Ad

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

Motivation Story: `இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தி சொல்லும் பாடம்... ``பணிவு வெற்றிக்கு உதவும்!’’

`நாம் எப்போது பணிவு என்கிற குணத்தைச் சிறப்பாகக் கடைப்பிடிக்கிறோமோ, அப்போதுதான் நாம் `சிறந்தவர்’ என்கிற இடத்தையே நெருங்குகிறோம்.’ - ரவீந்திரநாத் தாகூர்.

அதிகாரிகள், தங்கள் பணியாளர்களிடம் நடந்துகொள்ளும்விதம் குறித்துப் பக்கம் பக்கமாகப் பேசலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். முக்கியமான ஒன்று, பணியாளர்களின் வேலையை மட்டும் பார்க்காமல், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள்தான் தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள். இதற்கு ஒரு சிறு உதாரணம்...

சென்னை, ஜெமினி மேம்பாலத்துக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு சாலையில் இருக்கிறது அந்த நிறுவனம். தனியார் தபால் சேவைதான் அதன் பணி. அந்த நிறுவன ஊழியர் ஒருவர், ஒரு வார காலமாக தினமும் தாமதமாக வேலைக்கு வந்துகொண்டிருந்தார். திறமைசாலி. தேவையில்லாமல் விடுப்பு எடுக்காதவர். பொய் சொல்லத் தெரியாது. கூடுவாஞ்சேரியிலிருந்து மின்சார ரயிலில் கிண்டிக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயிலில் வேலைக்கு வந்துகொண்டிருந்தார். `ஏன் தாமதம்?’ என்று கேட்காமலும் இருக்க முடியாது. மற்ற ஊழியர்கள் கவனிக்கிறார்கள். ஒருநாள் அதிகாரி கேட்டேவிட்டார்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

``ஏன் இன்னிக்கி லேட்?’’

``வழக்கமா பிடிக்கிற ட்ரெயினை விட்டுட்டேன் சார்.’’

``ஏன் விட்டீங்க?’’

``காலையில லேட்டா எந்திரிச்சேன் சார்.’’

``ஏன் லேட்டா எந்திரிச்சீங்க?’’

``நேத்து ராத்திரி லேட்டாத்தான் தூங்கப் போனேன் சார்.’’

``எதுக்கு நைட்டுல லேட்டா தூங்கணும்... டி.வி-யில சினிமா எதுவும் பார்த்தீங்களா?’’

``இல்லை சார். அம்மாவுக்கு என்னன்னே சொல்ல முடியாத ஒரு வைரஸ் ஃபீவர். அப்பா இல்லை. நான்தான் பார்த்துக்கணும். அதான்...’’

அந்த அதிகாரி கேள்வியே கேட்காமல் அந்த ஊழியர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். கேள்வி கேட்டு, ஒன்றிரண்டு கேள்விகளோடு நிறுத்தியிருந்தாலுமேகூட அந்த ஊழியருக்குச் சம்பளப் பிடித்தமோ, சில நாள்களுக்கு அரை நாள் கணக்கில் ஆப்சென்ட்டோ போடப்பட்டிருந்திருக்கும். அதிகாரி நல்லவராக இருந்ததால், ஊழியர் மேல் அவருக்கு அக்கறை இருந்ததால் அந்த ஊழியர் தப்பித்தார்.

ஒரு சிறந்த உயரதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்றைக்கும் இருப்பவர், `இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. `இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். ஏப்ரல் 2022-ம் ஆண்டு கணக்குப்படி அவருடைய சொத்து மதிப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர். எத்தனை உயரத்தில் இருந்தாலும் அவர் கைவிடாத ஒரு குணம், பணிவு. கூடவே, `ஈகோ ’என்கிற ஒன்றை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டதாலேயே அவர் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

ஒரு நாள் விருந்தினர் ஒருவர் நாராயண மூர்த்தியைப் பார்க்க வந்திருந்தார். அவரை வரவேற்றார். உடன் இன்ஃபோசிஸில் பணியாற்றும் இளைஞர் ஒருவரையும் அழைத்துக்கொண்டார். மூவரும் ஓர் அறைக்குள் நுழைந்தார்கள். நாராயண மூர்த்தியும் அந்த விருந்தினரும் அமர்ந்தார்கள். பேச ஆரம்பித்தார்கள். பேச்சு சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போனது. பேச்சு முடிந்து, வந்தவர் எழுந்திருந்தபோதுதான் நாராயண மூர்த்தி அதை கவனித்தார். அந்த அறையில் அமர்வதற்கு இரண்டே நாற்காலிகள்தான் இருந்தன. அவற்றில் அவரும் வந்திருந்த விருந்தினரும் அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு நேரமும் இன்ஃபோசிஸில் பணியாற்றும் அந்த இளைஞர் நின்றுகொண்டே அவர்கள் பேச்சை கவனித்திருக்கிறார். நாராயண மூர்த்தியால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அன்று முழுக்க, `சே... கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாமல் இப்படி நடந்துகொண்டோமே...’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டேயிருந்தார் நாராயண மூர்த்தி.

தன்னை மேம்படுத்திக்கொள்ள, எளிமையாக எல்லோருடனும் ஒன்றிப் பழகுவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்தார் நாராயண மூர்த்தி. உறங்கப்போவதற்கு முன்பாக படுக்கையறையில் இருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்துவிடுவார். அன்றைய தினத்தில் காலையிலிருந்து என்னவெல்லாம் தவறு செய்தோம் என்று மனதுக்குள் அசைபோட்டுப் பார்ப்பார். தன் மனதோடு தனக்குத் தானே உரையாடுவார். யாருடைய மனமாவது சஞ்சலப்படும்படி, கஷ்டப்படும்படி அன்றைக்கு அவர் நடந்திருந்தார் என்பது நினைவுக்கு வந்தால், அதற்காக வருந்துவார். `இறைவா... இப்படி ஒரு தவற்றை நான் திரும்பவும் செய்யக் கூடாது. அதற்கான வலிமையை எனக்குக் கொடு’ என்று பிரார்த்தனை செய்த பிறகுதான் உறங்கப்போவார்.

Infosys

எதையும் எளிதாக எடுத்துக்கொள்வது எல்லோராலும் இயலாத காரியம். அது நாராயண மூர்த்திக்கு வெகு சாதாரணமாக இருந்தது. சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. ஒரு பிரபல அறக்கட்டளை நிறுவனம், நாராயண மூர்த்தியைப் பாராட்டி, அவருக்கு விருது வழங்க ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வுக்கு முதல் நாள் ஒரு பெண்மணியைப் பார்த்தார் நாராயண மூர்த்தி. அந்தப் பெண்மணி, பிரபல பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் எழுத்தாளர். அவரிடம் போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நாராயண மூர்த்தி. அந்தப் பெண்மணியோ அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பதில்கூடச் சொல்லாமல் நகர்ந்து போய்விட்டார்.

அடுத்த நாள், நாராயண மூர்த்திக்கு விருது வழங்கும் நிகழ்வு. விழா முடிந்தது. மிகுந்த பதற்றத்தோடு அந்த எழுத்தாளர் பெண்மணி அவருக்கு அருகே வந்தார். ``சார்... மன்னிச்சுக்கோங்க சார். நீங்க யாருன்னு தெரியாம நேத்து நான் அலட்சியமா உங்ககிட்ட நடந்துக்கிட்டேன்...’’

அதற்கு நாராயண மூர்த்தி சொன்ன பதில்... ``அதுக்கென்ன இப்போ... அது அவ்வளவு முக்கியமில்லை.’’

`பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’ என்கிற எம்.ஜி.ஆர் பாடலுக்கு வாழும் உதாரணம், `இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தி.

பின்குறிப்பு: இந்த நிகழ்வு எழுத்தாளர் சுப்ரதோ பாக்ச்சி எழுதிய 'The Professional,: Defining the New Standard of Excellence at Work,' என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/inspirational-story-of-infosys-narayanamurthy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக