'யோவ் மிலிட்டரி நீ எங்க இங்க?' மோடில்தான் இருக்கிறார்கள் சென்னை - மும்பை அணி ரசிகர்கள். வழக்கமாய் டேபிள் டாப் இடத்திற்கு அடித்துக்கொள்பவர்கள் சின்னம்மாவைப் பார்த்த அ.தி.மு.க தலைவர்கள் போல தரையோடு தரையாய் இருக்கிறார்கள் டேபிளில். சன்ரைஸர்ஸுக்கு பிரச்னையில்லை. கடந்த சில சீசன்களாக மொத்தமாய் கடைசி இடத்தை குத்தகைக்கு எடுத்து உட்கார்ந்திருப்பதால் கவலை இல்லை. 'நாங்க எப்பவுமே முதல் ரெண்டு மேட்ச்சு அப்படித்தான். இந்த மேட்ச்சு பாருங்க. டாப்பா வந்துடுவோம்' என வீறுகொண்டு கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் களமிறங்கியது மும்பை.
ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்திறங்கி அவர்களுக்கு க்ரீன் சிக்னலும் கிடைத்துவிட்டதால் இந்த ஆட்டத்தில் கொல்கத்தா முகாமில் சவுதிக்கு பதில் களமிறங்கினார் பேட் கம்மின்ஸ். ஷிவம் மவிக்கு பதில் ரஷிக் சலாம். மும்பை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மாற்றங்கள். ஒருவழியாக அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் உள்ளே வந்தார். இந்திய ரசிகர்கள் ஆவலாய் காத்திருந்த குட்டி ஏபிடி ப்ரெவிஸின் வருகையும் நிகழ்ந்தது.
டாஸ் எல்லாம் ஜெயித்தால் இனி பேட்டிங்கா பீல்டிங்கா என கேட்கவே தேவையில்லை போல. சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரேயாஸ். ஆங்கிலத்தில் 'Revelation' என்றொரு வார்த்தையுண்டு. குத்துமதிப்பாக மொழிபெயர்த்து ஐ.பி.எல்லோடு பொருத்திப்பார்த்தால் 'அதிசயம்' என சொல்லலாம். அப்படியொரு ரெவலேஷன் உமேஷ் யாதவ். இவரை ஏலத்தில் கொல்கத்தா எடுத்தபோது கமுக்கமாகச் சிரித்தவர்கள் ஏராளம். அத்தனை பேருக்கும் தன் சூப்பரான ஸ்பெல்களின் மூலம் பதில் சொல்லிவருகிறார் உமேஷ். இந்தப் போட்டியிலும் முதல் ஓவரில் வெறும் ஒரு ரன்தான். அடுத்த ஓவரில் ரஷிக்கும் டைட்டாக பந்து வீச வெறும் மூன்று ரன்கள்தான்.
இரண்டு நல்ல ஓவர்கள், அதுவும் பவர்ப்ளேயில் என்றால் பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் ஏறும். இந்த முறை அது ரோஹித்தின் தலையில்! கடந்த சீசனிலிருந்தே, 'வளர்ற பிள்ளைக சாப்பிடட்டும்னு பீஸை எல்லாம் அதுங்களுக்கு கொடுத்துட்டு குஸ்கா மட்டும் சாப்பிட்டேன்' மோடில்தான் ஆடுகிறார் ரோஹித். ஒரே ஒரு அரைசதம். 'மத்ததெல்லாம் கீழ வர்றவன் பார்த்துக்குவான்' என மோசமான ஷாட் ஆடி அவுட் ஆவது. அது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. உமேஷின் பந்தில் தலைக்குப் பின்னால் தூக்கியடித்து அவுட். ஒன் டவுன் இறங்கிய ப்ரெவிஸ் வந்தவுடன் சில பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். ப்ரெவிஸ் க்ரீஸில் நடனமாடி பந்தைப் பறக்கவிடுவதைப் பார்த்தாலே நமக்கும் எனர்ஜி தொற்றிக்கொள்கிறது. இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என 29 ரன்கள் எடுத்துவிட்டு பில்லிங்ஸின் சூப்பரான ஸ்டம்பிங்கில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் எப்போதும் அதிரடியாய் தொடங்கும் இஷான் கிஷன் வழக்கத்திற்கு மாறாய் பொறுமையாகவே ஆடினார். டைமிங் மிஸ்ஸாவதை கண்கூட பார்க்க முடிந்தது. விளைவு அப்படி ஒரு ஷாட்டில் சுலபமான கேட்ச் கொடுத்து அவுட்டானார். களத்திற்கு வந்தார் இந்த ஆண்டு மும்பை கண்டெடுத்த முத்து திலக் வர்மா. அடுத்த ஓவரில் உமேஷ் வீசிய பந்து அவரின் டாப் எட்ஜில் பட்டு நிலாவை முத்தமிட்டுவிட்டு வர, 'எவ்ளோ அழகா சொய்ய்ய்ங்னு பறக்குது பாரேன்' என பேச்சு மும்முரத்தில் உமேஷ், பில்லிங்ஸ், ரஹானே மூன்று பேரும் கோட்டைவிட நடுவில் விழுந்து தப்பித்தது பந்து. 'தப்பு பண்ணீட்டியே குமாரு' என அந்த மொமென்டமில் அடித்து வெளுத்தார் சூர்யகுமார் யாதவ்.
ஓவருக்கு இப்படி ஒரு பவுண்டரி போனாலும் ஸ்கோர் என்னவோ பெரிதாக ஏறவில்லை. இதற்கு முன் ஆடியிராத ப்ரெஷ்ஷான புனே விக்கெட் என்பதால் பந்தைக் கணிப்பதில் பேட்ஸ்மேன்களுக்குச் சிக்கலிருந்தது. ஆனாலும் சீனியர் சூர்யாவும் ஜுனியர் வர்மாவும் சேர்ந்து முடிந்தவரை போராடினார்கள். அதுவும் கம்மின்ஸ் பந்தை இளங்கன்று வர்மா ஸ்கூப்பில் சிக்ஸ் அடித்ததெல்லாம் வொண்டர் வொண்டர்! முதல் மூன்று ஓவர்கள் சூப்பராக போட்டார் என்பதால் வருணை வைத்திருந்து 17வது ஓவர் போடவிட்டார் ஸ்ரேயாஸ். '17வது ஓவருக்கு 17 ரன்னு. சரியா போச்சு போ' என வழியனுப்பி வைத்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். அடுத்த ஓவர் மற்றுமொரு மிஸ்ட்ரி ஸ்பின்னரான நரைன் வர, அவரையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்தார்கள்.
ரஸல் வீசிய அடுத்த ஓவரில் அரைசதம் கடந்தார் சூர்யா. கடைசி ஓவரில் கம்மின்ஸ் அவரை பெவிலியனுக்கு அனுப்ப, 'தம்பி டெத் ஓவர்ல எப்படி அடிக்கணும்னு சொல்லித் தர்றேன் வா' என அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறக்கவிட்டு ஐந்தே பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் பொல்லார்ட். ஆனால் திட்டம் போட்டு எல்லாம் இல்லை. பேட்டில் பட்ட வேகத்திற்கு சிக்ஸர்கள் பறந்தன. அவர் புண்ணியத்தில் 161 ரன்கள் எடுத்தது மும்பை. 'என்னையா வெளுக்குறீங்க... இருங்க வர்றேன்' என டவலால் துடைத்தபடி இன்னிங்ஸ் பிரேக் போனார் கம்மின்ஸ்.
கொல்கத்தாவிற்கும் அப்படியொன்றும் சுலபமாக எல்லாம் ரன்கள் வந்துவிடவில்லை. முதல் நான்கு ஓவர்களில் வெறும் 16 ரன்கள்தான். ரோஹித் போலவே பிரஷருக்குப் பலியானார் ரஹானே. பாடிலைனில் வந்த பந்தை கேட்ச்சுக்குக் கொடுத்து அவுட். அநேகமாய் சூப்பரான பார்மில் ஐ.பி.எல் ஆடவந்த ஒரே இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயராகத்தான் இருக்கும். ஆனால் சர்வதேச போட்டிகளில் செய்ததை ஏனோ கொல்கத்தா ஜெர்ஸியில் செய்யத் தடுமாறுகிறார். இந்தப் போட்டியிலும் 10 ரன்களில் அவுட்.
இன்னொரு முனையில் நின்றிருந்த வெங்கடேஷ் ஐயரோ எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை சுமந்து இந்த சீசனுக்குள் வந்தவர். ஆனால் க்ளிக்காக வில்லை. அதை மனதில் வைத்தோ என்னவோ பொறுமையாகவே ஆடினார். சிக்கும் பந்தை மட்டும் முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு இழு இழுப்பது என்கிற அவரின் ஆட்டம் நன்றாகவே கைகொடுத்தது. சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா என மறுமுனையில் விக்கெட்கள் விழுந்தபடி இருந்தாலும் வெங்கடேஷ் ஊன்றிய காலை அசைக்கவே இல்லை.
ரஸல் வருவார் என்பதற்காகவே பும்ராவையும் மில்ஸையும் பொத்திப் பொத்தி வைத்திருந்தார் ரோஹித். ரஸல் வரவும் அவரிடம் பந்தைக்கொடுக்க அந்த ஓவரில் 12 ரன்கள். நூறு ரன்களை 13வது ஓவரில் கடந்தது கொல்கத்தா. அடுத்த ஓவர் மில்ஸ் வர கை மேல் பலன். குருட்டுச்சுற்று சுற்றி கேட்ச் கொடுத்து வெளியே போனார் ரஸல். வெற்றிக்குத் தேவை 61 ரன்கள். கைவசமிருந்தது 41 பந்துகள்.
'பத்து பால்ல என்னை வெளுத்தாங்கன்னுதானே தெரியும். எனக்கு பத்து பால் கிடைச்சா என்ன பண்ணுவேன்னு தெரியாதுல?' என 'கைதி' கார்த்தி மாடுலேஷனில் வந்திறங்கிய உடனேயே பத்து ரன்கள் எடுத்தார் கம்மின்ஸ்.
அடுத்த ஓவர் பும்ரா. மற்றவர்களிடம் எல்லாம் ஜுராசிக் பார்க் போல டெரர் காட்டும் பும்ராவை 'வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க்' ரேஞ்சில் டீல் செய்தார் கம்மின்ஸ். அந்த ஓவரில் 12 ரன்கள். சூப்பர் பௌலருக்கே இந்த கதி என்றால் சாதா பௌலரின் கதியை சொல்லவா வேண்டும்?
டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில் திருச்சூர் பூரத்தின்போது போடப்படும் வாணவேடிக்கைகளே தோற்றுப் போனது. 6, 4, 6, 6, 4, 6 என புக் கிரிக்கெட்டில் லைட்டாய் விரல் வைத்து ஏமாற்றும் குட்டிப்பையன் போல இரக்கமே காட்டாமல் பொளந்தார் பேட் கம்மின்ஸ். 'ஒரு ஆல்ரவுண்டருக்கு ஆல்ரவுண்டர் இரக்கம் காட்டலாம்லண்ணே' என சாம்ஸ் கண்ணீர்விட்டதெற்கெல்லாம் மசியவே இல்லை. 14 பந்துகளில் அரைசதம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக சதம் என்கிற சாதனையை ராகுலோடு பங்கு போட்டுக்கொண்டார் கம்மின்ஸ்.
ஒரே ஓவரில் 35 ரன்களென்றால் பின் இலக்காக என்ன மிஞ்சும்? 'இந்தக் கருமத்தையா இவ்வளவு நேரமா சேஸ் பண்ணிகிட்டு இருந்தீங்க?' என பரவை முனியம்மா ஸ்டைலில் சிம்பிளாக முடித்துவைத்த பேட் கம்மின்ஸ்தான் மேன் ஆப் தி மேட்ச்.
'நாங்களாவது தோக்கப்போற மேட்ச்சைத்தான் தோக்குறோம். ஆனா நீங்க பலே ஆளு பங்காளி. ஜெயிக்கப்போற மேட்ச்சையே தோக்குறீங்களே!' என சென்னையே கேட்குமளவிற்குத்தான் இருக்கிறது மும்பையின் நிலைமை. சாம்ஸ், டிம் டேவிட் என இந்தியக் களங்களில் அதிகம் பரிச்சயப்பட்டிருக்காத வீரர்களை வைத்து ப்ளேயிங் லெவன் ப்ளான் செய்யப்பட்டபோதே 'இது பிரச்னையாகும்' என எதிர்பார்த்ததுதான்.
போக கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையின் வெற்றி என்பது பும்ராவின் பார்மைப் பொறுத்தே. மூன்று ஆட்டங்களில் மூன்றே விக்கெட்கள். அதுவும் 8.32 எகானமியில் என்பதில் ஒளிந்திருக்கிறது மும்பையின் தொடர் தோல்விகளுக்கான காரணம்.
source https://sports.vikatan.com/ipl/ipl-2022-pat-cummins-destroyed-mumbai-and-their-hopes-of-opening-the-account
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக