Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

`இளைஞரின் மரணம் வருத்தமளிக்கிறது!’ - குடும்பத்துக்கு உதவிய திருப்பத்தூர் எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் முகிலன் (27). கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி), முழு ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணங்களுக்காக பைக்கில் வெளியில் சுற்றியதாகக் கூறப்படுகிறது. வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நகர போலீஸார், முகிலனின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், அருகில் உள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை தூக்கிக் கொண்டுவந்துள்ளார்.`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்’ என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார்.

தீக்குளித்த இளைஞர்

இதில், பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. மருத்துவக் குழுவின் சிறப்பு கவனிப்பில் இருந்த முகிலன், 9 நாள்களுக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Also Read: சென்னை: `3 மாதங்களாக வேலை இல்லை!' - கூலித் தொழிலாளியின் தற்கொலை முடிவு

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார், ``தீக்குளித்த நபரின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமே எங்களுடைய முதல் நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் சி.எம்.சி மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம். இருந்தும், அவர் இறந்தது வருத்தமாக இருக்கிறது. எதற்காகத் தீக்குளித்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், முதலில் அனுமதிக்கப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும் சி.எம்.சி மருத்துவமனையிலும் அந்த நபர் மது போதையில் இருப்பதை உறுதி செய்தனர்.

தீக்குளித்த இளைஞர்

இறந்த நபருக்கு 6 மாத கைக் குழந்தை உட்பட சின்ன சின்னதாக மூன்று குழந்தைகள் இருக்கிறது. குடும்பச் சூழல் இப்படியிருக்க அவர் தற்கொலை முடிவை எடுப்பதற்கு மதுவும் ஓர் காரணம் என்று நினைக்கிறோம். மருத்துவத்துக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், விதவைக்கான மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/death/tirupattur-sp-helped-poor-family-during-lock-down-period

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக