Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

`அரசு எந்த உதவியும் செய்யவில்லை!’ - கூலி வேலை செய்யும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்

உலகளவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்க மறுபுறம் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பான பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. உலகளவில் இந்த வைரஸ் பாதிப்பு காலத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள் உட்பட பலரும் தினசரி கூலி வேலைகளைச் செய்து சம்பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தநிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஒருவர் மாநில அரசு எந்த உதவியும் செய்யாததால் தனது வாழ்வாதாரத்துக்காகக் கூலி வேலை செய்து வருவது பலரையும் கலங்க வைத்துள்ளது.

முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங் தாமி

மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், ராஜேந்திர சிங் தாமி. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் எனத் தற்போது பிற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார்.

``மாற்றுத்திறன் கொண்ட பலர் மன அழுத்தத்தால் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர். நானும் அத்தகைய இருண்ட நாள்களில் வாழ்ந்துள்ளேன். ஆனால், நான் அத்தகைய நாள்களில் இருந்து வெளியேற விரும்பினேன்” என்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தினசரி கூலி வேலையை செய்தபடியே பேசியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகர் பகுதியின் மேஜிஸ்ட்ரேட் விஜயகுமார் அம்மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தாமிக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: கொரோனா: `சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததால் பாதிப்பு குறைவு!’ - பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு காரணமாகக் கடுமையாகப் பாதிப்படைந்த ராஜேந்திர சிங், தற்போது தன்னுடைய சொந்தக் கிராமமான ராய்கோட்டில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களின் வழியாக 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் குறித்து தெரிந்துகொண்டுள்ளார். பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு பின்னாளில் அவருடைய வாழ்க்கையாகவே மாறியுள்ளது. பின்னர், ஐந்து போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியுள்ளார். ``நான் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு போட்டிகளுக்குத் தயாராவது தொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தேன். ஆனால், கொரோனா வைரஸ் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தியது” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

ராஜேந்திர சிங் தாமியின் வாழ்க்கை மிகவும் கடுமையான போராட்டங்களைக் கொண்டது. 2 வயதாக இருக்கும்போது போலியோவால் பாதிப்படைந்த தாமியின் கால்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு பலம் இழந்துள்ளது. அவருடைய பெற்றோர்கள் விவசாய வேலைகளைச் செய்து வந்துள்ளனர். தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் தாமிக்கு அவரின் பெற்றோர் செய்து வந்துள்ளனர்.

தாமியின் தந்தை, ``என் மகனை பலரிடமும் அழைத்துச் சென்று சிகிச்சையளித்து கால்களைச் சரிசெய்ய முயற்சி செய்தோம். ஆனால், குணமடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படவில்லை. இறுதியில் நாங்கள் எங்கள் மகன் சோர்ந்துபோகாத வண்ணம் ஊக்குவிக்கத் தொடங்கினோம்” என்று தெரிவித்தார். இதனால், கல்வி என்ற விஷயம் பொருளாதாரம், உடல், மனம் எனப் பல தடைகளைத் தாண்டி தாமதாகவே அவருக்கு கிடைத்தது.

முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங் தாமி

அரசுத் தேர்வுகள் எழுத வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்த ராஜேந்திர சிங்குக்கு அவரின் ஆசிரியர்கள் பலரும் உதவி செய்து வந்துள்ளனர். எனினும், நிதி நெருக்கடிகள் காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்கிறார்.

தாமி, 2015-ம் ஆண்டு மாநில அரசின் விருதைப் பெற்றார். அப்போது அவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை என்கிறார். நடிகர் சோனு சூட் சமீபத்தில் இவருக்கு ரூபாய் 11,000 வழங்கி உதவி செய்துள்ளார். எதிர்காலத்திலும் உதவி செய்வதாக சோனு சூட் அவருக்கு உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தாமி, ``என்னுடைய தகுதிக்கு ஏற்றபடி அரசு எனக்கு வேலை வழங்க வேண்டும்” என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளார். இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் தற்போது மிகவும் கஷ்டப்பட்டு வருவது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: `போலீஸ் வேலை; ரூ.30 லட்சம்!’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்



source https://sports.vikatan.com/cricket/ex-indian-wheel-chair-cricket-team-captain-affected-by-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக