Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

நாய்களுக்கு சிக்கன் பிரியாணி, பூனைகளுக்கு மீன் பிரியாணி... மாதம் ₹ 50,000 செலவு செய்யும் சுமித்!

சென்னை, மேடவாக்கத்தின் சுற்றுவட்டாரத்திலுள்ள சில வீதிகளில் மதியம் ஒரு மணி வாக்கில் சைக்கிளில் வலம் வருகிறார் சுமித் சக்ரவர்த்தி. அவர் வருகைக்காகக் காத்திருக்கும் நாய்களும் பூனைகளும், சுமித்தைக் கண்டதும் ஓடிவந்து கொஞ்சி குலாவுகின்றன. சைக்கிளை நிறுத்துவதற்குள், அவை சுமித்தை சூழ்ந்துகொள்கின்றன. சைக்கிளில் வைத்திருக்கும் பக்கெட்டுகளில் உள்ள சிக்கன் பிரியாணியை நாய்களுக்கும், மீன் பிரியாணியை பூனைகளுக்கும் பரிமாறுகிறார். நாய்களும் பூனைகளும் ருசித்துச் சாப்பிடுவதைச் சிறிது நேரம் இருந்து பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டுக் கிளம்புகிறார் சுமித்.
நாய்களுக்கு உணவு வழங்கும் சுமித்

ஆதரவற்ற வளர்ப்புப் பிராணிகள்மீது அன்பு செலுத்தும் சுமித், உணவு வழங்கும் இந்தப் பணியை கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்கிறார். இதற்காக மனைவியுடன் சேர்த்து இவர் செலவிடும் பணமும் நேரமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. நாய்களுக்கும் பூனைகளுக்கும் மதிய உணவு வழங்கிவிட்டு வந்தவர், உற்சாகமாகப் பேசினார்.

``என் பூர்வீகம் கொல்கத்தா. பி.சி.ஏ முடிச்சுட்டு, சில வருஷம் பெங்களூரில் வேலை செய்துட்டு, 2007-ல் சென்னை வந்தேன். அப்போ வீட்டில் மூணு வளர்ப்பு நாய்களை (Basset hound dogs) வளர்த்தோம். 2013-ல் ஒரு தெரு நாய் ஆறு குட்டிகள் ஈன்றெடுத்த நிலையில் நோய் பாதிப்புடன் துடிச்சுட்டு இருந்துச்சு. அதை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனேன். கேன்சர் பாதிப்புடன் இருந்த அந்த நாயைக் குணப்படுத்த எட்டாயிரம் ரூபாய் வரை செல்வாகும்னு சொன்னாங்க. அப்போ என் மனைவியின் வளைகாப்பில் கிடைச்ச பணத்தைக் கொண்டு, அந்த நாயைக் குணப்படுத்தி எங்க வீட்டுக்குக் கொண்டுவந்து வளர்க்க ஆரம்பிச்சோம்.

நாய்களுக்கு உணவு வழங்கும் சுமித்

அதனுடைய ஆறு குட்டிகளில் ஒண்ணு இறந்துடுச்சு. நாலு குட்டிகளைப் பிறர் கொண்டுபோக, ஒரு குட்டியை நாங்க வளர்க்க ஆரம்பிச்சோம். பிறகு வெவ்வேறு காலகட்டங்கள்ல உடல்நிலை சரியில்லாத அஞ்சு தெரு நாய்களை மீட்டு, குணப்படுத்தி எங்க வீட்டில் வளர்க்கிறோம். இப்ப என் வீட்டில் பத்து நாய்கள் வளருது. எல்லா நாய்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு செய்துட்டேன். ரெண்டு நாய்கள் மட்டும் தனித்தனியே இருக்கு. மற்றதெல்லாம் ஒண்ணாதான் வளருது.

2015-ல சென்னையில வெள்ளம் ஏற்பட்ட நேரம். எங்க வசிப்பிட சுற்றுவட்டாரத்துல நிறைய நாய்கள் தவிச்சுக்கிட்டு இருந்துச்சு. அதில் பலவற்றையும் மீட்டு எங்க வீட்டில் தங்கவெச்சோம். சில நாள்களுக்குப் பிறகு அவற்றோட இருப்பிடத்துக்குக் கிளம்பிடுச்சு. அந்தத் தருணத்துல வீட்டைச் சுற்றியிருந்த சில தெருக்கள்ல இருந்த நாய்களுக்கு ரெண்டு வேளைக்கு உணவு கொடுத்தோம். அதுவே வழக்கமாக, கடந்த அஞ்சு வருஷமா ஆதரவற்ற நாய்களுக்கும், பூனைகளுக்கும் சாப்பாடு கொடுத்துக்கிட்டிருக்கோம்” என்கிறார் மெல்லிய புன்னகையுடன்.

நாய்களுக்கு உணவு வழங்கும் சுமித்

நாய்கள், பூனைகளுக்கு வழங்கும் உணவுகள் குறித்துப் பேசுபவர், ``நாங்க பெங்காளி பிராமின் குடும்பம். மீன் மட்டும்தான் சாப்பிடுவோம். ஆனாலும், நாய்களுக்காக சிக்கன் வாங்குறோம். தினமும் ஒன்றரை கிலோ சிக்கன், கேரட், காலிஃபிளவர் உள்ளிட்ட சில காய்கறிகள் சேர்த்து பிரியாணி செய்வோம்.

உணவு சாப்பிடும் பூனைகள்

இதுதான் எங்க வீட்டிலுள்ள 10 நாய்களுக்கும், சுற்றுவட்டார தெருவிலுள்ள 20 நாய்களுக்குமான மதிய உணவு. இரவுக்கு ட்ரை ஃபுட் தயாரிச்சு, 9 மணிவாக்கில் நாய்களுக்குக் கொடுப்பேன். இதுதவிர, எட்டு தெருப் பூனைகளுக்கு மதியத்துக்கு மீன் பிரியாணி, இரவுக்குப் பால் கலந்த ட்ரை ஃபுட் கொடுக்கிறோம்.

வீட்டில் நாய்கள், பூனைகளுக்கான உணவைப் பதப்படுத்தி வைக்க மட்டுமே பெரிய ஃப்ரிட்ஜ் ஒண்ணு வெச்சிருக்கோம். வாரத்துக்கு ஒருமுறை 10 கிலோ சிக்கன் வாங்கி, அதில் மஞ்சள்தூள் தூவி ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸர்ல வெச்சு தினமும் பயன்படுத்துறோம். அதேபோல வாரத்துக்கு ஒருமுறை மூணு கிலோ மீன், வாரத்துக்கு ரெண்டுமுறை காய்கறிகள் வாங்கி அதே ஃப்ரிட்ஜல வெச்சுப் பயன்படுத்துறோம்'' என்கிறார்.

வீட்டில் வளர்க்கும் நாய்களுடன் சுமித்
மாதம்தோறும் நாய்களுக்கான உணவுக்கு 35 ஆயிரம் ரூபாயும், பூனைகளுக்கான உணவுக்கு 15 ஆயிரம் ரூபாயும் செலவு செய்கிறார். இதற்காக, தனது மாதச் சம்பளம் ஒரு லட்சத்தில் பாதித் தொகையைச் செலவழிக்கிறார் சுமித். தவிர, இவர் வீட்டில் வளரும் 10 நாய்கள் உட்பட தினமும் உணவு வழங்கும் 30 நாய்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை தனது செலவில் தடுப்பூசி போட்டுவிடுவதுடன், குடும்பக்கட்டுப்பாடும் செய்துவிடுகிறார். நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஏதாவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் கொண்டுசென்று குணப்படுத்திவிடுகிறார். இந்தச் செலவுகள் தனி.

``இப்ப நான் ஐ.டி நிறுவனங்கள் பலவற்றுக்கும் கன்சல்டன்டா வேலை செய்றேன். எனக்கு எப்போதுமே வொர்க் ஃப்ரம் ஹோம்தான். அதனால எல்லா நாளும் தவறாம நாய்களுக்கும் பூனைகளுக்கும் சாப்பாடு கொடுக்க முடியுது. பெரும்பாலும் வெளியூர் போகாம பார்த்துப்போம். ஊருக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டா, அக்கம் பக்கத்தினர் சிலர் மூலம் என் வருகையை எதிர்பார்த்திருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்திடுவோம்.

நாய்களுக்கு உணவு வழங்கும் சுமித்

எங்களுக்கான உணவு சமைக்கிறதைத் தாண்டி, நாய்களுக்கும் பூனைகளுக்கும் தினமும் ரெண்டு வேளைக்கு உணவு சமைக்கிறது சவாலான வேலைதான். ஆனா, ஒருநாள்கூட என் மனைவி சலிச்சுகிட்டதில்லை. உற்சாகமா சமைச்சு, `சீக்கிரம் கொண்டுபோய் கொடுங்க. பிள்ளைங்க காத்திட்டிருப்பாங்க’ன்னு ஊக்கப்படுத்துவாங்க. தனித்தனியே ரெண்டு பிளாஸ்டிக் பக்கெட்ல எடுத்துட்டு சைக்கிள்ல கொண்டுபோய், நாய்களுக்கும் பூனைகளும் கொடுப்பேன்.

நாங்க வசிக்கும் மேடவாக்கம் கூட்டு ரோடு பகுதியில இருக்கிற ஆனந்த் நகர், ஈ.வி.ஆர் தெரு, பாரதியார் தெரு உட்பட ஆறு தெருவிலுள்ள நாய்களும், பூனைகளும் என் வருகையைப் பார்த்ததும் சந்தோஷப்படும். ரெண்டு ஜீவன்களுக்கும் உணவு கொடுத்துட்டு வந்த பிறகுதான் நாங்க வீட்டில் சாப்பிடுவோம்.

குடும்பத்துடன் சுமித்

ரொம்பவே பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு. ஆதரவற்ற ஜீவன்களுக்குச் சாப்பாடு கொடுக்கறதுல எங்களுக்கு அளவற்ற திருப்தி கிடைக்குது. எங்களைப் பார்த்து எங்க மகனுக்கும் ஆதரவற்ற கால்நடைகள்மீது அன்பு ஏற்பட்டிருக்கு. நாளைக்கு என்னவாகும்னு தெரியாத வாழ்க்கையில, வாழுற காலத்துலயே நம்மால முடிஞ்ச அளவுக்கு ஆதரவற்ற சில ஜீவன்களுக்கு உதவுறது ரொம்பவே நல்லதுனு நினைக்கிறோம்.

நாம செய்ற ஒரு நல்ல விஷயத்துக்கு நம்ம வாழ்க்கை முறையைக் கொஞ்சம் மாத்திக்கணும். அதன்படிதான் என்னோட வேலை பாதிக்காத வகையில, தினமும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு கொடுக்கப் போறேன். ஒருத்தருக்கு இன்னொருத்தர் ஆதரவா இல்லைனா, சமூகமே பலவீனமடைஞ்சுடும். நடிகர் நகுல் உட்பட சில சினிமா பிரபலங்கள் எங்க வீட்டுக்கு வந்து நாய் வளர்ப்பு பத்தி பாராட்டிப் பேசியிருக்காங்க” என்கிறார் புன்னகையுடன்.



source https://www.vikatan.com/living-things/miscellaneous/sumith-a-man-who-feed-chicken-and-fish-biryani-for-street-dogs-and-cats-over-5-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக