மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் சிவசேனா இரண்டாக உடைந்தது. அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவிலிருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களைத் தன்னுடைய பக்கம் இழுத்துக்கொண்டார். அதோடு தன்னுடைய அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கிறார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் தங்கள் ஆதரவாளர்கள் பட்டியலை வரும் 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் நேற்றிலிருந்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டபடி பதில் மனுக்களைத் தாக்கல்செய்தனர். இன்று வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ``பெரும்பான்மை அடிப்படையில், ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவில் கோர்ட் தலையிட வேண்டாம்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, ``நீங்கள்தான் முதலில் கோர்ட்டுக்கு வந்தீர்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல் கட்சிகளை முற்றிலும் புறக்கணித்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தில்லையா?" என்று நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே,``இல்லை" என்று பதிலளித்தார்.
``அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கொறடா உத்தரவை மீறி சட்டமன்றத்தில் வாக்களித்ததற்காக கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கும் மனுமீது சுப்ரீம் கோர்ட் முடிவுசெய்யும் வரை தேர்தல் கமிஷன் யாருடைய அணி உண்மையான சிவசேனா என்பதை முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது" என்று உத்தவ் தாக்கரே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ``தேர்தல் கமிஷன் எந்த அணி உண்மையான சிவசேனா என்பதை முடிவு செய்ய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டனர். அதோடு வரும் திங்கள்கிழமை இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து நீதிபதிகள் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/supreme-court-has-barred-the-election-commission-from-deciding-which-party-is-the-real-shiv-sena
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக