ரஃபேல்... கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியலில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஓர் பெயர். பி.ஜே.பி அரசு மீது, `ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது' எனத் தொடர்ந்து காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கிய காரணத்தால் இந்திய அரசியலில் மிக முக்கிய பேசு பொருளானது ரஃபேல். கடந்த ஆண்டின் இறுதி வரையிலுமே ரஃபேல் பற்றிய ஏதோ ஒரு செய்தி வந்துகொண்டேதான் இருந்தது. கொரோனா நோய்த்தொற்று இந்தியாவுக்குள் வந்ததிலிருந்து ரஃபேல் பற்றிய செய்திகளே இல்லாமல் போயின. ஆனால், கடந்த வாரத்திலிருந்து மீண்டும் செய்திகளாக மாறத் தொடங்கியிருக்கிறது ரஃபேல் போர் விமானம்.
கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா போர்ப் படைத் தளத்துக்கு, முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் வந்து இறங்கின. இதன் காரணமாகத்தான் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது ரஃபேல் என்னும் பெயர்.
விமானங்கள் இந்தியா வந்திறங்கிய அன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஃபேல் விமானங்கள் வந்து இறங்கியதற்காக இந்திய விமானப் படைக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் ரஃபேல் குறித்த மூன்று முக்கியக் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார். அந்த மூன்று கேள்விகள்...
கேள்வி 1: ஒவ்வொரு ரஃபேல் விமானத்தையும் ரூ. 526 கோடிக்கு வாங்குவதற்குப் பதிலாக ரூ.1,670 கோடிக்கு வாங்கியது ஏன்?
கேள்வி 2: 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஏன் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டுள்ளன?
கேள்வி 3: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (HAL) ரஃபேல் ஒப்பந்தம் அளிக்கப்படாமல், வங்கி மோசடியில் ஈடுபட்டு திவாலான அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?
ராகுல் காந்தியின் இந்த 3 சரமாரியான கேள்விகளின் காரணமாக மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது ரஃபேல் விவகாரம். 2007-ம் ஆண்டு தொடங்கிய இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பல சர்ச்சைகளையும், வழக்குகளையும் சந்தித்திருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக ரஃபேல் விவகாரம் பயணித்த பாதை என்னவென்பதைதான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்..!
காங்கிரஸ் ஒப்பந்தம்
2007-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தியாவின் போர்ப் படையை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2012-ல் இறுதிசெய்யப்பட்டது. இதில், பறக்கத் தயாரான நிலையில் உள்ள 18 ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் `டசால்ட்' விமான நிறுவனம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்துடன் இணைந்து `தொழில்நுட்ப பகிர்வு' மூலம் இந்தியாவிலேயே கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமராகப் பதவியேற்றார் மோடி. 126 ரஃபேல் விமானங்கள் வாங்க ஏற்படுத்திவைத்திருந்த ஒப்பந்தத்திலிருந்து சில காரணங்களால் பின்வாங்கியது மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு. அதாவது, இரட்டை இன்ஜின் கொண்ட ரஃபேல் விமானங்கள் மிகவும் அதிக விலையுள்ளதாக இருந்தன. ஒப்பந்தங்களுக்குள் விவாதம் நடைபெற்றும் நீண்டநாள்களாகியிருந்தன. எனினும், இந்திய விமானப் படையைப் புதுப்பிக்கவும், தரத்தை உயர்த்தவும் உடனடி அவசியம் இருந்ததனால், தொழில்நுட்ப பகிர்வுசெய்த, 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக, பறக்கத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவுசெய்தது.
பி.ஜே.பி அரசின் ஒப்பந்தம்
2016-ம் ஆண்டு உறுதிசெய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், பிரான்ஸின் டசால்ட் விமான நிறுவனம், இன்ஜின் உற்பத்தி நிறுவனமான சாஃப்ரான் மற்றும் மின்னணு அமைப்பு நிறுவனமான தேல்ஸ் இணைந்து தொழில்நுட்பங்களை டி.ஆர்.டி.ஓ உடன் பகிர்ந்து உற்பத்தி செய்வதாக முடிவானது.
Also Read: ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale
2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றபோது, பிரான்ஸ் - இந்தியா இடையிலான இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையே இறுதிசெய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், 36 விமானங்களுக்கு 59,000 கோடி ரூபாய் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக, 15 சதவிகித முன்பணம் செலுத்தவும் முடிவுசெய்யப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் மற்ற ஆயுதங்கள், உதிரிபாகங்கள் மற்றும் விண்கற்களைத் தாக்கும் உலகின் அதிநவீன ஏவுகணை ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டது. ரஃபேல் விமான உதிரிபாகங்கள் இந்தியாவில் தயார் செய்யவும், பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்குகள் போன்றவை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
காங்கிரஸின் குற்றச்சாட்டு
இந்த ஒப்பந்தம் வெளியான சில மாதங்களிலேயே, அதன்மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கியது. குறிப்பாக, விமானம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது எனவும், இதன் காரணமாக, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்துக்கு வெறும் 10 நாள்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது எனவும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. இதற்குக் காரணம், இந்த ஒப்பந்தம் கையொப்பமானபோது பதவியிலிருந்த பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்த், ``இந்த ஒப்பந்தத்தின்படி டசால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இறுதிசெய்தது இந்திய அரசுதான்’’ என்று கூறியிருந்தார்.
மேலும், ``வெளிப்படைத்தன்மையினைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று சொன்னதுடன், அந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்." எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன.
இதுகுறித்து அந்த சமயத்தில் பிரான்ஸ் நாட்டின் புலனாய்வுச் செய்தி நிறுவனமான மீடியாபார்ட், செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
அதில், ``ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்தச் செய்தி எதிர்க்கட்சிகளின் வாதத்திற்கு மேலும் வலு சேர்த்தது.
சௌகிதார் சோர் ஹை!
`இந்த நாட்டின் காவலர் ஓரு திருடர்' என்ற பொருள் கொண்ட `சௌகிதார் சோர் ஹை' என்ற முழக்கத்தை முன் வைத்து ரஃபேலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ராகுல் காந்தி.
மேலும், ``ரஃபேல் ஒப்பந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்பட்டால், மோடி, அனில் அம்பானி போன்றவர்களுடன் சேர்ந்து சிறையில் இருப்பார். ரஃபேல் ஊழல் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று தொடர்ந்து மத்திய அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்
ராகுல் காந்தியின் கருத்துக்குப் பதிலளித்த அப்போதைய மத்திய நிதியமைச்சரும், மறைந்த பி.ஜே.பி. மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, ``ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபருக்குச் சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. ரஃபேல் தொடர்பாக, காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை; ரஃபேல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கற்பனையானவை; மத்திய அரசு வெளியிட்ட அனைத்துத் தரவுகளும் உண்மையானவை; ராகுல் காந்தி தெரிவித்த அனைத்துத் தரவுகளும் போலியானவை. உண்மைக்கு எப்போதும் ஒரேயொரு வடிவம்தான். பொய்கள்தான் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும். அதனால், ராகுல் காந்தி பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் வெறும் விமானத்தின் விலைக்கும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானத்தின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல்கூட இல்லாத ஜென்டில்மேன், காங்கிரஸின் தலைவராக இருப்பது மிகவும் சோகமானது" என்றார்.
``காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையைவிட, 9 சதவிகிதம் விலை குறைவாகவே ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. பிரதமர் மோடி ஊழல்வாதி அல்ல" என அப்போது ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.
இந்த வழக்கில் காங்கிரஸால் குற்றஞ்சாட்டப்பட்டவரும், தொழிலதிபருமான அனில் அம்பானி, ``தம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது; துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவர்களாலும், தொழில்முறைப் போட்டியாளர்களாலும் பரவுகிறது. உண்மை மட்டுமே வெற்றிபெறும். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்" என்றார்.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அவப்பெயர் ஏற்படுத்தியதாக 5,000 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கக்கோரி, அனில் அம்பானி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ``இதில், ராகுல் காந்தி பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை" எனப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு, அனில் அம்பானி பதில் சொல்லவில்லை.
மக்களவையில் ரஃபேல் விவகாரம்
இதற்கிடையே, ரஃபேல் ஊழல் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி-க்கள், கடும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் அவையில், கூச்சல் குழப்பம் நிலவியது. `மத்திய அரசுக்குத் தைரியமிருந்தால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என காங்கிரஸ் வலியுறுத்தியது.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையைத் தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் நேரத்தில், ரஃபேல் குறித்து ராகுல் காந்தி பேசியது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதவிர தமிழகத்தில், `நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிடவிடாமல் தடைசெய்து, புத்தகங்களையும் பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
``ரஃபேல் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தாண்டா, ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், `இதுதொடர்பாகப் புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும்' என காங்கிரஸ் கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
Also Read: `39 ஆண்டுகள்; 4,250 மணிநேரம் வானில் பறந்த அனுபவம்; ரஃபேல் குழு!' - யார் இந்த ஆர்.கே.எஸ்.பதாரியா?
இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், `ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்துள்ளது. அது, நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையை ஏற்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ``ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை" எனச் சொல்லி மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
``மத்திய அரசு கொடுத்த அறிக்கை தவறானது" எனச் சொல்லி, பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் அந்த வழக்கு மீது மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அத்துடன் தி ஹிந்து நாளிதழ் ஒன்றில் வெளியான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ``ராணுவ அமைச்சகத்திடமிருந்த ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது. எனவே, அந்த ஆவணங்களின் அடிப்படையில் எதிர்தரப்பு தாக்கல் செய்திருக்கும் சில குறிப்புகளை இந்த நீதிமன்றம் ஏற்கக்கூடாது" என்று வாதாடினார்.
``திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துவிட முடியுமா?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியதுடன், ``அந்த ஆவணங்கள் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியது. இந்தத் தீர்ப்பை வரவேற்ற ராகுல் காந்தி, ``ரஃபேல் விவகாரத்தில், தன்னைக் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் முன்னர் கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை நடத்த சம்மதித்ததன்மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என உச்ச நீதிமன்றம் கருதுகிறது" என்னும் பொருள்படி கூறியிருந்தார்.
ராகுல் காந்திமீது வழக்கு
உச்சநீதிமன்றம் சொல்லாமல், இப்படியொரு கருத்தை ராகுல் காந்தி சொன்னதற்காக, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பி.ஜே.பி கூறியதுடன், அவர்மீது வழக்கும் தொடரப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``ரஃபேல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்துக் கூறுகிறார். அவரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன. ரஃபேல் குறித்து வெளியான ஒருசில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரஃபேல் வழக்கில் ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி? ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார்." என்றார்.
ரஃபேல் சர்ச்சைகள் நீண்டு வந்த நிலையில், 17-வது நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. அபார வெற்றிபெற்றதுடன், மீண்டும் மோடியே பிரதமரானார். அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தச் சூழலில், 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியாவுக்கான பிரான்ஸ் தலைமைத் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர், ``பிரான்ஸிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில், முதல் போர் விமானம் இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படும். மற்ற போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.
ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்
இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ரஃபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ரஃபேல் விமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸில் உள்ள மெரிக்நாக் நகருக்குச் சென்றார்.
அங்கு சென்ற ராஜ்நாத் சிங், அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி ராணுவ விமானத்தில் பயணித்தார். பின்னர், பிரான்ஸிடமிருந்து முதல் ரஃபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார்.
ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த விமானத்தின் மீது சமஸ்கிருத மொழியில் `ஓம்' என்று எழுதியும், சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைத்தும் பூஜை செய்தார். இதற்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன.
Also Read: ரஃபேல் சக்கரத்தில் எலுமிச்சம்பழம்... சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதங்கள்!
இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``இதில் என்ன தவறு? அதை, நீங்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம்; மூடநம்பிக்கை என்று நினைக்கலாம். அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. நம்பிக்கை இருப்பவர்கள் செய்யட்டும். ராஜ்நாத் சிங் செய்ததெல்லாம் சரியென்றே நான் கருதுகிறேன். இவையெல்லாம் இந்தியக் கலாசாரத்தைச் சேர்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இதைச் செய்கிறார்கள். முன்பு, ராணுவ மந்திரியாக இருந்தவரும், அவருடைய மனைவியும் கடற்படைக் கப்பலைத் தொடங்கிவைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர். இப்போது கவலைப்படுபவர்கள், அப்போது எங்கேயிருந்தனர்?” என்றார்.
இறுதித் தீர்ப்பு!
ரஃபேல் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டுமெனத் தக்கல் செய்யப்பட்ட மனுக்களை, கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியன்று, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
அதே நாளில், ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவமதிப்பு வழக்கிற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. `ரஃபேல் வழக்கில் மோடியை நீதிமன்றமே திருடர் எனக் கூறிவிட்டது' என்று பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி. அதன்பின், ``இனி நீதிமன்ற தீர்ப்புகள் குறித்துப் பேசும்போது ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும்" என்று கூறி அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்குப் பின் ரஃபேல் விவகாரம் பற்றிய சர்ச்சைகள் அடங்கியிருந்தன. கடந்த புதன்கிழமையன்று ரஃபேல் போர் விமானம் இந்தியாவில் தரையிறங்கியதிலிருந்து மீண்டும் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 2 நாள்களாக சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரஃபேல் விவகாரம் குறித்த விவாதங்களை மீண்டு தொடங்கியுள்ளனர்.
மிக நீண்ட பயணம் கொண்ட இந்த ரஃபேல் விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா, இல்லை ஓரிரு நாள்களில் அடங்கிவிடுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரஃபேல் போர் விமானத்தின் சிறப்புகளை கீழுள்ள இன்ஃபோகிராக்ஸில் காணலாம்...
source https://www.vikatan.com/government-and-politics/policies/a-brief-timeline-of-rafale-deal-and-its-controversies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக