கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கோட்டார் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி அந்த சிறுமியையும் காதலனையும் கண்டுபிடித்தனர். அந்த இளைஞரிடம் சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தினர்.
குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியபோது அந்தச் சிறுமி சில அதிர்ச்சித் தகவல்களை கூறியிருக்கிறார். நாகர்கோவில் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர், தன்னை சிறார் வதை செய்ததாக அந்தச் சிறுமி கூறியிருக்கிறார். சிறுமியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அதிகாரிகள், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுசம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தநிலையில், நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாகி உள்ள நாஞ்சில் முருகேசனை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாஞ்சில் முருகேசன் மீது நேற்று இரவு வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது கட்சித் தலைமை. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்,``முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் உடந்தையுடன் அவரது 15 வயது மகளையும் நாஞ்சில் முருகேசன் சிறார் வதை செய்திருக்கிறார். இந்தநிலையில்தான் அந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.
இதுகுறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த வாலிபரையும் சிறுமியையும் போலீஸார் கண்டுபிடித்தனர். சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்தியதில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தன்னை சிறார் வதை செய்ததாகக் கூறியிருக்கிறார். மேலும், தாயின் உடந்தையுடன் சிறார் வதை தொடர்ந்து நடப்பது தாங்க முடியாமல் வீட்டைவிட்டு இளைஞருடன் வெளியேறியதாகவும், தன்னை பெற்றோருடன் அனுப்ப வேண்டாம் எனவும் அந்த சிறுமி கதறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
சிறுமியின் முழு வாக்குமூல அறிக்கையையும், குழந்தைகள் நலக்குழுவினர் கலெக்டருக்கு அனுப்பியிருக்கிறார்கள். கலெக்டரும் எஸ்.பி-யும் ஆலோசனை நடத்தி இதுகுறித்து சென்னை டி.ஜி.பி அலுவலகம் மற்றும் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அ.தி.மு.க தலைமை முதலில் நீக்கியுள்ளது. பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறார் வதையில் ஈடுபட்டதால் நாஞ்சில் முருகேசன் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது" என்றார்.
Also Read: புதுச்சேரி: `நானும் உங்க பொண்ணுதான்பா!’ - 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
source https://www.vikatan.com/government-and-politics/crime/police-books-former-mla-nanjil-murugesan-under-pocso-act
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக