ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் வீரதல்லு நாகேஷ்வர் ராவ், இவர் ஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையால் சொந்த ஊரான சித்தூர் மாவட்டம் மகாராஜுபள்ளிக்குச் சென்று அங்கு தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய நினைத்துள்ளார். அப்போது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் வாடகை கொடுக்க முடியாததால் தன் இரு மகள்களின் உதவியுடன் நிலத்தை உழுதுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான பிறகு பாலிவுட் நடிகர் சோனு சூட், தன் சொந்த செலவில் அந்தக் குடும்பத்துக்கு ஒரு புதிய டிராக்டர் பரிசாக அளித்தார்.
நடிகரின் செயலும் சமூகவலைதளத்தில் அதிக பாராட்டுகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நடிகர் சோனு சூட்டின் செயலைப் பாராட்டியதோடு நாகேஷ்வர் ராவின் இரண்டு மகள்களின் கல்விச் செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். இந்நிலையில் விவசாயி நாகேஷ்வர் ராவ் உண்மையில் ஏழைதானா? எனக் கேள்வி எழுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது ஆந்திர ஆளும் அரசு.
Also Read: `மகள்கள் படிப்பில் கவனம் செலுத்தட்டும்!’ - விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட்
நாகேஷ்வர் ராவுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்ட பிறகு அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டன. ``நாகேஷ்வர் ராவ் மதனப்பள்ளி பகுதியில் மிகவும் பிரபலமானவர். முன்னதாக இவர் லோக் சட்டா கட்சி சார்பாக ஆந்திர தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இப்படியிருக்கையில் இவரது குடும்பத்தினரால் டிராக்டருக்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்பது சந்தேகத்தை எழுப்புகிறது” எனப் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். மேலும், பலர் நாகேஷ்வர் ராவ் குடும்பத்துக்கு அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள் பற்றியும் பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து, நாகேஷ்வர் ராவ் குடும்பத்தினர் அரசின் பல திட்டங்களில் பயனடைகின்றனர் என சித்தூர் ஆட்சியரும் தெரிவித்துள்ளார். நாகேஷ்வர் ராவின் உண்மை நிலை தொடர்பாக விசாரணை நடத்த உள்ளூர் வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தன் வீட்டுக்கு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியதாகக் கூறும் நாகேஷ்வர் ராவ், ``அதிகாரிகள் என்னிடம் வந்து எப்படித் தேர்தலில் போட்டியிட்டீர்கள். எப்படி உங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி வழங்குகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் வலதுசாரி ஆர்வலர். அதனால் லோக் சட்டா கட்சியில் உள்ளேன். அவர்கள் என்னைத் தேர்தலில் போட்டியிட சொன்னார்கள், செய்தேன் அவ்வளவுதான். இதற்கும் என் வறுமைக்கும் என்ன தொடர்பு உள்ளது.
Also Read: ஆந்திரா: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளி! - மகள்களைப் பூட்டி நிலத்தை உழுத துயரம்
நாங்கள் அரசின் திட்டங்களைப் பெறுகிறோம் என்பதே என் வறுமையை நிரூபிக்கிறது. அப்படியிருந்தும் என் நிதி நிலையைச் சரிபார்க்க அரசாங்கமே ஒரு விசாரணை நடத்தி வருகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் குடும்ப வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான பிறகு, சோனு சூட் எங்களுக்கு உதவ முன்வந்து ஒரு டிராக்டர் பரிசளித்தார். அதனால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், சில காலங்கள் கூட நீடிக்கவில்லை. ஏனெனில், இப்பாது எங்கள் வறுமை சிலரால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நாங்கள் வேட்டையாடப்படுகிறோம். அமைதியாக எங்கள் வாழ்க்கையை நடத்த எங்களைத் தனியாக விட்டுவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என வேதனையுடன் பேசியுள்ளார் விவசாயி நாகேஷ்வர் ராவ்.
source https://www.vikatan.com/news/india/andhra-govt-officials-ask-farmer-who-was-gifted-tractor-by-sonu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக