Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

``இலவசங்கள் வேறு, சமுக நல திட்டங்கள் வேறு..." - தலைமை நீதிபதி என்.வி.ரமணா

இந்திய அரசியலில் கடந்த சில நாள்களாகவே, அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் குறித்த விமர்சனங்கள் வந்தவண்ணமே இருக்கின்றன. பிரதமர் மோடி கூட இதனை, தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்குப் பதில் தரும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மோடியை விமர்சித்து வருகிறார். அரசியல் ரீதியாக இதுவொருபக்கம் நிகழ, சட்ட ரீதியாகவும் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

முன்னதாக, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்தான வாக்குறுதிகளை எதிர்த்தும், அப்படி இலவசங்களை அறிவிக்கும் கட்சியின் சின்னங்களை முடக்கி, பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய என்.வி. ரமணா, ``இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? இலவச அறிவிப்பு தீவிரமான பிரச்னை என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இலவச அறிவிப்புகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

பட்டினியால் தவித்த மக்களுக்கு மத்திய அரசு திட்டங்களை வைத்துள்ளது. இந்தியா போன்ற நாட்டில் இலவசங்கள் வேண்டாம் உத்தரவிட முடியாது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதை பரிசீலிக்க முடியாது

ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த மாநிலத்தின் பொருளாதாரம் நிலை குறித்து தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது” என்றார். மேலும் தனது பதவி காலத்தில் இந்த வழக்கில் ஒரு முடிவை அவர் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில், என்.வி. ரமணாவின் பதவிக்காலம் வரும் 26-ம் தேதியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை துஷார் மேத்தா, `` சில கட்சிகள், இலவசங்களை வழங்குவதை சமீபகாலமாக ஒரு கலையாகவே மாற்றிவிட்டன. இது, பொருளாதாரப் பேரழிவுக்கு வழிவகுக்கும்" என்று வாதிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/freebies-and-the-social-welfare-scheme-are-different-says-cji-nv-ramana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக