நகைச்சுவையைப் பொறுத்தவரை தங்கள் 'குரு' யார்?
என் தந்தைதான் என் குரு. மெட்டல்பாக்ஸ் கம்பெனியில் என் தந்தை பணியாற்றியபோது, பொழுதுபோக்குக்காக நாடகங்களில் நடித்தார். அவர் நடிப்பைப் பார்த்துத்தான் நானும் நடிகனாவதற்கு ஆசைப்பட்டேன்.
பல நகைச்சுவை நடிகர்களோடு சில படங்களில் நீங்கள் நடித்தபோது, யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்னை குறுக்கிட்டதா?
நான் வளர்ந்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ். அங்கு நான் பல ஒழுங்குகளைக் கற்றவன். இம்மாதிரி சில்லறைத் தகராறுகளுக்கு நான் செல்வது வழக்கமில்லை.
தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், 'சோ' - இவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லுங்களேன்?
எனக்குத் 'தேங்காய்' என்ற பட்டத்தை அளித்தவரே தங்கவேலு அவர்கள்தான். நகைச்சுவையில் புதிய திருப்பத்தை உண்டாக்கியவர் சந்திரபாபு. நகைச்சுவை நடிகர்களையே சிரிக்க வைத்தவர் நாகேஷ். நகைச்சுவையோடு எல்லாரையுமே எதிர்க்கின்ற ஒரு துணிச்சலான மனிதர் 'சோ'.
மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது...?
ஜோசப் தளியத்தின் 'இரவும் பகலும்' படத்தில் நகைச்சுவை நடிகனா முதன்முதல் ஒப்பந்தமாகி, 2000 அடி எடுத்த பிறகு, எனக்கு அட்வான்ஸா 301 ரூபாய் கொடுத்தாங்க. அதை எடுத்துக்கிட்டுத் திருப்பதி போய்ப் பிரார்த்தனை செய்துட்டுத் திரும்பினேன். திரும்பி வந்த எனக்கு ஓர் அதிர்ச்சி! ஜோசப் தளியத் என்னைக் கூப்பிட்டு 'வியாபார நோக்கத்துக்காக நாகேஷைப் போட்டுட்டோம். நீங்க இந்தப் படத்திலே இல்லே' என்று கூறிவிட்டார். அதுக்காக நான் ஏழு மலையானையும் நிந்திக்கலை; ஜோசப் தளியத்தையும் மறக்கலை!
பல படங்களில் உங்களை மெட்ராஸ் பாஷையில் பேச வைக்கிறார்களே, அது உங்களுக்குப் போரடிக்கவில்லையா?
எனக்குப் போரடித்தாலும், ரசிகப்பெருமக்களுக்குப் போரடிக்கவில்லை என்பது அவர்கள் வரவேற்பில் இருந்தும், கடிதங்களிலிருந்தும் தெரிகிறதே!
- சுந்தரம்
(தேங்காய் சீனிவாசன் பேசுகிறார்! என்ற தலைப்பில் 26.11.1972 தேதியில் ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
source https://cinema.vikatan.com/tamil-cinema/thengaai-srinivasans-interview-from-1972
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக