Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

விளைநிலத்தில் சட்டவிரோத மின்வேலி! - எலி வேட்டைக்குச் சென்றவர்கள் உடல் கருகி இறந்த பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே எலி வேட்டைக்குச் சென்ற இருவர், விளைநிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றளவும் இருளர் இன மக்கள் வயல்வெளிப் பகுதிகளில் உணவுக்காக எலிகளை பிடித்து சமைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வயல்வெளிகளில் இரவு நேரங்களில், எலி நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தினமும் இரவு வேட்டைக்கு சென்று அதிகாலை வீடு திரும்புகின்றனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் விளைநிலங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசமும் அதிகமாகவே இருந்து வருகிறது. அதன் காரணமாக விவசாயிகள் பலரும் தங்கள் பயிர்களை காத்துக்கொள்ள சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்துள்ளனர். ஆனால், பயிர் காக்க அமைக்கப்படும் மின் வேலிகள், பல நேரங்களில் மனித உயிர்களைக் குடிக்கும் மரண வேலிகளாய் அமைந்து விடுவதுதான் பரிதாபம்.

உயிரிழந்தவர்கள்

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த நெமிலி இருளர் காலனியைச் சேர்ந்த ராஜா, ஆறுமுகம் ஆகிய இருவரும் கடந்த 16-ம் தேதி இரவு வழக்கம் போல் எலி வேட்டையாடச் சென்றுள்ளனர். எப்போதும் வேட்டை முடிந்து அதிகாலையே வீடு திரும்பும் இருவரும் மறுநாள் காலை விடிந்தும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், இருவரையும் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.

Also Read: பன்னி படக்கம், அவுட்டுக்காய், மின்வேலி, ரயில்... யானைகளைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லிகள்!

இந்நிலையில் திருத்தணியை அடுத்த அருங்குளம் ஓடை அருகே ராஜா மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் விளைநிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். அவர்கள் சடலங்களின் அருகில் காட்டுப் பன்றி ஒன்றும் மின் வேலியில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கனகம்மாசத்திரம் காவல்துறையினர், இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து இருவர் உயிரிழக்க காரணமாக இருந்த நிலத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் விளைநில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலிகள் அமைத்துள்ளதை, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/death/2-died-in-tiruttani-after-made-contact-with-illegally-erected-electrical-fence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக