Ad

புதன், 29 ஜூலை, 2020

தேங்காப்பட்டணம்: `அலையில் சிக்கும் படகுகள்!’ - மீனவர்களின் உயிரை காவு வாங்கும் மணல் மேடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம். சுமார் 97.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் துறைமுகத்தின் முக துவாரத்தில் மணல் மேடு நிரம்பியுள்ளதால் துறைமுகத்துக்குள்ளேயே அலை அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் துறைமுகத்தில் கவிழ்ந்து விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. முள்ளூர் துறையைச் சேர்ந்த அந்தோணி (68) என்ற மீனவர் கடந்த 23-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அவர் மகனுடன் பைபர் படகில் மீன் பிடிப்பதற்காகத் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். அப்போது மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மீனவர் அந்தோணி (68) கடலுக்குள் மூழ்கி மாயமானார். அவர் மகன் நீந்தி கரை கரைசேர்ந்தார்.

மாயமான மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

அதுபோன்று கடந்த 24-ம் தேதி அதிகாலை மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த சிபு, அபுசெப்தாசன் (40), ஜான்பால் (42), செல்வேந்திரன் மகன் ஜார்ஜ் (40), புஷ்பணாயகம் மகன் ஜஸ்டின் (25), ஆகியோர் நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அன்று மாலை 5 மணி அளவில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில் நுழைந்தபோது அலையில் சிக்கி மீனவர்களின் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதில் ஐந்து மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் சிபு (25) என்ற மீனவர் படுகாயங்களுடன் கடலுக்குள் மூழ்கினார். மற்ற நான்கு மீனவர்களும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை அவ்வழியாக வந்த பிற மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகளில் மீட்டு கரை சேர்த்தனர். மாயமான இரண்டு மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் கிடைத்துள்ளது. மற்றொருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட மணல்மேடுகளே காரணம் என்றும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில், "தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் மணல் மேடுகள் தேங்கி உள்ளன. மணல் மேடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக நிர்வாகம், மாவட்ட மீன்வளத்துறை நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இரண்டு மீனவர்களின் இழப்பிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

Also Read: `கப்பலில் காலியாக இருந்த 90 பெட்டுகள்' -குமரி மீனவர் தகவலால் வெடிக்கும் இரான் சம்பவம்

இதுசம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மீனவர்களின் இறப்பினால் அந்த குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில்

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் ஆற்றில் வரும் தண்ணீரின் வேகம் குறையும். தண்ணீர் வேகம் குறைந்தால் மீன்பிடித் துறைமுகத்தில் தேங்கியுள்ள மணல் மேடுகள் அடித்துச் செல்லப்படாமல் தேங்கிவிடும். எனவே, தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உயிர்பலி வாங்கும் மணல் மேடுகளை அகற்ற வேண்டும். மேலும், மணல் மேடுகள் உருவாகாமல் இருக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tenkapattanam-fishing-harbor-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக