ஏன் இரண்டாவது விமான நிலையம்:
சென்னை மீனம்பாக்கத்திலுள்ள பன்னாட்டு விமானநிலையம், டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மிக அதிகளவு சரக்குகளை கையாளும் தளமாகவும், மிக அதிகமான பயணிகள் வந்துசெல்லும் தளமாகவும் விளங்குகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை சென்னை விமானநிலையம் கையாண்டு வருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்களும் வந்துபோகின்றன.
இந்த நிலையில், நாளுக்குநாள் உள்நாடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலையத்துக்கு படையெடுக்கும் பயணிகளால் போக்குவரத்து நெரிசலும், குறித்த நேரத்துக்கு விமான நிலையத்தை அடையமுடியாத சூழலும் ஏற்பட்டுவருகிறது. மேலும், தொழில்துறை வளர்ச்சி போன்ற காரணங்களால், சென்னையை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தப் பிரச்னைகளை சரிகட்ட சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இருப்பினும், கூடுதலாக மற்றொரு விமான நிலையத்தை அமைத்தால்தான் எதிர்காலத்தில் இடநெருக்கடியை சமாளிக்க முடியும், அதுதான் தொலைநோக்கு திட்டமாக இருக்கும் எனக் கருதி, கடந்த பல ஆண்டுகளாகவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.
பரந்தூரில் இரண்டாவது விமானநிலையம்:
அந்த நிலையில், சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர், பட்டாளம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் ஆகிய நான்கு இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யது. பின்னர், இந்திய விமான நிலைய ஆணையக் குழுவினர் கள ஆய்வு நடத்தி பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை இறுதி செய்தனர். பன்னூரில், 4,500 ஏக்கர் நிலத்தையும், பரந்தூரில், 4,791 ஏக்கர் நிலத்தையும் கண்டறிந்து இரண்டு இடங்களிலும் விமான ஓடுபாதைகளுக்கு போதுமான இடமும் வான்வெளியும் இருப்பதாக மத்திய அரசிடம் முன்மொழிந்தனர்.
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு:
அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 26-ம் தேதி தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கு இரண்டு இடங்களில் இறுதியாக ஒரு இடத்தை தேர்வு செய்வது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, தி.மு.க எம்.பி. கனிமொழி, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்துப்பேசிய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், ``காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவிருக்கிறது" என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வரவேற்பும், எதிர்ப்பும்:
இந்தத் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் (One Trillion Dollar) பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" என பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, `பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசின் வசம் 4,000 ஏக்கர் நிலம் தயாராக இருப்பதாகவும், இன்னும் 1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியிருப்பதாகவும்' தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விமான நிலையம் மட்டும அமைந்தால் காஞ்சிபுரம், ஶ்ரீ பெரும்புதூர் பகுதியில் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
அதேசமயம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மீனம்பாக்கம் விண்ணூர்தி நிலையத்தினை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வரும் நிலையில், அவசர அவசரமாகப் புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன வந்தது? உண்ண உணவு தரும் விளைநிலங்களையும், குடிப்பதற்கு நீர் தரும் நீர்நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் அழித்தொழித்து அதன்மீது ஓடுபாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என்று அரசே கூறுவதை எப்படி ஏற்க முடியும்? நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டடங்களை இடிப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்குத் தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?" என சரமாரியாக எதிர்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், ``மக்களின் எதிர்ப்பினையும் மீறி, 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விண்ணூர்தி நிலையம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது" என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பல சமூக ஆர்வலர்கள், திட்டத்தை இறுதி செய்யும் முன் அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/chennais-second-airport-at-parandur-positive-and-negative-responses
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக