Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

"தூய்மை இந்தியா போர்டு இருக்கு என் தம்பி உயிரோட இல்லை"- மின்கம்பம் விழுந்து இறந்த இளைஞரின் அண்ணன் கண்ணீர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த ஆயலச்சேரி ஊராட்சியில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் காலைக்கடனை கழிக்க வயலுக்கு சென்ற இளைஞர் மீது, மின்சார கம்பி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆலயச்சேரி ஊராட்சியில் உள்ளது 150 குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய சிங்கிலிக்குப்பம் என்னும் குக்கிராமம். இந்தக் கிராமத்தைப் பொறுத்த வரையில் அங்கு வசிக்கும் 150 குடும்பங்களில் வெறும் 5 குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறது. மீதமுள்ள 145 குடும்பங்களில் உள்ள ஆண், பெண் என அனைவரும் அருகில் உள்ள காலி மனைகளில்தான் இதுவரையிலும் காலைக்கடனை கழித்து வருகின்றனர்.

காவல்துறை

இந்த நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த 24 வயதான அஜித் என்ற இளைஞர், கடந்த14-ம் தேதி வழக்கம் போல் காலைக்கடனை கழிக்க வயல் வெளிப்பகுதிக்கு சென்றிருக்கிறார். காலை 7 மணிக்குச் சென்றவர் பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அஜித்தைத் தேடி சென்ற குடும்பத்தாருக்கு அதிர்ச்சிதான் மிஞ்சி இருக்கிறது. காலைக்கடன் கழிக்க வயல்வெளிக்கு சென்ற அஜித் மீது போஸ்ட் கம்பம் அமைக்கப்படாமல் சவுக்கு கட்டை கொண்டு நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயரழுத்த மின்சார கம்பி விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வெங்கல் காவல் துறையினர் இறந்த அஜித்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

"அந்த பகுதியில் போஸ்ட் கம்பம் அமைத்திருந்தால் மின்சார கம்பி என் தம்பி மீது விழுந்திருக்காது. அந்தப் பகுதியில எல்லா மின்சார கம்பிகளுமே ரொம்ப தாழ்வாதான் போகுது. அதப் பத்தி எத்தனையோ முறை ஊராட்சித் தலைவர் கிட்ட சொல்லியும் பயனில்ல. இன்னைக்கு என் தம்பி அந்த கரண்ட் வயருக்கு பலியாகிட்டான். எங்க ஊருல பெண்கள் எல்லாருமே வெளியிலதான் அவசரத்துக்கு போறாங்க. அப்படி போகும் போது எத்தனையோ முறை பாம்பு, விஷப்பூச்சி எல்லாம் கடிச்சிருக்கு. தூய்மை இந்தியா, திறந்த வெளியில் மலம் கழிக்காதீங்கன்னு பலகைய மட்டும் வெக்க தெரிஞ்ச அரசாங்கத்துக்கு எங்க ஊருக்கு ஒரு பொது கழிப்பறை கூட கட்டித் தர முடியல. கழிப்பறை கட்டிக்க பிரதமர் மானியம் வெறும் 5 குடும்பத்துக்குதான் கெடச்சுருக்கு. அப்ப மீதமுள்ளவங்க என்ன பண்ணுவாங்க? ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனியா இல்லனாலும் பரவாயில்லை, 150 குடும்பம் வசிக்குற கிராமத்துக்கு ஒரு பொது கழிப்பறை கட்டிக்குடுங்கனுதான் சார் கேக்குறோம்" எனக்கூறி ஆதங்கப்பட்டார் இறந்த அஜித்தின் அண்ணன் ரஞ்சித்.

அஜித்

போஸ்ட் கம்பம் அமைக்கப்பட வேண்டிய இடத்தில் மாறாக சவுக்கு மரக்கட்டை நடப்பட்டுள்ளதை குறித்து சிங்கிலிகுப்பம் வார்டு உறுப்பினர் ராஜேஷைச் சந்தித்துக் கேட்டோம்.

"சார் நான் இப்பதான் பொறுப்புக்கு வந்திருக்கேன். அந்த இடத்துல எல்லா லைனுமே ரொம்ப தாழ்வாதான் இருக்கு. எங்க ஊர்ல கழிப்பறை இல்ல அதனால எல்லாருமே வயல்வெளி பக்கம்தான் ஒதுங்குவாங்க. குறிப்பா அந்த சவுக்கு மரக்கட்டையில நிறுத்தி வெச்சுருக்க கரண்ட் வயருக்கு பக்கத்துலதான் ஒதுங்குவாங்க. அந்த கம்பிய கையாலேயே எட்டி புடிக்கலாம் அந்த அளவுக்கு தாழ்வா இருக்கும். 'கட்டையில நிறுத்தி வெச்சுருக்கறதால என்னைக்குமே ஆபத்து தான்'னு இதுவரைக்கும் மூணு முறை கிராம சபை கூட்டத்துல ஊர் தலைவர் கிட்ட புகார் கொடுத்திருக்கேன். ஆனா அவர் அதைக் கண்டுக்கவே இல்ல. அதே மாதிரி பல முறை வாணியன்சத்திரம் மின்சாரத்துறை அலுவலகத்துக்கும் புகார் அளிச்சிருக்கேன். இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. ஆனா இப்ப சிங்கிலிகுப்பத்துல அஜித் மின் கம்பி விழுந்து இறந்து போன தகவல் தெரிஞ்சு உடனே புது மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்காங்க. இதை கொஞ்சம் முன்னாடியே செஞ்சுருந்தா இன்னைக்கு அந்த பையன் உயிரோட இருந்திருப்பான்" என்றார் சிங்கிலிகுப்பம் வார்டு உறுப்பினர் ராஜேஷ்.

Also Read: `கிராம சபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி!' - ஆச்சர்யம் அளித்த மதுரை எம்.பி!

நடந்த சம்பவம் குறித்து ஆயலச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் முனிவேலைச் சந்தித்து கேட்ட போது, "வார்டு உறுப்பினரும் கிராம மக்களும் என்னிடம் அந்த மின்கம்பம் பற்றி புகார் கூறியிருந்தனர். என் கவனத்துக்கு வந்த உடன் மின்சாரத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் அளித்திருந்தேன். அதற்கு அவர்கள் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை இழுத்து சரி செய்து தருவதாக கூறினர். ஆனால், இது வரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. ஆனால், இப்போது ஒரு உயிரிழப்பு நிகழ்ந்த பின்னர் கண் துடைப்பு நடவடிக்கையாக நான்கு மின் ஊழியர்களை இடைநீக்கம் செய்திருக்கின்றனர். மேலும் அந்தப் பகுதியில் புது மின் கம்பம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

கழிப்பிட வசதி கோரி சிங்கிலிகுப்பம் கிராம மக்கள்

டிஜிட்டல் இந்தியா என நாம் அனைவரும் துதி பாடிக் கொண்டிருக்கும் இதே நாட்டில்தான் பெரும்பாலான கிராமப்புறங்களில் மக்கள் கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு கழிப்பிடம் கட்டிக்கொள்ள அரசு மானியம் (நிதி) அறிவித்து நடைமுறைப்படுத்தி வரும் போதிலும், அந்தத் திட்டம் பெரும்பாலான ஏழை எளிய மக்களை சென்றடையவில்லை என்பதுதான் மிகுந்த வருத்தமளிக்கிறது. சிங்கிலிகுப்பம் கிராமத்தைப் போன்றே நாட்டில் இன்னும் பல கிராமங்களிலும் 'கழிப்பறை' என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாகவே இருந்து வருகிறது.



source https://www.vikatan.com/news/local-bodies/without-the-toilet-facility-in-singilikuppam-village-a-young-man-died-because-of-electric-shock

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக