Ad

புதன், 29 ஜூலை, 2020

OBC இட ஒதுக்கீடு: `தி.மு.க துரோகம் இழைத்துவிட்டது!' பா.ம.க-வின் குற்றச்சாட்டு சரிதானா?

மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ``மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. மருத்துவப் படிப்பில், ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இட ஒதுக்கீடு கோர ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. வழங்க எந்த தடையும் இல்லை'' என்கிற அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ராமதாஸ், ஸ்டாலின்

மேலும், ``குறைந்தபட்ச கல்வித் தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மத்திய அரசு 3 மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும்'' என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் 27 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு, முதன்முதலில் உச்சநீதிமன்றம் சென்ற பா.ம.க, இந்தத் தீர்ப்பால் மேலும் தேவையற்ற காலதாமதம்தான் உருவாகும் என மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டத்தின்படியே அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க முடியும். அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடியும். சட்டரீதியிலான இந்த உண்மை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும் என்பதால்தான் அந்தக் கோரிக்கையுடன் முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னர் உயர்நீதிமன்றத்தையும் அணுகியது. தமிழக அரசும், பிற கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தால், ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி உடனடியாக 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அந்த இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், இப்போது தமிழக அரசும், பிற கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததால் இட ஒதுக்கீடு கிடைப்பது குறைந்தது 3 மாதங்களாவது தாமதம் ஆகும். அவ்வாறின்றி உடனடியாக இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்'' என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் செந்தில்

பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருபடி மேலே போய், ``தங்களின் அரசியல் நலனுக்காக தி.மு.க 50 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு வழக்குத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது'' என மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், பா.ம.க முன்னாள் எம்.பியும், மருத்துவருமான செந்திலிடம், எதன் அடிப்படையில், பா.ம.க இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது எனக் கேட்டோம்,

``இந்தத் தீர்ப்பை, வழக்கறிஞர் வில்சனும், திமுக தலைவர் ஸ்டாலினும் கொண்டாடுகிறார்கள். அது சற்று வருத்தத்தைத்தான் தருகிறது. வில்சன் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டுவிட்டார் என்றே சொல்லுவேன். உயர்நீதிமன்றம் தற்போது வழங்கியிருக்கிற தீர்ப்பை வரவேற்கலாம் ஆனால் கொண்டாடமுடியாது. 50 சதவிகிதம் கேட்டதால்தான் இந்த விஷயத்தில் காலதாமதம் உருவாகியிருக்கிறது. முதலில் 27 சதவிகித்ததை வாங்கிவிட்டு, பிறகு 50 சதவிகித்தைக் கேட்டிருக்கலாம். அது தனிப் போராட்டம். அது கண்டிப்பாக முன்னெடுக்கப்படவேண்டியதுதான். ஆனால் இது அதற்கான நேரம் இதுவல்ல.

`அரசியல் சாசனத் திருத்தத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். பரவாயில்லை, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை நிறைவேற்றச் செய்யவேண்டும். நேற்றுதான் தீர்ப்பு வந்தது. இன்று எங்கள் நிறுவனர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சமூக நீதிக்கான பொது எதிரி யார் என்றால், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மட்டுமே. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நாம் அனைவரும் ஒரே மாதிரியாகச் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். நாம் பயன்படுத்தும் ஆயுதம் இன்று நமக்கு எதிராகவே மாறியிருக்கிறது. அதைக் கவனத்தில்கொண்டு, இனிவரும் காலத்திலாவது, கவனமாக செயல்படவேண்டும் என்பதை தோழமையுணர்வோடு கேட்டுக்கொள்கிறேன்'' என்கிறார் மருத்துவர் செந்தில்.

பா.ம.க மட்டுமல்ல ஒரு சில மருத்துவர் சங்கங்களும், ``27 சதவிகித கோரிக்கைதான் இந்த நேரத்தில் சரி. ஆனால், வழக்கறிஞர் வில்சன் சட்டத்தில் 50 சதவிகிதம் கேட்பதற்கு இடமிருப்பதாகச் சொல்கிறார்'' என்கின்றனர்.

வழக்கறிஞர் வில்சன்

இந்தநிலையில், பா.ம.க-வின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ராஜ்யசபா உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சனிடம் பேசினோம்,

``நான் சட்டபூர்வமான வாதத்தைதான் உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் எடுத்து வைத்தேன். தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் 50% இடஒதுக்கிடு கேட்டு வழக்கு தாக்கல் செய்த பின்பு மற்ற தோழமைக்கட்சிகள், அ.இ.அ.தி.மு.க, மாநில அரசும் நாங்கள் கோரிய அதே 50% இடஒதுக்கிடு கேட்டு வழக்கு தொடுத்தார்கள். மாநிலத்தின் தலைமை அரசு வழக்கறிஞருக்கு தெரியாதா என்ன ஒதுக்கிடு கேட்க வேண்டமென்று?

27 சதவிகித இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் கேட்கமுடியும்? 2006 சட்டம் மத்திய கல்வி நிறுவனங்களுத்தான் பொருந்தும். நாம் கேட்பது, மாநில மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு. இதில் மாநிலத்தில் உள்ள 1994-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி 50% ஒதுக்கீட்டைத்தான் கேட்கமுடியும்.

மருத்துவப் படிப்பில், உயர் கல்வியில் 50 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்குக் கொடுத்துவிடுகிறோம். அதில் நம்முடைய இட ஒதுக்கீடு உரிமையைக் கேட்கிறோம். சட்டப்படியும் இதுதான் சரி. வருடத்துக்கு 400-க்கும் மேற்பட்ட நம் ஒபிசி மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகின்றன. தாழ்த்தப்பட்ட மாணவர்களூக்கு 3 சதவீதத்திற்கு குறைவாக இட ஒதுக்கீடு உரிமையும் கேட்கிறோம். பா.ம.க மத்திய ஓதுக்கீடு அதில் பொருந்தும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றது.

மாநிலத்தில் என்ன ஒதுக்கீடு உள்ளதோ அதுதான் மாநில மருத்துவக் கல்லூரிக்குப் பொருந்தும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை, மாநில மருத்துவக் கல்லூரிகளில் பா.ம.க அமல்படுத்தச் சொல்கிறது. இந்த கோரிக்கை நீதிமன்றத்துக்குச் சென்றால் நிராகரித்துவிடுவார்கள் மத்திய அரசு சட்டம் எப்படி மாநில அரசின் மருத்துவ கல்லுரிக்கு பொருந்தும்?

அன்புமணி ராமதாஸ்

அவர்கள் போன வழியிலேயே இன்று எல்லோரும் சென்றிருந்தால், இன்று இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். மாநிலங்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என எம்.சி.ஐ மற்றும் டி.சி.ஐ சட்டத்திலேயே இருக்கிறது. இப்போதைய தீர்ப்பிலும் அது சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் 50% இட ஒதுக்கிட்டை பிற்படுத்தப்பட்ட மணவர்களுக்காக போராடி பெற்றதை நாம் ஏன் அதை விட்டுத்தரவேண்டும்? 23 சதவிகிதம் குறைவாகக் கேட்பது நம்முடைய மாநிலச் சட்டத்துக்கு எதிராக இருக்கும். அகில இந்தியத் தொகுப்புக்கு, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டைத்தான் பின்பற்றவேண்டும் என்கிற அவசியமில்லை. சட்டத்திலும் அப்படிச் சொல்லவில்லை. கமிட்டி அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்பது தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதன்படிதான் மத்திய அரசு செயல்படமுடியும்'' என்கிறார் மூத்த வழகக்றிஞர் வில்சன்.

Also Read: ``இட ஒதுக்கீடு பற்றி மத்திய அமைச்சரைக் கேளுங்கள்....'' - கடுகடுக்கும் தமிழக அமைச்சர்

இந்த வழக்கு அடுத்து எதை நோக்கிச் செல்லும், முன்னாள் நீதியரசர், சந்துருவிடம் பேசினோம்,

``மத்திய அரசு கொரோனாவைக் காரணம் காட்டி இன்னும் கால அவகாசம் கேட்கலாம். அதனால், போன வருஷம் நடந்தது போல்தான் இந்த வருஷமும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த விஷயத்தில், முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் உடைய மத்திய அரசு ஆரம்பத்தில் இருந்தே, `நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும்' என அமைதியாக இருந்துவிட்டது. அதற்கு அரசியல் காரணமும் இருக்கிறது. இந்த காலகட்டத்தில், மூன்று வட இந்திய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அவசர அவசரமாக நிறைவேற்றியவர்கள், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைக் கண்டுகொள்ளவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித ஒதுக்கீட்டுக்கு அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டி இருந்தது. ஆனால், அதை ஒரே வாரத்தில் நிறைவேற்றினார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு விஷயத்தில் ஒரு சட்டம் இயற்றினால் போதும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. காரணம், 10 சதவிகித இட ஒதுக்கீடு அவர்களுக்கான வாக்குவங்கி. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் வாக்குவங்கி எதிர்க்கட்சிகளுக்கானது, அதனால் தேவையில்லை எனக் கருதினார்கள். இந்த அரசியல் சூழ்ச்சியால்தான் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.

நீதிபதி சந்துரு

அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு சட்டப்படி உண்டு. ஆனால், எவ்வளவு சதவிகிதம் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யமுடியாது. அரசுதான் முடிவு செய்யமுடியும். அரசு ஒரு கமிட்டி அமைத்து, அதன் மூலம் பரிந்துரை கொடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும். அப்போதுதான் எவ்வளவு சதவிகிதம் என முடிவு செய்யவேண்டும்.

அடுத்ததாக, மத்திய அரசு கிரீமிலேயரை ஃபிக்ஸ் செய்யவேண்டும். அடுத்ததாக, தமிழகத்தில் மட்டுமே, எம்.பி.சி என ஒரு பிரிவு உள்ளது. அது சார்ந்த சில முடிவுகளை எடுக்கவேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கே ஒரு வருடம் ஆகிவிடும். 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுளளது. இதை ஏதிர்த்து யாராவது, நீதிமன்றம் போனால், அதனாலும் காலதாமதம் ஆக வாய்ப்பிருக்கிறது.

50 சதவிகிதம் கேட்காமல் 27 சதவிகிதம் கேட்டிருந்தாலும் காலதாமதம் ஆகியிருக்கும் என்பதுதான் உண்மை. 27 சதவிகிதம் கேட்டிருந்தால் சலோமா குமாரி வழக்கோடுதான் விசாரித்திருப்பார்கள். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் இணைந்து போராடி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். நீதிமன்றம் சென்றிருக்கக் கூடாது. நீதிமன்றம் சென்றது, தங்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்கான வேலை மட்டுமே இது. மத்திய அரசு என்ன தவறு செய்கிறதோ அதையேதான் இவர்களும் செய்திருக்கிறார்கள். மத்திய அரசு போட்ட வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டார்கள்'' என்கிறார் சந்துரு.



source https://www.vikatan.com/government-and-politics/policies/clarification-over-dmks-plea-on-50-percent-reservation-in-medical-seats-for-obc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக