ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடி பகுதியைச் சேர்ந்தவர் செளமியா தேவி. இவர் திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள என்.ஐ.டியில் பி.டெக் சிவில் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற மாணவியும் ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று தமிழ் வருடப்பிறப்பு விடுமுறையையொட்டி தீட்சனா திருச்சியிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஹாஸ்டல் அறையில் செளமியா தேவி மட்டும் இருந்துள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தீட்சனா ஹாஸ்டலுக்கு திரும்பி வந்தபோது, அவர் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்திருக்கிறது.
நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் அறையினுள் இருந்த செளமியா தேவியிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை. உடனே பக்கத்து அறை தோழிகள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், அறையிலிருந்த ஃபேனில் செளமியா தேவி தூக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடந்துள்ளார்.
அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீட்சனா மற்றும் அங்கிருந்த மாணவிகள் உடனடியாக ஹாஸ்டல் வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையே துவாக்குடி போலீஸாரும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, செளமியா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமமைக்கு அனுப்பி வைத்தனர். செளமியா தேவி ஹைதராபாத்தில் படிக்கும்போது ஒருவரையும் காதலித்து வந்ததும், அந்தக் காதல் விவகாரத்தால் ஒருவேளை அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``சம்பவத்தன்று உயிரிழந்த செளமியா தேவிக்கும் அவருடைய காதலனுக்கும் இடையில் ஏதோ பிரச்னை நடந்திருக்கிறது. இருவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். செளமியா தேவி உயிரிழப்பதற்கு முன்பு கூட கடைசியாக அவரின் காதலனிடம் தான் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில் செளமியா தேவி \போனை எடுக்காததால் அவரின் காதலன் ரூம் மேட்டான தீட்சனாவிற்கு போன் செய்து, ``நான் ரொம்ப நேரமா அவளுக்கு போன் ட்ரை பண்றேன். எடுக்கவே மாட்டேங்குறா. கொஞ்சம் ரூமுக்கு போய் பாருங்க’” எனச் சொல்லியிருக்கிறார். ஆகவே, காதல் விவகாரத்தால் தான் செளமியா தேவி உயிரிழந்திருக்கக் கூடும். செளமியா தேவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். ஆந்திராவில் இருந்து அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்தத் தற்கொலை விவகாரம் குறித்து செளமியா தேவியின் பெற்றோர் மற்றும் அவரின் காதலரிடமும் விசாரணை செய்யவிருக்கிறோம்” என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/trichy-nit-student-commits-suicide-what-happened
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக