Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

`ராஜதந்திரம்’ பலித்ததா? - பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமும் வெளியுறவுச் சிக்கல்களும்!

"நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது; அயல் நாடுகளுடனான உறவுகளை மோடி அரசு அழித்தொழித்துவிட்டது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ராகுல் காந்தியின் விமர்சனத்தை முன்வைத்து தேசிய அளவில் விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பதிலளிக்கும் விதத்தில் சில தரவுகளை முன்வைத்துள்ளார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

மோடி

“நமது நட்புறவு நாடுகளுடனான உறவு மிகவும் வலிமையாகவும், சர்வதேச அளவில் உயர்ந்த இடத்திலும் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பியா நாடுகளுடன் நாம் தொடர்ந்து உச்சி மாநாடுகளை நடத்திவருகிறோம். சீனாவுடன் இந்தியா கொண்டிருக்கும் அரசியல் உறவு எந்த விதத்திலும் குறைந்த தரத்துக்குச் செல்லவில்லை” என்று ராகுல் காந்தியின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள ஜெய்சங்கர், “இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைக்க சீனாவுடன் 2008-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டபோது, இந்தியாவில் யாருடைய ஆட்சி இருந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

'இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டபோது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடைபெற்றது' என்ற செய்தி உலகம் அறிந்தது. அப்போது இருந்த காங்கிரஸ் அரசு, அதில் தவறு செய்தது என்று ஜெய்சங்கர் சொல்லவருகிறார் என்றால், 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வந்த பிறகு, இலங்கையுடன் உறவை வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது என்பதையும் பட்டியலிட்டிருக்க வேண்டும்.

2014-க்குப் பிறகு இலங்கை நெருக்கமாக இருப்பது இந்தியாவுடனா, சீனாவுடனா என்பதையும் ஆதாரங்களுடன் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியிருக்கலாம். மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசை முழுமையாக ஆதரித்த மோடி அரசு, இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மோடி

இலங்கை அதிபருக்கு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபால சிறீசேனா தோற்கடிக்கப்பட்டு, கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்துவிட்டார். இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே வந்துவிட்டார். இந்த அரசியல் மாற்றத்துக்குப் பிறகு, இலங்கையுடன் உறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?... கோத்தபய ராஜபக்சேவும் மஹிந்த ராஜபச்சேவும் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்கிற நிலையில், இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவற்கு இந்தியா என்ன வியூகங்களை வகுத்தது?... என நிறைய கேள்விகள் உள்ளன.

சீனா, நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவு என அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக இருந்துவருவதுதான். ஆனால், கடந்த 45 ஆண்டுகளில் நிகழாத சம்பவங்கள் இப்போது நிகழ்ந்துள்ளன. சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் உயிரிழப்பது இப்போதுதான். இவ்வளவுக்கும் கடந்த ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நடந்துகொண்டும் உட்கார்ந்துகொண்டும் மணிக்கணக்கில் பேசினார்கள்.

ஷி ஜின்பிங்குடன் மோடி

பிரதமர் மோடி பல முறை சீனாவுக்குச் சென்று ஷி ஜின்பிங்குடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். ஷி ஜின்பிங் ஐந்து முறை இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார். இருவரும் சந்தித்துக்கொள்வதும், கட்டித்தழுவுவதுமான புகைப்படங்கள் ‘மோடியின் ராஜதந்திரத்தைப் பார்த்தீர்களா?’ என்கிற ரீதியில் இருந்துள்ளன. அந்தளவுக்கு சீனாவும் இந்தியாவும் நட்புறவுடன் இருக்கும்போது, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் ஏன் கொல்லப்பட்டார்கள்? எங்கே தவறு நடந்தது என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான விடைகள் தேவை.

2014-ம் ஆண்டின் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில், அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவோம், வலுப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிரதமராக மோடி பதவியேற்றபோது, அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதே தமது அரசின் முதன்மையான நோக்கம் என்று அறிவித்தார். ’நெய்பர்ஹுட் ஃபர்ஸ்ட்’ (Neighbourhood First) என்ற கொள்கையை மோடி அறிவித்தார். மோடியின் அந்த அணுகுமுறை பெரும் வரவேற்பைப் பெற்றது.

மஹிந்த ராஜபக்சேவுடன் மோடி

2014-ல் பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்ச்சியில் பூட்டான் பிரதமர் ட்ஷெரிங் தொப்கே, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டனர். மோடியின் இந்த அணுகுமுறை புத்திசாலித்தனமான, ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இத்தனை நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, வெளிநாட்டுப் பயணம் என அவர் முதன்முதலாகச் சென்றது பூட்டான் நாட்டுக்கு. 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்றார். அண்டை நாட்டுடன் நல்லுறவைப் பேணுவது உள்பட அந்தப் பயணத்துக்கு சில நோக்கங்கள் இருந்தன. அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவல்காரர்களுக்கு ‘செக்’ வைப்பதற்கு பூட்டான் உதவிகரமாக இருக்கும் என்பது பிரதமர் பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது, அண்டை நாடுகளைப் பொறுத்தளவில் பூட்டானுடன் மட்டுமே இந்தியா நல்லுறவுடன் இருக்கிறது.

பூட்டான் பிரதமருடன் மோடி

Also Read: பிரதமர் மோடி: `உலக நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம்!’ - குளோபல் வீக் மாநாட்டில் பேச்சு

அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது என்ற விஷயத்தில், ஆரம்பத்தில் பிரதமர் மோடிக்கு இருந்த கவனமும் அக்கறையும் தொடர்ச்சியாக இருந்திருந்தால், அனைத்து அண்டை நாடுகளுடனான உறவில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பிராந்திய அளவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்க முடியும். புவிசார் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நீண்டகால பிரச்னைகளுக்குத் தீர்வுகளை கண்டிருக்க முடியும். ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை.

இந்தியாவுடனான பகையை மையப்படுத்தி பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அரசியல் செய்வதைப்போல, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும் பாகிஸ்தான் மீதான பகையை வைத்து அரசியல் செய்யும் போக்கு மேலோங்கியது. வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் பாகிஸ்தானுடன் நல்லுறவை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணிகள் பேருந்து அப்போது இயக்கப்பட்டது. ஆனால், மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தவிர, அந்த நாட்டுடன் சமூகமான உறவைப் பேணுவதற்கு இந்தியத் தரப்பில் முயற்சி எதுவும் இல்லை என்ற விமர்சனம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. பாகிஸ்தானும் பல தவறுகளைச் செய்தது. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. 2019-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இம்ரான் கான்

அத்தகைய சூழலில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை மோடி அரசு ரத்துசெய்த விவகாரம், இந்தியா – பாகிஸ்தான் உறவை இன்னும் கடுமையாகப் பாதித்தது. இஸ்லாமாபாத்திலிருந்து இந்தியத் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான், டெல்லியிலிருந்து தன் நாட்டுத் தூதரைத் திரும்பப் பெற்றது. மேலும், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் முறித்தது. அதன் பின்னணியில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் சீனா, பாகிஸ்தானில் புதிய சாலைகள் அமைத்தல், ஆழ்கடலில் துறைமுகம் என நிறைய முதலீடுகளைச் செய்துவருகிறது.

நேபாளம் ஒரு சுண்டைக்காய் அளவுள்ள நாடு என்று நாம் நக்கலாகச் சொல்வதுண்டு. அந்த சுண்டைக்காய் நாடுதான், ‘வந்துபார்’ என்று இன்றைக்கு இந்தியாவுக்கு சவால் விடுகிறது. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்புகளை அந்த நாடு சந்தித்தது. மோடி அரசு ஓடோடிச் சென்று உதவிகள் செய்தது. இந்தியாவின் உதவியால் அன்று நெகிழ்ந்த நேபாளம்தான், இன்றைக்கு இந்திய நாட்டின் பகுதிகளை தனது வரைப்படத்தில் சேர்த்து வெளியிட்டுள்ளது.

நேபாள பிரதமர் ஷர்மா ஒளியுடன் மோடி

’17 ஆண்டுகளாக நேபாளத்துக்கு எந்த இந்தியப் பிரதமரும் செல்லாமல் இருந்த நிலையில், முதன்முறையாக 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அங்கு சென்றார். மின்சக்தித் திட்டங்கள், எரிவாயுத் திட்டங்கள், மருத்துவமனை அமைத்தல், சாலை அமைத்தல், வீடு கட்டுதல் எனப் பல திட்டங்களுக்கு நேபாளத்துக்கு இந்தியா உதவியுள்ளது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். உண்மைதான். யாரும் அதை மறுக்க முடியாது. அந்த உறவு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதை ஜெய்சங்கர் சொல்லாமல் விட்டுவிட்டார். அவரது அந்த மௌத்துக்குள்தான் சிக்கல் ஒளிந்திருக்கிறது.

Also Read: நேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன?

நேபாள நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தத்துக்கு மாதேசி இனத்தவர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியாவின் வட மாநிலங்களில் மாதேசி இனத்தவர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் வாக்கு வங்கியை மனத்தில் வைத்துக்கொண்டு, நேபாளத்தின் சட்டத்திருத்தத்துக்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் நிற்காமல், நேபாளத்துக்கு எதிராக அறிவிக்கப்படாத தடையை இந்தியா அமல்படுத்தியது. அந்தத் தடையானது, பொருளாதார ரீதியில் நேபாளத்துக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அரிசி விலை இரண்டு மடங்கு உயர்ந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஐந்து மடங்காக அதிகரித்தது. இப்படித்தான் நேபாளத்துடனான உறவில் விரிசல் விழுந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சீனா, நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டியது.

ஜெய்சங்கர்

பங்களாதேஷுடனான உறவும் உற்சாகமானதாக இல்லை. கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்ட பங்களாதேஷுக்கு, அது தனி நாடாக உருவானது தொடங்கி பல நேரத்தில் இந்தியா துணையாக இருந்துள்ளது. இப்போது, பங்களாதேஷுடனான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டும், இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடும் பங்களாதேஷ் நாட்டுடனான உறவைப் பாதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு சீனா முன்வந்துள்ளது. இனிமேல், தனக்கு வேண்டியவற்றை சீனாவைக் கொண்டே பங்களாதேஷ் செய்துகொள்ளும். இனிமேல் அந்த நாட்டுக்கு இந்தியாவின் தயவு எதற்கு?

ஓய்வின்றி உலகத்தைச் சுற்றிவருவது மட்டும்தான் உங்கள் ராஜதந்திரமா? அந்த ராஜதந்திரம் பலிக்கவில்லையே மன்னா..!



source https://www.vikatan.com/social-affairs/politics/analyzing-the-external-affairs-policy-of-the-bjp-modi-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக