Ad

திங்கள், 4 ஏப்ரல், 2022

SRH vs LSG: ராகுலின் பஞ்சாப்பிடம் இல்லாதது, ராகுலின் லக்னோவிடம் உண்டு; சன்ரைசர்ஸ் விடியல் எப்போது?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காலத்திற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு விடிவுகாலம் பிறக்க வழியே இல்லை என்பதை போன்ற ஒரு பெர்ஃபார்மென்ஸை அந்த அணி கொடுத்திருக்கிறது.

கேன் வில்லியம்சன் விரும்பியபடி போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் டாஸை சன்ரைசர்ஸே வென்றிருந்தது. ட்ரெண்ட்படி தாங்களும் சேஸ் போவதாக அறிவித்தார் வில்லியம்சன்.

வாஷிங்டன் சுந்தர் | SRH vs LSG

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்திருந்தது. பவர்ப்ளேயில் லக்னோ அணியை போட்டு புரட்டி எடுத்திருந்தார்கள். புவனேஷ்வர் குமாரும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் கட்டுக்கோப்பாக வீசியிருந்தனர். குறிப்பாக, வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக வீசியிருந்தார். பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வீசியிருந்த வாஷிங்டன் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டுமே இடது கை பேட்டர்களின் விக்கெட்டுகள். டீகாக், எவின் லீவிஸ் என இருவருமே அபாயகரமான வீரர்கள்.

வாஷிங்டன் சுந்தர் இவர்களுக்கு ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக மிடில் & லெக் ஸ்டம்பில் இடமே கொடுக்காமல் டைட்டாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வாஷியின் டி20 கரியரிலேயே அவர் எந்தப் பகுதியில் நன்றாக பந்துவீசியிருக்கிறார் எனக் கேட்டால், பவர்ப்ளே என்றே பதில் வரும். 2020 சீசனில் வாஷியை ஆர்சிபி அணி பவர்ப்ளேயில் திறம்பட செயல்பட வைத்திருந்தது. அந்த ரெக்கார்டுகளை மனதில் வைத்தே வில்லியம்சன், வாஷியின் கைகளில் பந்தை கொடுத்திருக்கலாம் அல்லது இரண்டு இடது கை பேட்டர்கள் அடுத்தடுத்து இறங்கவிருந்ததாலும் மேட்ச் அப்பின் படி ஆஃப் ஸ்பின்னரான வாஷிக்கு பந்து சென்றிருக்க வேண்டும்.

SRH vs LSG
காரணம் எதுவாயினும் வாஷிங்டன் சுந்தர் வீசிய அந்த 3 ஓவர்கள் ஆட்டத்தை மொத்தமாக சன்ரைசர்ஸ் பக்கமாகத் திரும்பியிருந்தது. எக்கனாமிக்கலாகவும் வீசியதால் வாஷி ஏற்படுத்திய அழுத்தம் செஃப்பர்ட்டின் பந்திலும் விக்கெட்டை விழ வைத்தது.

கடந்த ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களில் 47 ரன்களைக் கொடுத்திருந்தார். அப்படியொரு மோசமான பெர்ஃபார்மென்ஸுக்கு பிறகு நடந்த அடுத்த போட்டியிலேயே இப்படி ஒரு வெறித்தனமான பவர்ப்ளே ஸ்பெல்லை வீசியிருப்பது தரமான கம்பேக்! வாஷிங்டன் சுந்தர் மட்டுமில்லை, இன்னொரு தமிழக வீரரான நடராஜனுமே அட்டகாசமாக வீசி கம்பேக் கொடுத்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளேயில் என்றால் நடராஜன் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசியிருந்தார். ஸ்லோயர் ஒன்கள், ஷார்ட் பிட்ச் டெலிவரிக்கள், யார்க்கர்கள் எனக் கலந்துக்கட்டி அசத்திய நடராஜன் ஒரே ஓவரில் கே.எல். ராகுலின் விக்கெட்டையும் க்ரூணால் பாண்ட்யாவின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். நடராஜன் வீசிய பெரும்பாலான யார்க்கர்கள் துல்லியமாக விழுந்துருந்தன.

நடராஜன் | SRH vs LSG

நடராஜன், வாஷி, புவனேஷ்வர் குமார் இந்த மூவருமே மிகச்சிறப்பாக பந்துவீசி தங்களுடைய ஓவர்களை நன்றாகவே நிறைவு செய்திருந்தனர். இந்த மூவருமே இணைந்து வீசியிருந்த 12 ஓவர்களில் 79 ரன்களை மட்டுமே லக்னோ அணியால் எடுக்க முடிந்தது. எனில், லக்னோவின் ஆட்டம் மீதமிருந்த 8 ஓவர்களில்தான் சூடே பிடித்திருக்கிறது. உம்ரான் மாலிக், ரோமாரியோ செஃப்பர்ட், அப்துல் சமத் என மீதமிருந்த 8 ஓவர்களை வீசிய பௌலர்கள் கொஞ்சம் சுமாராகவே வீசியிருந்தனர். இந்த 8 ஓவர்களில்தான் லக்னோ அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் ஒன்று அமைந்ருந்தது. ரன்ரேட் சீரானது. ராகுல் அரைசதம் அடித்திருந்தார். தீபக் ஹுடா அரைசதம் அடித்திருந்தார்.

பஞ்சாப் அணியில் ஆடும்போது ராகுலை மையமாக வைத்து அவரை சுற்றி மற்ற பேட்டர்கள் ஆடியிருக்கமாட்டார்கள். ஆனால், இங்கே லக்னோவில் அது நடந்தது. ராகுல் ஒரு முனையில் கொஞ்சம் மெதுவாக விக்கெட்டே விடாமல் நின்று கொண்டிருக்க, இன்னொரு முனையில் தீபக் ஹூடா அனுபவமற்ற உம்ரான் மாலிக் போன்ற பௌலர்களை வெளுத்தெடுத்தார்.

வேகவேகமாக ரன்கள் சேர்த்து ராகுலுக்கு முன்பாகவே அரைசதத்தையும் கடந்தார் ஹூடா. இருவரும் இணைந்து 87 ரன்களை அடித்திருந்தனர். கடைசிக்கட்டத்தில், ஆயுஷ் பதோனி கொஞ்சம் அதிரடி காட்ட லக்னோ அணி போட்டியளிக்கக்கூடிய வகையில் 170 ரன்களை எடுத்திருந்தது.

ராகுல், தீபக் ஹூடா | SRH vs LSG

20 ஓவர்கள் நின்றாலே வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது. கடந்த சீசனிலெல்லாம் சன்ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டர் பயங்கர வலுவாக இருக்கும். மிடில் & லோயர் மிடில் ஆர்டர் பயங்கர வீக்காக இருக்கும். இந்த முறை அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. ஓப்பனிங்கில் இறங்கும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே அதிரடியாக ஆட முயற்சி செய்து அது கைகூடாமல் கோட்டைவிடுகின்றனர். இவர்கள் இருவரின் விக்கெட்டையுமே ஆவேஷ் கான் பவர்ப்ளேயிலேயே வீழ்த்தியிருந்தார்.

ஆவேஷ் கான் | SRH vs LSG

பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆவேஷ் கான் டெத் ஓவரிலும் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தியிருந்தார். இந்த 4 விக்கெட்டுகளுன் போட்டியையே மாற்றியது என்றாலும் மிகையில்லை. திரிபாதியும் பூரனும் மட்டுமே போட்டியை உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையில் கொஞ்சம் அதிரடியாக ஆடி கொடுத்தனர். திரிபாதி டெத் ஓவர்கள் வரை நின்று பெரிய இன்னிங்ஸை ஆடி பரபரப்பைக் கூட்டுவார் என எதிபார்க்கையில், க்ரூணால் பாண்டியா திரிபாதியின் விக்கெட்டை லாகவமாக வீழ்த்தியிருந்தார். எய்டன் மார்க்ரமின் விக்கெட்டையுமே க்ரூணால் பாண்ட்யாவே வீழ்த்தியிருந்தார்.

பூரன் & வாஷிங்டன் சுந்தர் என இரண்டு இடதுகை பேட்டர்கள் க்ரீஸிலிருந்த போது அசால்ட்டாக சடசடவென ஓவர்களை வீசிவிட்டு சென்றார் க்ருணால். கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பூரன் நின்றிருந்ததால் ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

க்ருணால், ராகுல் | SRH vs LSG

ஆனால், அந்தச் சமயத்தில்தான் ஆவேஷ் கான் வெறித்தனமாக 18 வது ஓவரை வீசியிருந்தார். ஒரு ஃபுல் டாஸில் லாங்க் ஆஃபில் தூக்கியடித்து பூரன் கேட்ச் ஆகியிருந்தார். அடுத்த பந்திலேயே அதிரடி வீரரான அப்துல் சமத்தும் எட்ஜ் ஆகி வெளியேறினார். இவ்வளவுக்கு பிறகுமே கூட சன்ரைசர்ஸ் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. க்ரீஸில் நிற்கும் வாஷிங்டன்னும் செஃப்பர்ட்டும் எதாவது மேஜிக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

SRH vs LSG

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. இதுதான் மேஜிக்கை நிகழ்த்த வேண்டிய இடம். எதிர்பார்த்தபடியே மேஜிக் நிகழ்ந்தது. ஆனால், நிகழ்த்தியது வாஷியோ செஃல்பர்டோ அல்ல, ஹோல்டர். கடைசி ஓவரை வீசிய ஹோல்டர் அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளைத் தூக்கியிருந்தார். முதல் பந்தில் வாஷியும் கடைசி பந்தில் செஃப்பர்டும் காலி. நடுவில் புவனேஷ்வர் ஏதேதோ முயன்றிருந்தார். மொத்தத்தில் சன்ரைசர்ஸ் இந்தப் போட்டியிலும் உதயமாகவில்லை. 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியே மிஞ்சியது.

விடியறதுக்கு வாய்ப்பே இல்லையா சார்?



source https://sports.vikatan.com/ipl/another-day-another-loss-for-sunrisers-hyderabad-as-lucknow-marches-ahead

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக