பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அந்நாட்டு நாடாளுமன்ற துணை சபாநாயகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார். பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதியை சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்கும்படி பரிந்துரை செய்தார். அதனை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதோடு 90 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இரண்டு நாள்களாக நடந்த விசாரணையில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்ததற்கு தடை விதித்த நீதிபதிகள், வரும் சனிக்கிழமை இம்ரான்கான் அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது என்று தெரிவித்த நீதிபதிகள், நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவும் செல்லுபடியாகாது என்று தெரிவித்தனர்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த உச்ச நீதிமன்றம், 9ம் தேதி, அதாவது நாளை காலையில் நடைபெற இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வன்முறை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத்தில் நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வி அடையும் பட்சத்தில் புதிய பிரதமர் பதவி ஏற்பார். நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் வரை அவையை சபாநாயகர் ஒத்திவைக்ககூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் 63ஏ அரசியல் சாசனச்சட்டம் மீறப்படக்கூடாது என்றும், பிரதமர் இம்ரான் கான் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு இம்ரான்கானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று இம்ரான்கான் நினைத்தார். ஆனால் இப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
பெரும்பான்மை இல்லாத இம்ரான்கான்:
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் வெற்றி பெற நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் தற்போதுள்ள நிலவரப்படி எதிர்க்கட்சிகளுக்கு 199 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இம்ரான்கானின் தக்ரீம்-இ-இன்சாப் கட்சிக்கு 144 பேரின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, ``உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு மக்களுக்கான தீர்ப்பு. தீர்ப்பு பொன்னெழுத்துக்களால் எழுதப்படவேண்டியவை” என்று குறிப்பிட்டார். பாகிஸ்தானில் இதற்கு முன்பு பெரும்பாலான பிரதமர்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் ராணுவத்தால் பதவி இழந்தவர்கள் ஆவர். இதனால் ராணுவத்தின் மீது அதிருப்தி இருந்தாலும் பாகிஸ்தான் பிரதமர்கள் எப்போதும் ராணுவத்தின் சொல்படி கேட்டுத்தான் நடக்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்கள் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சியை பிடித்தார். ஆனால் ஆட்சி முடியும் முன்பே பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ``பாகிஸ்தானுக்காக தான் எப்போதும் கடைசி பந்து வரை போராடுவேன்” என ட்விட்டரில் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார், முடிவு நாளை தெரியும்.
source https://www.vikatan.com/government-and-politics/international/no-confidence-motion-against-imran-khan-government-in-pakistan-tomorrow
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக