தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ துணை கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், காவல்துறையினர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸார் என விசாரணை விரிவடைந்து வேகம் பிடித்தது.
சிபிஐ விசாரணை துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், சிபிஐ குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஏற்கெனவே இருந்த தண்டுவடப் பிரச்னை தீவிரமடைந்து, அவரது இடது கை செயல் இழந்தது. அதனால் சிறைக்குள் அவர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற அனுமதியுடன் அவருக்கு கட்டில் கொடுப்பது குறித்து சிறைத்துறையினர் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Also Read: சாத்தான்குளம்: `போலீஸுடன் ஏற்பட்ட பிரச்னையில் சிறையிலைடப்பு; மரணம்!’ - தமிழக அரசு
சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறப்பு எஸ்.ஐ-யான பால்துரைக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் சில காவலர்களுக்கும் காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் காவலர்களான முத்துராஜ், முருகன், ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை கைதிகளாக இருப்போருக்கும் கொரோனா உறுதியாகியிருப்பதால் விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/two-more-police-men-arrested-in-sathankulam-case-tested-corona-positive
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக