Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

பிரேசில்:`கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தைக் கொல்கிறது!’ - அதிபர் பொல்சனாரோ

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் பிரேசிலில் சுமார் 28,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20,70,000-த்தைக் கடந்துள்ளது. ஒரேநாளில் 921 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,000-த்தைக் கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாகி வருவதோடு அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவும் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளார்.

பிரேசில் அதிபர் பொல்சனாரோ

அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, பிரேசிலின் கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நேற்று பேசும்போது, ``கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கொல்லப்படுகிறது. வேலையின்மை மற்றும் பணம் இல்லாமையால மக்கள் இறக்கின்றனர்” என்று சில மாகாணங்களில் மற்றும் சில நகராட்சிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். `ஊரடங்கு கொல்கிறது’ என்று கூறிய அதிபர் பொல்சனாரோ, ``சில அரசியல்வாதிகள் அறிவித்துள்ள கட்டாய ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை மூச்சுத்திணற வைக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

Also Read: கொரோனா:`தனி அறை; வீடியோ கால்; ரகசியக் குழு!’ - பிரேசில் அதிபரின் முதல் வாரம்

பிரேசிலில் பொருளாதார நடவடிக்கைகள் வைரஸ் தொற்று காரணமாக 6.4 சதவிகிதம் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து அதிபர் பொல்சனாரோ இத்தகைய விமர்சனத்தை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள பொல்சனாரோ, தன் ஆதரவாளர்களை தனது இல்லத்தில் முகக்கவசங்களை அணிந்து தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றி சந்தித்துப் பேசியுள்ளார். வைரஸ் பாதிப்பு இருந்து வருகிற போதிலும் உடல் நலத்துடன் இருப்பதாக அவர் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அவர், தனது சிகிச்சைக்குப் பயன்படுத்தி வருவதாக ஏற்கெனவே அறிவித்தார். இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சில நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. எனவே, அது தொடர்பாகவும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசில் அதிபர் பொல்சனாரோ

ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் என அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. உலக சுகாதார அமைப்பும் இதுதொடர்பான ஆய்வுகளை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில் அதிபர் பொல்சனாரோ தன் ஆதரவாளர்களிடம், ``கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வேலை செய்கிறது என்பதற்கு, நானே வாழும் ஆதாரமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். இந்த மருத்தை தவிர வைரஸ் பாதிப்புக்கு ஆன்டி பாராசைட் மருந்தையும் எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனைகளையும் செய்து வருகிறார்.

வைரஸ் பரவத் தொடங்கிய நாள்கள் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்து வந்தார். வைரஸ் தொற்றை `சிறு காய்ச்சல்’ என்றும் குறிப்பிட்டார். மிகவும் அலட்சியமாக பொல்சனாரோ செயல்பட்டு வந்ததாக அவர்மீது விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகும், இத்தகைய கருத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read: `WHO-வுக்கு எச்சரிக்கை; மொத்த எண்ணிக்கையை வெளியிட்ட பிரேசில்!’ - ட்ரம்ப்பை பின்பற்றும் பொல்சனாரோ?



source https://www.vikatan.com/news/world/corona-lockdown-kills-brazils-economy-says-jair-bolsonaro

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக