Ad

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தாமதமாக மழை விடுமுறை அறிவிப்பு... கலெக்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தினமும் ரெட் அலர்ட், ஆரெஞ்ச், அலர்ட், மஞ்சள் அலர்ட் என காலநிலைக்கேற்ப மாவட்டங்களுக்கு தினமும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு வருகிறது. மழையின் தன்மையைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு வருகிறது. நேற்று கேரளா மாநிலத்தில் ஆலப்புழ, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று முன் தினம் இரவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், நேற்று காலை 8.25 மணியளவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ரேணு ராஜ் முகநூலில் அறிவித்தார். இதனால் கோபமான பெற்றோர்கள் முகநூல் அறிவிப்பிலேயே தங்கள் ஆதங்கங்களை கமெண்டாக பதிவிட்டனர்.

"என் குழந்தைக்கு காலை 8.15 மணிக்கே வகுப்புகள் தொடங்கிவிட்டன. 7.15 மணிக்கே தனியார் வேனில் குழந்தையை அனுப்பிவிட்டடேன்" என ஒருவர் கொந்தளித்திருந்தார். "நேற்று இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. இப்போதும் பெய்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு புரியாது கஷ்டம்" எனவும். "மேடம் நாளை முதல் கொஞ்சம் சீக்கிரம் எழுந்தால் நன்றாக இருக்கும்" என மற்றொருவரும் கலாய்த்திருந்தார்.

கேரள மழை

பரபரப்பான எர்ணாகுளம் சிட்டியில் பலரும் குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள். குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு அலுவலகம் சென்ற பிறகு விடுமுறை விட்டால் எப்படி குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும் என பெற்றோர் குழம்பினர். தனது பதிவுக்கு கீழேயே கமெண்டுகள் குவிவதை கண்ட கலெக்டர், ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "இரவு ஆரம்பித்த மழை இப்போதும் தொடர்வதால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்குள்ளாக செயல்பட தொடங்கிய ஸ்கூல்களை மூட வேண்டாம். வகுப்பறைக்கு வந்த குழந்தைகளை திருப்பி அனுப்ப வேண்டாம்" என அறிவித்தார்.

இதற்கிடையே எர்ணாகுளம் மாவட்டத்தில் தீவிர மழை பெய்துவந்த நிலையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுவதற்கு கலெக்டர் காலதாமதப்படுத்தியது குறித்து ஒருவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஆர்.தனில் என்பவர் ஐகோர்ட்டில் அளித்த மனுவில், "எர்ணாகுளம் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பதில் குளறுபடி ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. காலதாமதமாக விடுமுறை அறிவித்த எர்ணாகுளம் கலெக்டர் ரேணு ராஜிடம் விளக்கம் கேட்க வேண்டும். விடுமுறை அறிவிப்பு குறித்த தெளிவான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் கலெக்டர் ரேணு ராஜ்

இது ஒருபுறம் இருக்க, எர்ணாகுளம் மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என கேரளா வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்துள்ளார். அதே சமயம் இன்று மழை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பை நேற்று இரவு 8 மணிக்கு முன்னதாகவே எர்ணாகுளம் கலெக்டர் ரேணு ராஜ் அறிவித்துவிட்டார்.



source https://www.vikatan.com/news/india/rain-holiday-announcement-delayed-case-filed-in-court-against-collector-in-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக