வேலூர் மாவட்டத்தில், கொரோனா வார்டுகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு உணவு வழங்குவதில் பெரிய அளவில் கையாடல் நடந்திருப்பதாகச் சர்ச்சை வட்டமிடுகிறது. வேலூரில் உள்ள `டார்லிங்’ ஹோட்டலில் இருந்துதான் உணவுகள் வழங்கப்படுகின்றன. இதனால், `டார்லிங்’ குழும நிர்வாக இயக்குநர் வெங்கடசுப்பு மற்றும் அவரை பரிந்துரை செய்த மாவட்ட உயர் அதிகாரி மீது புகார் அனலாக வீசுகிறது. உணவு தயார் செய்துகொடுக்க 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வெங்கடசுப்புவிடம் மாவட்ட அதிகாரி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெரும் தொகையில் இருந்து ஓர் `லம்ப்’ அமௌன்ட் அதிகார வட்டத்துக்குப் பகிரப்பட்டதாகவும் செய்திகளும் வெளியானது.
இந்த நிலையில், ``தன் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய். தனக்கு எதிராகத் திணிக்கப்படும் வதந்தி’’ என்று விளக்கம் கொடுத்துள்ளார் `டார்லிங்’ நிர்வாக இயக்குநர் வெங்கடசுப்பு.
நம்மிடம் பேசிய வெங்கடசுப்பு, ``தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள மருத்துவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், அறிகுறி இருப்பவர்களுக்கும், சி.எம்.சி மருத்துவமனைக்கு வந்து சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கும் மூன்று வேளை உணவைத் தயாரித்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் எங்களிடம் வலியுறுத்தியது. நாங்களும் சேவை மனப்பான்மையுடன் மூன்று வேளை உணவை வெறும் 90 ரூபாய்க்கு முதற்கட்டமாக வழங்கினோம்.
பார்சல், டெலிவரி கட்டணமும் அந்தச் சிறு தொகையிலேயே அடங்கும். இதற்காக எவ்வளவு தொகை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், பெரும் தொகை கொடுத்தார்கள். அதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. பக்காவாக கணக்குப் போட்டுத்தான் அனைத்து வேலைகளும் நடைபெற்றது. 5 பைசாகூட முறைகேடு செய்ய முடியாது. சில விஷமிகள் செய்த சதியால், என் மீதும் மாவட்ட அதிகாரி மீதும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.
அந்த விஷமிகள் யாரென்றால், எனக்கெதிரான போட்டியாளர்கள்தான். இவ்வளவு குறைந்த கட்டணத்தில் வேறு யாராலும் மூன்று வேளை உணவு கொடுக்க முடியுமா? நாங்கள் உணவு தயாரித்து மாநகராட்சி அதிகாரிகளின் மூலமாகத்தான் டெலிவரி செய்கிறோம்.
அவர்களிடமிருந்து சுகாதாரத் துறையினர் பெற்று மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். எந்த அதிகாரியும் பணம் பெறவில்லை. 15 நாள்களுக்கு ஓர் முறை உணவுக்கான தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கிவிடுகிறது. `ஆரம்பத்தில் உணவுப் பொருள்களை நாங்கள் தருகிறோம். சமைத்து மட்டும் கொடுத்தால்போதும்’ என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. நாங்கள் அதை மறுத்து அவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் மலிவான விலையில் உயர்தர உணவுகளை வழங்கி நற்பெரை எடுத்துள்ளோம். இப்போது மாநில அரசே உணவுக் கட்டணத்தை தீர்மானித்துள்ளது. மூன்று வேளை உணவுக்கு 300 ரூபாய் கொடுக்கிறார்கள். இந்த ரேட்டும் எங்களுக்குக் கட்டுப்படி கிடையாது. தேவையில்லாத புரளியைக் கிளப்புகிறார்கள்’’ என்றவரிடம்...
``உங்களிடமிருந்து உணவு வழங்கும் ஆணைத் திரும்ப பெறப்பட்டு `தி வெல்லூர் கிச்சன்’ ஹோட்டலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?’’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ``நாங்கள் மூன்று இடங்களுக்கு உணவு தயாரித்து வழங்கிவந்தோம். அதில் ஓர் இடம் `வெல்லூர் கிச்சன்’ ஹோட்டலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் அந்த ஹோட்டல் நிர்வாகம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதால் கொடுக்கப்பட்டதே தவிர, எங்கள் மீதான குற்றச்சாட்டுகளால் மாற்றிக் கொடுக்கவில்லை’’ என்றார் காட்டமாக.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/corruption-in-catering-to-corona-wards-vellore-hotel-owner-explanation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக