சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னார்வலர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், இருமல் இருக்கிறதா என ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு ரிப்போர்ட் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு வந்த வடசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஒருவர் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில்,
இன்ஜினீயர்: நான் சொல்லி விட்டேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் என்ன பண்ணணும்?
மாணவி: நான் என்ன பண்ண வேண்டும் என்றால் புரியவில்லை சார்.
இன்ஜினீயர்: டிக்டாக் பண்ணுகிறாய், காலேஜ் படிக்கிற... எனக்கு உன்னைப் பிடிக்கும் என்று சொல்லிட்டேன். அதன்பிறகு என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்றது.
மாணவி: என்னை எல்லோருக்கும் பிடிக்கும் சார்.
இன்ஜினீயர்: எனக்கு உன்னைப் பிடிப்பது வித்தியாசம்தானே?
மாணவி: இது என்ன வித்தியாசம் சார்... என்னை ஆபீஸ்ல எல்லாருக்கும் பிடிக்கும் சார்.
இன்ஜினீயர்: உன்னை எனக்குப் பிடிக்கும்.
மாணவி: (சிரித்தப்படி) அப்படின்னா...
இன்ஜினீயர்: என்னை உனக்குப் பிடிக்க வைக்க நான் என்ன பண்ண வேண்டும்?
மாணவி: அதற்கு என்ன பண்ண வேண்டும் என்றால் தெரியல சார். எனக்கு என்ன பண்ண வேண்டும் என்றால், என்ன பண்ணணும் சார்?
இன்ஜினீயர்: நான் கல்யாணம் பண்ணுவதற்கு முன் நீ வந்திருக்க வேண்டியதானே?
மாணவி: நீங்க என்ன சொல்றீங்க?
இன்ஜினீயர்: 2 வருஷத்துக்கு முன் வந்திருக்கலாமே. நான் மேரேஜ் பண்ணுவதற்கு முன்னாடி நீ வந்திருக்கணும்.
மாணவி: நீங்க சொன்னது எனக்கு கேட்டுவிட்டது.
இன்ஜினீயர்: நான் என்ன சொன்னேன்?
மாணவி: நீங்க மேரேஜிக்கு முன்னாடி...
இன்ஜினீயர்: என்னது?
மாணவி: ஏன் சார் இப்படி போன் செய்து கலாய்க்கிறீங்க?
இன்ஜினீயர்: உன்னை எனக்கு அந்தளவுக்கு பிடிக்கும். அதனால்தான் என்னுடைய உயரதிகாரிகளிடம் பேசி உன்னை இங்கு வேலைக்கு வச்சேன்.
மாணவி: ம்...
இன்ஜினீயர்: என்னுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மாணவி: தெரியாது சார்... சொல்லுங்க.
இன்ஜினீயர்: ஒரு மாதத்துக்கு 78,000 ரூபாய். அப்படின்னா நீ எப்படி இருப்ப.
மாணவி: (அமைதியாக இருக்கிறார்)
இன்ஜினீயர்: நான் சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ரேஞ்ச்.
மாணவி: வீட்ல எல்லோரும் இருக்காங்க என்று இணைப்பை துண்டிக்கிறார்.
Also Read: `காதல் திருமணத்துக்கு உதவி..மிரட்டல் ஆடியோ!' -இளைஞர் கொலையில் தலைமறைவான அ.தி.மு.க புள்ளி?
சம்பந்தப்பட்ட மாணவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் செல்போன் ஆடியோவுடன் புகாரளித்துள்ளார். இதையடுத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி ஆடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்ற மகளிர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆடியோவில் பேசும் உதவி இன்ஜினீயர், கல்லூரி மாணவி ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட உதவி இன்ஜினீயரை செல்போனில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் எனப் பதில் வந்தது. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக இருக்கிறோம்.
இந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியதால் மாநகராட்சி முழுவதும் இந்த ஆடியோ குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
source https://www.vikatan.com/news/crime/college-student-files-complaint-against-chennai-corporation-assistant-engineer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக