Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

புதுச்சேரி:`ராஜீவ்காந்தி திட்டத்துக்கு கருணாநிதி பெயர்?’- கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2020-21 நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. நிதித்துறை பொறுப்பும் வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ரூ.9,000 கோடிக்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச கைக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்த அவர், ”அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது காலையில் பால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் என்ற பெயரில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி எனச் சிற்றுண்டி வழங்கப்படும்” என்றும் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி

அதற்காக முதல்வர் நாராயணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ’தி.மு.கவினர் மனதில் நீங்காத இடம்பிடித்த அவரின் புகழ் வாழ்க’ என்றும் குறிப்பிட்டிருந்தார். தி.மு.கவினர் முதல்வர் நாராயணசாமியை கொண்டாடி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அவரது அறிவிப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு!

இது ஒருபுறமிருக்க, புதுச்சேரியில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் பிஸ்கட் வழங்கும் சிற்றுண்டி திட்டத்தைச் செயல்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பெயரில் இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை, அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாகாந்தி, புதுச்சேரியில் துவக்கி வைத்தார். அதன்பிறகு, புதுச்சேரி அரசில் நிலவிய கடும் நிதிப்பற்றக்குறை காரணமாக 2013-ம் ஆண்டில் அந்தத் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து பால் மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது.

முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணனின் முகநூல் பதிவு

இந்தத் திட்டத்தைத்தான் தனது அரசியல் லாபத்திற்காக முதல்வர் நாராயணசாமி தற்போது கலைஞர் கருனாநிதி பெயரில் அறிவித்திருப்பதாக குமுறுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள். 2002-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்தவரும், தற்போது முதல்வர் நாராயணசாமியின் நாடாளுமன்றச் செயலராக இருக்கும் லட்சுமி நாராயணன், தனது முகநூல் பக்கத்தில்,`நான் கல்வி அமைச்சராக இருந்தபோது 2002-ல் திருமதி சோனியாகாந்தி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி சிற்றுண்டி திட்டம், இன்று முடக்கப்பட்டுவிட்டது’ என்று வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், ``இவர் காங்கிரஸ் முதல்வரா அல்லது தி.மு.க தொண்டரா என்று தெரியவில்லை. தி.மு.க எம்.எல்.ஏக்களின் ஆதரவில்தான் நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் இங்கிருக்கும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் இவரது ஆட்சியை அடிக்கடி விமர்சித்து வருகிறார்கள். அதனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும், அடுத்த தேர்தலிலும் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் தலைவர் ராஜீவ்காந்தி பெயரில் இருந்த திட்டத்தை கலைஞர் பெயரில் அறிவித்திருக்கிறார். அதேபோல அந்தத் திட்டத்தை துவக்கி வைத்த எங்கள் தலைவி சோனியாகாந்தி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அப்படி இருந்தும் கட்சியின் தலைமையிடம் அனுமதிகூட வாங்காமல், காங்கிரஸ் முதல்வர் என்பதைக் கூட மறந்து தி.மு.க தொண்டனைப் போல அக்கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்” என்கின்றனர் ஆவேசமாக.

Also Read: புதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் - நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

30 எம்.எல்.ஏக்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏக்கள் ஆதரவ்ய் வேண்டும். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதனால், கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதல்வராக அமர்ந்தார் நாராயணசாமி. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் இருக்கையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு வீதிகளுக்கு அவரது பெயரையும் சூட்டினார் முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில்தான், தற்போது ராஜீவ்காந்தி பெயரில் இருந்த சிற்றுண்டி திட்டத்திற்கு கருணாநிதி பெயரை வைத்திருக்கிறார் என்று குமுறுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-congress-cadres-oppose-cms-new-move

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக