முன்னொரு காலத்தில் பொழுதுபோக்குக்காக விளையாடப்பட்ட சீட்டாட்டங்கள், சேவல் சண்டைகள் உள்ளிட்ட சில விளையாட்டுக்கள், காலப்போக்கில் பணம் வைத்து சூதாட்டமாக விளையாடப்பட்டன. இதனால் சண்டை சச்சரவுகளும் ஏற்படத் தொடங்கின. இந்த சண்டைகளில் சில உயிர் பலிகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக சூதாட்டங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இன்று ஆன்லைன் வாயிலாக இந்தியாவையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது இந்த சூதாட்டங்கள்தான். ஆம்! அன்று சூதாட்டச் சண்டைகள் மூலம் கொலைகள் செய்யப்பட்டன. இன்று ஆன்லைன் கேமிங் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடன் தொல்லை காரணமாகத் தற்கொலைகள் பெருகிவருகின்றன.
இந்தியாவில் சூதாடினால், சூதாட்ட பொதுச் சட்டம் 1867-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சிக்கிம், கோவா, டாமன் (யூனியன் பிரதேசம்) ஆகிய இந்திய மாநிலங்களில் மட்டும் சூதாட்டத்துக்குத் தடை இல்லை. அங்கு அதிகளவில் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு சூதாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த 3 மாநிலங்களைத் தவிர தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களில் உள்ள புரோக்கர்கள் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூதாட்டத்தில் இந்தியாவின் பெரும் புள்ளிகளும் ஈடுப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு இந்தியாவின் சில மாநிலங்களில் தடையில்லை. தமிழகம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடையுள்ளது. அதேபோல 'தமிழக விளையாட்டுச் சட்ட'த்தின் கீழ் பணம் வைத்துச் சீட்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பணம் வைத்துச் சீட்டாடுவது எங்கு நடந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்யவேண்டும் என்கிறது சட்டம். ஆனால், ஆன்லைனில் பணம் செலுத்தி ரம்மி ஆடும் எவர்மீதும் சட்டம் பாய்வதில்லை.
கடந்த ஜூலை 24-ம் தேதியன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு விசாரணைக்கு வந்தது. நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர், “ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனியார் தோட்டத்தில் நானும் என் நண்பர்களும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கூடங்குளம் போலீசார் என் மீதும் என் நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பொது இடத்தில் சீட்டு விளையாடினால்தான் குற்றம். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எவ்வாறு ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகின்றன?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏஸ்2த்ரீ, போக்கர்டங்கல், பாக்கெட் 52 போன்ற இணைய விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்கள் இணையதளங்களில் அதிகளவு தோன்றுகின்றன. வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும், அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் இது கெடுக்கிறது. இது சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி படித்த இளைஞர்களின் பணமும் இந்த விளையாட்டால் பறிபோகிறது." என்று கூறியிருந்தார்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதி வலியுறுத்திய நான்கே நாள்களில், அதாவது கடந்த திங்கட்கிழமை (ஜூலை 28) அன்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்ட காரணத்தால், சென்னையைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். 'கேஸ்டோ க்ளப்' என்ற ஆன்லைன் சூதாட்ட ஆப் மூலம், பகுதிநேர வேலை பார்த்துத் தான் சேமித்து வைத்திருந்த, 20,000 ரூபாய் பணத்தை இழந்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் அந்த இளைஞர்.
இது சூதாட்டம் காரணமாக நிகழும் முதல் மரணமில்லை. இதற்கு முன்பாக எத்தனையோ பேர் இந்த ஆன்லைன் கேமிங் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்து கடன் சுமை தாங்காமல் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் பறிபோவது பணம் மட்டுமல்ல அப்பாவி மக்களின் உயிர்களும்தான்!
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக ஏற்பட்ட சில தற்கொலை சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. காரணம், அந்தச் சம்பவங்களில் சூதாடியவர் மட்டுமல்லாமல் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்த கடலூரைச் சேர்ந்த ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்துவிட்டார். அதனால் அந்தப் பொறியாளரும் பொறியாளரின் தாயும் விஷம் குடித்து உயிரிழந்தனர். இத்தனைக்கும் அந்தப் பொறியாளரின் மாதச் சம்பளமே 1 லட்சம் ரூபாயாம். சம்பளம் அனைத்தையும் சூதாடித் தோற்றதால் வட்டிக்குப் பணம் வாங்கி சூதாடியிருக்கிறார். இதன் கரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் தாய், மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்திவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மற்றொரு சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் தன் சொத்தை இழந்து, பின்னர் கடன் வாங்கிய பணம் மொத்தத்தையும் இழந்து தற்கொலை முடிவுக்கு வந்தார். கடன் சுமை தாங்காமல் தான் விஷம் அருந்தியது மட்டுமல்லாமல் தன் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். ஆனால், மூவரும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.
`ஆன்லைன் சூதாட்டம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்பதைத்தான் மேற்கண்ட சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வரும் காலத்தில் கடன் தொல்லை என்று உயிரிழப்பவர்களில், பலரும் இந்த ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆன்லைன் சூதாட்டத்தில் எப்படிச் சிக்குகிறார்கள்?
'ரம்மி விளையாடுங்க... பணம் வெல்லுங்க' என்று திரும்பும் பக்கமெல்லாம் பிரபலங்களின் புகைப்படத்தோடு நமக்கான என்ட்ரி டிக்கெட் காத்துக் கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக் தொடங்கி கிட்டதட்ட எல்லா இணையதளங்களிலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்தான் இருக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் பிரபலங்களைக் கொண்டு இந்த சூதாட்டங்களுக்கு விளம்பரம் செய்யப்படுகிறது. விளம்பரங்களைத் தாண்டி நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்து சமூகப் பரலாக மாறி பலரிடமும் இந்த விளையாட்டு போய்ச் சேர்ந்திருக்கிறது.
வெறும் விளம்பரங்கள் மூலம் மட்டும் நம் மக்கள் பணத்தை ஏமாந்துவிட மாட்டார்கள். குடும்பங்களோடு சேர்ந்து எங்கு சென்றாலும் பொழுதுபோக்குக்காக நாம் விளையாடும் விளையாட்டுகளுள் சீட்டுக்கட்டுக்கும் பிரதான இடமுண்டு. இப்போது குடும்பங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், சீட்டுகட்டாடும் பழக்கங்களும் குறைந்திருக்கும். எனவே, இதனை ஆன்லைன் மூலம் விளையாடிப் பார்க்கலாம் என்ற எண்ணம் இந்த விளம்பரங்களைப் பார்க்கும்போது நம்மவர்களுள் பலருக்கும் வந்துவிடுகிறது.
பெரும்பாலான ஆன்லைன் ரம்மி தளங்களில் இலவசமாக விளையாடும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த இலவசப் போட்டிகளில் ஆடினாலும் நீங்கள் பணம் வெல்ல முடியும். எனவே, முதன்முதலாக இந்த விளையாட்டுக்குள் நுழையும் ஒருவருக்கு, `நாம் என்ன காசு கட்டியா விளையாடப் போறோம், இலவசமாகத்தானே விளையாடுறோம், அதனால ஒண்ணுமில்லை' என்ற எண்ணத்தோடுதான் உள்ளே நுழைகிறார்கள். இலவசமாக விளையாடுபவர்களுக்கு, விளையாடத் தொடங்கிய சில நாள்களிலேயே 200 முதல் 500 ரூபாய் வரை கிடைக்கின்றன. காசை கண்ணில் பார்த்துவிட்டதால் நம்மவர்கள் இந்த விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறார்கள்.
Also Read: ரம்மி விளம்பரம்: பிரகாஷ் ராஜ் , ராணாவுக்கு எதிராக மனுத்தாக்கல்
பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் காசும் கிடைத்துவிடுவதால், ஒரு நாளின் பாதியை இந்த ஆன்லைன் ரம்மிக்கே கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் தூங்காமல் வேலைக்கே செல்லாமல் 24 மணிநேரத்தை இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் செலவிடுகிறார்கள். எனவே, முதற் கட்டத்திலேயே நேரத்தை நம் இடத்திலிருந்து எளிதாக எடுத்துக் கொள்கிறது இந்த விளையாட்டு.
அடுத்த கட்டத்தில் நம்மவர்களுக்குத் தோன்றுவது `இதில் ஜெயித்த பணம்தானே, அதனால் அதை மட்டும் வைத்து விளையாடுவோம்' என்று முதல் கட்டத்தில் இலவசமாக விளையாடி ஜெயித்த பணத்தை, அந்த விளையாட்டிலேயே போட்டுத் தோற்றுவிடுகிறார்கள். மூன்றாம் கட்டத்தில், `விட்டதைப் பிடித்துவிட வேண்டும்' என்று தங்கள் கைக்காசை போட்டு அதையும் தோற்றுவிடுகிறார்கள். முதல் கட்டத்தில் நேரத்தைத் தொலைத்தவர்கள் மூன்றாம் கட்டத்தில் தாங்கள் சம்பாதித்த பணத்தையும் தொலைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த மூன்று கட்டங்களே அந்த விளையாட்டுக்கு ஒருவர் அடிமையாவதற்குப் போதுமானதாக இருக்கிறது. அதன்பின், தங்களிடம் இருக்கும் சேமிப்பை வைத்து ஆடுவது. பணம் இல்லை என்றால் கடன் வாங்கி விளையாடுவது என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி ஒருவரை நகர்த்திச் செல்கிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்.
வெகுசிலர் மட்டுமே முதல் இரண்டு கட்டங்களிலேயே விழித்துக் கொண்டு இந்த விளையாட்டிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள்.
சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு, பணத்தை இழந்தவர்கள் அனைவருமே அந்த கம்பெனியை திட்டித் தீர்ப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலானோர் இதில் எவ்வளவு பணத்தை இழந்திருந்தாலும் அந்த விளையாட்டைப் பற்றி அடுத்தவரிடம் குறை கூறுவதே இல்லை. மாறாக அதைப் பற்றிப் பெருமையாகக் கூறி நண்பர்கள் சிலரையும் அதில் விளையாட வைக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்த விளையாட்டின் மீதான போதையாக இருக்கலாம்.
தமிழ்நாடு உள்படப் பல மாநிலங்களில் உள்ள சமூக நல ஆர்வலர்களும் சில மாநில அரசுகளுமே இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சில வழக்குகளில் தடை செய்ய உத்தரவிட்டபோதிலும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்து தடையை ரத்து செய்துவிட்டன.
2015-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின் வருமாறு...
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டுதான் இந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டில் நம் எதிராளி யாரென்றே நமக்குத் தெரியாது. விளையாட ஆரம்பித்தபோது சுலபமாகப் பணம் ஜெயிக்க முடிகிறது. ஆனால், நாள்கள் போகப்போக ஜெயிப்பது கடினமாகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது நம்முடைய எதிராளி கணினியாகக்கூட இருக்கலாம். நமக்குத் தேவையான சீட்டுகள் வராமல் பார்த்துக் கொள்வது இந்தக் கணினியின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்தச் சூதாட்ட நிறுவனங்களைப் பற்றிப் பேசும்போது, "ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்'' என்ற `சதுரங்க வேட்டை' படத்தின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நம்மவர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
ஆன்லைன் சூதாட்டம் என்றால் வெறும் ரம்மியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ரம்மியைத் தவிர பல்வேறு விளையாட்டுகளிலும் இந்த ஆன்லைன் சூதாட்டமானது நடைபெற்று வருகிறது. இவை அனைத்துமே 'பணம் செலுத்தினால்... பணம் வெல்லலாம்' என்பது போன்ற விளையாட்டுகள்தான். போக்கர், ஷுட்டிங், ஃபைட்டிங் என பல்வேறு விளையாட்டுகளிலும் இந்த ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் ரம்மியில் குவியும் அளவுக்கான பணம் இதில் வருவதில்லை என்ற காரணத்தினால் இதுகுறித்து அதிகம் விவாதிக்கப்படவில்லையென்றாலும், எதிர்காலத்தில் இந்த விளையாட்டுகளும் ரம்மியை போல விஸ்வரூபம் எடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் கிரிக்கெட்டைக் கொண்டாடுபவர்கள்தான் இந்தியாவில் அதிகம். கிரிக்கெட் பெட்டிங், அதாவது எந்த அணி ஜெயிக்கும், எந்த வீரர் செஞ்சுரி அடிப்பார் என்பது போன்று பெட் கட்டுவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைனில் 'ட்ரீம் 11', 'ஃபேன்டஸி பவர் 11', 'மை 11 சர்க்கிள்' உள்ளிட்ட ஆப்கள் மூலம் இதே வகையான சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆப்களில், நமக்கான 11 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் சிலரை முக்கிய வீரர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நாம் தேர்ந்தெடுத்த வீரர்கள் நன்றாக விளையாடினால் நமக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும். அதிலும் நாம் முக்கிய வீரர்களாகத் தேர்ந்தெடுத்தவர்கள் நன்றாக விளையாடினால் நமக்கான பாயிண்ட்ஸ் டபுளாகக் கிடைக்கும். இந்த விளையாட்டிலும் பணம் கட்டித்தான் விளையாடுகிறார்கள். பாயிண்ட்களின் அடிப்படையில் நமக்கான பணம் திரும்பிக் கிடைக்கிறது.
இதுபோன்ற ஆப்களில் கிரிக்கெட் மட்டுமல்லாமல், ப்ரோ கபடி, கூடைப் பந்து, ஃபுட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் நாம் அணியைத் தேர்வு செய்து விளையாடலாம்.
Also Read: 26 வயதினிலே... சச்சினுக்கும் கோலிக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா? #MotherOfCoincidencesInCricket
இந்த கிரிக்கெட் சூதாட்ட ஆப் விளம்பரங்களுக்குப் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களே விளம்பரங்களில் தோன்றுவதால், கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானோர் இந்த ஆப்களை டவுன்லோட் செய்துவிடுகிறார்கள்.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது இந்தியாவில் இந்த கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்ட ஆப் நிறுவனங்களில் அதிகம் பணம் புரளுகின்றன. கிரிக்கெட் போட்டிகளின் போது மட்டுமே இந்த ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாலும், இதில் டீமை தேர்ந்தெடுப்பது மட்டுமே விளையாட்டாக இருப்பதாலும் இதற்கு அடிமையாகிவிடுபவர்கள் மிக மிகக் குறைவு. இருந்தாலும் நம்மவர்கள், இதிலும் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஒரு தொகையை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்தியாவில் கடந்த 2018-ம் நிதியாண்டில், ஆன்லைன் கேமிங் மூலம் மட்டும் 4,380 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது சர்வதேச நிறுவனமான 'KPMG'. 'RGM' என்று குறிப்பிடப்படும் 'ரியல் மணி கேமிங்', அதாவது, வெறும் பாயிண்டகளாக மட்டுமல்லாமல் பாயிண்ட்டுகள் மூலம் நிஜப் பணத்தை வெல்லக் கூடிய விளையாட்டுகளுள், ரம்மி விளையாட்டு மூலம்தான் அதிக வருவாய் கிடைக்கிறது. அதற்கடுத்த படியாகப் போக்கர், ஃபேன்டஸி கேம்ஸ் உள்ளிட்ட கேம்கள் மூலம் அதிகப்படியான வருமானம் கிடைக்கிறது. இந்த ரியல் மணி கேமிங் மூலம்தான் இந்தியாவில் கிடைக்கப்பெறும் ஆன்லைன் கேமிங் வருமானத்தில் பாதிக்கும் அதிகமான பணம் கிடைக்கிறது என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
'தி ரம்மி ஃபெடரேஷன்' (TRF) என்கிற அமைப்புதான் இந்தியாவில் உள்ள ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை முறைப்படுத்துகிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்ட செய்தியில், ''ஆன்லைன் ரம்மி மூலம் ஆண்டுக்கு 2,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் மொத்தம் 5.5 கோடி பேர் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வருகின்றனர். அதில் 30 லட்சம் பேர் தினமும் தவறாமல் விளையாடக்கூடியவர்கள்'' என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவில் டிஜிட்டல் முறைகளில் ஈட்டப்படும் ஆண்டு வருவாயின் வளர்ச்சி விகிதத்தை வைத்துப் பார்த்தால் ஆன்லைன் கேமிங்தான் ஆண்டுக்கு 35 சதவிகித வணிக வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் உள்ளது என்கிறது லண்டனைச் சேர்ந்த 'Ernst & Young' நிறுவனம். அடுத்த இடத்தில் டிஜிட்டல் மீடியா (ஓடிடி தளங்களும் டிஜிட்டல் மீடியாவில் அடங்கும்) 28 சதவிகித வளர்ச்சியோடு இரண்டாமிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் (17%), இசை நிறுவனங்கள் (11%), சினிமா (11%), தொலைக்காட்சி (9%) ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன என்றும் 'Ernst & Young' நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேற்கண்ட புள்ளி விவரங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது டிஜிட்டல் இந்தியாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பது ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்தான் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கின்றன என்பதும் விளங்குகிறது.
`துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்' என்பதுதான் இந்தத் திருக்குறளின் பொருள்.
இந்தத் திருக்குறளானது இன்றைய ஆன்லைன் கேமிங் சூதாட்டத்துக்கும் அப்படியே பொருந்துகிறது. சேமிப்பு முழுவதையும் இழந்த பிறகும் கடன் பெற்றுச் சூதாடுவது திருவள்ளுவர் காலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட சூதாட்டமானது காலத்துக்கேற்ப பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும் மனித குலத்துக்குப் பெருந்துயரமாகவே இருந்துள்ளது.
இந்த லாக்டெளனில் ஆன்லைன் கேமிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். வரும் நாள்களில் இதன் விளைவு இன்னும் மோசமானதாகவே இருக்கும். அப்பாவி மக்களின் பணத்தையும் உயிரையும் குடிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை இந்தியா முழுவதும் தடை செய்யவேண்டும். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆன்லைன் கேமிங் சூதாட்டத்தைத் தடை செய்யக் கோரி அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கடுமையாக வலியுறுத்த வேண்டும்.
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களை நாட்டின் பாதுகாப்பு கருதி தடை செய்த மத்திய அரசு, நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட ஆப்களையும் தடை செய்தே ஆக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
source https://www.vikatan.com/oddities/online-market/what-is-happening-around-in-real-money-games-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக