடம் தோல்வியடைந்த சோஷலிஸ்ட் ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்தது.1975 மார்ச் 19-ல் அந்த வழக்கில் இந்திராகாந்தி சாட்சி கூறினார். நீதிபதி சின்ஹா இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவித்தார். மூன்று வாரங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனத் தீர்ப்பளித்தார்.

ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வி.ஆர்.கிருஷ்ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ராஜ் நாராயணன் சார்பில் சாந்தி பூஷணும், இந்திரா சார்பில் நானி பல்கிவாலாவும் ஆஜராகினர். தீர்ப்பில் ``1971 தேர்தல் வெற்றி செல்லுமா, செல்லாதா என்பது குறித்த விசாரணை பின்னர் நடைபெறும். அதுவரை பிரதமர் பதவி வகிக்கலாம். ஆனால் தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை மட்டும் கிடையாதென தீர்ப்பளித்தார். 6 மாதங்கள் வரை பிரதமராக இருக்கலாம் என 75(5) பிரிவைத் தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார். ஜேபியும் தேசாயும் பிரதமர் பதவி விலக வேண்டுமென்ற போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

Morarji Desai

நிலைமை தீவிரமானதால் உள்நாட்டுப் பிரச்சனை ஏற்படும்போது அவசரநிலை அறிவிக்கலாம் எனும் 352 விதியை சுட்டிக்காட்டி சித்தார்த் சங்கர் ரே தெரிவித்தார். உடனே அவசர நிலை வரைவை பி.என்.ஆர் தயாரிக்க ஆர்.கே.தவான் அன்றிரவே ஜனாதிபதி ஃபக்ருதின் அலி அகமது கையெழுத்திட்டார். சஞ்சய்காந்தி, ஹரியான முதல்வர் பன்சிலால் மற்றும் ஓம் மேத்தா ஆகியோரிடம் மட்டுமே இரவு ஆலோசனை நடத்தி மறுநாள் காலை மற்றவர்க்கு அறிவித்தார் இந்திரா காந்தி.

அவசர நிலை பிரகடனம்

ஜேபியும் தேசாயும் ஹரியானா மாநில சோனாடாக் மாளிகையில் தனித்தனி அறையில் தங்கவைக்கப் பட்டனர். Maintenance of internal security act (MISA) சட்டம் மூலம் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனை Maintenance of Indira sanjay act என கேலி செய்தனர். ``என் தந்தையின் நூல்கள் சிறையில் எழுதப்பட்டன. முன்னேறத் துடிக்கும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, முன்னேறத் துடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் நான் சிறை வாழ்க்கையைப் பரிந்துரைக்கிறேன்" எனும் இந்திராவின் கூற்று உண்மையானது.

1975 ஜூன் 26-ல் தணிக்கைக்குப் பின்பே பத்திரிகை அச்சாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்தச் செய்தியும் இல்லாமல் சில பத்திரிகைகள் காலியாகவே வெளிவந்தன. நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா மற்றும் கேள்வி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.கே.ஜி., சோம்நாத்சட்டர்ஜி, திமுகவின் செழியன் போன்றோர் கடுமையாக எதிர்ப்புப் பேசினர். தணிக்கை காரணமாக எந்த பத்திரிகையிலும் செய்தி வரவில்லை. குல்தீப் நய்யார், கே.ஆர்.சுந்தர்ராஜன் போன்ற பத்திரிகையாசிரியர்கள் கைதாகினர். இந்திரா 20 அம்சத்திட்டம் அறிவித்தார். சஞ்சய் காந்தியின் 5 அம்சத்திட்டத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலானதும் இக்காலத்தில்தான்.

Indira Gandhi and Sanjay Gandhi

1976-ல் அகமதாபாத்தில் வல்லபாய் படேலின் மகள் மனிபென் படேல் அவசரநிலை அகற்றும் சத்யாகிரகத்தை வழி நடத்தினார்.

பலர் பதவி விலகினர். பங்களாதேஷில் முஜிபுர் ரகுமான் குடும்பத்துடன் அப்போது கொலை செய்யப்பட்டது அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார் இந்திரா. தொடர்ந்து எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் 1977 ஜனவரி 18 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திரா, சஞ்சய் காந்தி தோல்வியடைந்து ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. இந்திராவின் செல்வாக்கு சரிந்தது.

மறக்க முடியாத காலம்

இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகிப் போன நிகழ்வு நடந்தது ஜூன் 25. தற்போது அது நிகழ்ந்து 45-ம் ஆண்டில் காலடி வைக்கிறோம். தமிழகத்தில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

காமராஜர் திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தார். அப்போது தமிழகத்தில் கொந்தளிப்பான காலகட்டம் அது.

இந்தியாவில் எம்ஜிஆரின் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட்டும் மட்டும் அவசரநிலையை ஆதரித்த இரு கட்சிகள். தேர்தலுக்குப் பின் அடுத்து வந்த ஜனதா அரசு நெருக்கடி கால சட்ட சீர்திருத்தங்களைத் திரும்பப் பெற்றது. வானொலி, தூர்தர்ஷன் சுதந்திரமாக செயல்பட வர்க்கீஸ் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையின் மீது பிரசார் பாரதி மசோதா அறிமுகமானது. மிசா சட்டம் 1978-ல் நீக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக்கு வேலை திரும்ப அளிக்கப்பட்டது. ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரித்தது. தமிழகத்தில் இஸ்மாயில் கமிஷன் எமர்ஜென்சி கொடுமைகளை விசாரித்தது. இன்றளவும் அவசரநிலை குறித்து பேசாதவர்களே இருக்க முடியாது என பேசும்படி இருந்தது.

Jawaharlal Nehru

``ஜனநாயகம் என்றால் அது ஒரு சகிப்புத் தன்மை. நமக்கு இணங்கிப் போவோருடன் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, நம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் கூட சகித்துக் கொண்டு போதலே ஜனநாயகம்" எனும் நேருவின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/government-and-politics/news/1975-emergency-a-historical-rewind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக