Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

`பொது முடக்கத்திலும் முடங்காத சேவை!’ - தூய்மைப் பணியாளர்களின் துயர் துடைக்குமா அரசு?

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க தற்போது வரை முறையான தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தனித்திருத்தலும், பொது முடக்கமுமே தொற்றுப் பரவலை தடுக்கும் ஒரே மருந்தாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தூய்மைப் பணியாளர்

தொற்றுப் பரவல் துவங்கியது முதல் தற்போது வரை மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட துறையினர் அயராத உழைப்பை நல்கி, இந்த வைரஸுக்கு எதிராகக் களமாடி வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களின் நிலைமை ஓரளவிற்கு பரவாயில்லை என்றாலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் மிகவும் பரிதாப நிலையில் இருப்பதாகத் தொழிலாளர் நல பாதுகாப்பு இயக்கத்தினர் வேதனையைப் பகிர்கின்றனர்.

ஹால்துரை

நீலகிரியில் தற்போது தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து நம்மிடம் பேசிய தொழிற்சங்கவாதி ஹால்துரை, ``கொரோனா காலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்வது, பொன்னாடை அணிவிப்பது, காலில் விழுந்து வணங்குவது போன்ற மரியாதைகள் மக்களால் செய்யப்படுவதை நாம் காண்கிறோம்.

Also Read: கொரோனா: `Double-blind' முறையில் மனிதப் பரிசோதனை! - முக்கிய கட்டத்தில் கோவாக்ஸின்

ஆனால், உண்மையில் இவர்களின் நிலை வேறாக உள்ளது. பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி மருந்துகள், இதர ரசாயன திரவங்களை நாள்தோறும் கையாள வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாது கொரோனா வார்டு முதல் சாலையோரா குப்பைகள் வரை இவர்கள் அகற்ற வேண்டியுள்ளது. தற்போது ஓரளவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும் அவர்கள் பணிச்சூழல் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது.

தற்போதைய ஊடரங்கு தளர்வுக்குப் பிறகு கிராமப்பகுதிகளில் வேகமாக வைரஸ் பரவிவருகிறது. இதனால் இவர்களின் பணிச்சுமை மேலும் அதிகரிக்கிறது.

தூய்மைப் பணியாளர்

பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே சமயம் ஒப்பந்த பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஊதியத்தையே போராடி பெற வேண்டியுள்ளது. இவர்களின் சேவையை வாய் வார்த்தையில் போற்றிவிட்டு செல்லாமல், இவர்களின் தேவையறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்'' என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள் சிலர், ``நாங்க கான்ட்ராக்ட் மூலமா வேலை செய்கிறோம். காலைல 7 மணியிலிருந்து சாயங்காலம் 7 மணி வரைக்கும் வேலை செய்கிறோம். 6 வாரமா லீவே இல்லை. அதெல்லாம்கூட பரவாயில்லை.

தூய்மைப் பணியாளர்

எங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா இன்சூரன்ஸ் மாதிரி எந்த பலனும் இல்லை. எங்க குடும்பம் குழந்தைகளோடு நிலைமைய நெனச்சு பயமா இருக்கு. இதுமாதிரி சமயத்துல பெர்மனன்ட், டெம்ப்ரவரினு வித்தியாசம் பாக்காம எங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தா எங்க குடும்பத்துக்கும் ஏதாவது உதவி கிடைச்சா போதும்" எனக் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/nilgiris-sanitry-workers-seeks-governments-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக