நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி சங்கமம் என்ற மத்திய பா.ஜ.க அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ``பாரதத்தை குமரி முதல் காஷ்மீர் வரை என்பார்கள். இந்த இரு பகுதிகளும் தேசபக்திமிக்கதாக இருக்க வேண்டும். இந்த பொதுக்கூட்டத்தில் மாநில அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து பா.ஜ.க பொதுக்கூட்டம் நடத்த புதிய கிரவுண்டை நீங்கள் கட்ட வேண்டும். குமரி மண் ஆன்மிக பூமி. ஆன்மிகம் எங்கே இருக்கிறதோ அங்கு தேசபக்தி இருக்கும்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுச் மண்டபத்தை கட்ட காரணமாக இருந்தவர் ஏக்நாத் ரானடே. அந்த பகுதியில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும் என 1975-ல் சொன்னார்கள். ஆனால் ஏக்நாத் ரானடே விவேகானந்தர் நினைவுச் மண்டபத்தை ஏற்படுத்திய போது கலைஞர் ஒட்டிய முதல் ஸ்டிக்கர் திருவள்ளுவர் சிலை தான். தமிழக மக்களுக்கு குமரி மண்ணின் பெருமை தெரியவேண்டும்.
1969-ல் காமராஜர் குமரி மண்ணில் போட்டியிட்டபோது, பிரசாரத்துக்கு வந்த கருணாநிதி, நாடார் சமூகத்தை இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என பிரித்தார். அதையெல்லாம் தாண்டி 1,20,000 ஓட்டில் காமராஜர் வெற்றிபெற்றார். அப்போது கருணாநிதியிடம் கருத்து கேட்டதற்கு, `நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல நாடார்மன்ற தேர்தல்’ என்றார். அந்த சமூகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் கட்சி தி.மு.க. 1971-ல் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு கருணாநிதி குமரியில் பிரசாரத்துக்கு வரவில்லை. ஏன் என கேட்டதற்கு, `நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை’ என்றார். இங்கு பிரசாரத்துக்கு வந்த மோடி குமரி மாவட்டத்தை தனது சொந்தமாவட்டமாக பாவித்தார்.
மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது. மீனவர்களின் தந்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி. சுதந்திர இந்தியாவில் மீன்வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கியவர் பிரதமர் மோடி. அதிலும் இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். 2014- வரை 81 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சுடப்பட்டு இறந்துள்ளார்கள். கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பாக்கிச்சூடும் நடக்கவில்லை. மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லும்போது உங்கள் படகில் மோடி அமர்ந்திருக்கிறார் என நீங்கள் நினைக்க வேண்டும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள். இந்த செங்கல்தான் 2 லட்சம் வீடு. (ஒரு செங்கலை எடுத்து காட்டினார்)
ஒரு வீடு கூட தமிழகத்தில் கடிக்கொடுக்கவில்லை. புதிய மீன்பிடி துறைமுகம் கட்டிக்கொடுக்கவில்லை. ரப்பர் உதிரி பாகம் தயாரிப்பு நிலையம் இல்லை. தகவல் தொழில்நுட்ப பூங்கா, ரப்பர் பூங்கா, நாகர்கோவில் தொழில் பேட்டையை காணவில்லை. 571 வாக்குறுதிகளில் கன்னியாகுமரிக்கு எதுவும் செய்யவில்லை. உடனே எய்ம்ஸ் எங்கே என கேட்பார்கள். 2026 மார்ச் மாதம் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இப்போது 150 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். உங்கள் தேர்தல் வாக்குறுதியில் எண் 54-ல் மதுரையில் வேளாண் பல்கலை கழகம் அமைப்போம் வாக்குறுதி என்ன ஆனது. வேளாண் பல்கலைகழகம் செங்கலாக இருக்கிறது. (அக்ரி யுனிவர்சிட்டி என்ற செங்கலை எடுத்து காட்டினார்)
நீங்க செய்யமாட்டீர்கள், செய்பவர்களையும் செய்ய விடமாட்டீர்கள். மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவந்த 48 ஆயிரம் கோடி நிதியில் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி செயல்படுத்தாமல் இருக்கிறது.” என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலில் செங்கல்லை வைத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என மத்திய அரசை கிண்டலடித்தார். அதே பாணியை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கையில் எடுத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-showed-two-bricks-in-kanniyakumari-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக