தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள சூழலில் இன்று மருத்துவ குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார். இன்று மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாட்டில் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.
நேற்று மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. ஆகஸ்ட் மாதத்துக்கான தளர்வுகளாக அது இருக்கும். அதன்படி, பொது போக்குவரத்துக்கு தளர்வு அல்லது முடக்கம் குறித்த முடிவுகள் எடுக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநிலங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தனிநபர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ பாஸ் அனுமதி தேவையில்லை, யோகா, ஜிம் பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் செயல்படலாம், மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், பார்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்குகள், நீச்சல் குளங்கள் செயல்பட விதித்த தடை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு, மத நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி, திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு, சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு. அதேநேரம், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் பணிகள் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தொடரும்” உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. எனினும் மாநில அரசு, இதில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கும் என்பதும் மிக அவசியம்.
மத்திய அரசு வழங்கியுள்ள கூடுதல் தளர்வுகள் குறித்து இன்று முதல்வர் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர், ``இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம்தான். மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவாக இருக்கிறது. தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தற்போது தொற்று குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்றார்.
மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பின்னர் இன்று மாலையோ, நாளையோ தமிழக அரசின் பொது முடக்கம் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் என்ன என்ன தளர்வுகள் வழங்கப்படும் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகத் தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது,
-
கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக நேற்றையை கூட்டத்தில் விவாதம் நடைபெற்றதாகவும் இன்றைய மருத்துவ குழுவினருடனான ஆலோசனையிலும் அது முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் கிராம ஊராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
-
பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக சில முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, முதற்கட்டமாக மாவட்டங்களுக்கு உள்ளான பொது போக்குவரத்தும், அதில் மக்கள் முறையாகத் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் பட்சத்தில் மண்டல வாரியாக மாவட்டங்களைப் பிரித்து மண்டலங்களுக்கு பொது போக்குவரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து என்பது செப்டம்பர் மாதத்துக்குப் பிறகுதான் எனக் கூறப்படுகிறது. எல்லாம் மக்கள் கட்டுப்பாடுகளை மதித்து செயல்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்களாம் ஆட்சியாளர்கள்.
-
பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, ஜூலை மாதத்தில் சென்னையில் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் சென்னைக்கு கூடுதல் தளர்வுகள் இருக்கலாம். தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை நடக்க இருப்பதாகவும் அதனடைப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
-
மத்திய அரசின் உத்தரவுகளின்படி மாநிலத்தில் சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை. எனினும் சின்னத்திரையைத் தொடர்ந்து அதிக கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் சில முக்கிய முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/what-can-be-expected-in-next-lock-down-relaxations
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக