Ad

புதன், 6 ஏப்ரல், 2022

`இந்தியா, ரஷ்யாவிடம் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்!’ - அமெரிக்கா

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவரும் போரில், அமெரிக்கா வெளிப்படையாகவே உக்ரைனுக்கு ஆதரவாக மனிதாபிமான உதவிகளையும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் விதித்துவருகிறது. அமெரிக்காவின் இந்த முடிவால் அதன் நட்பு நாடுகளான கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா, ரஷ்யா - உக்ரைன் என எந்தத் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்துவருகிறது. மேலும், ராணுவத் தளவாடங்கள் வாங்குதல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றில் ரஷ்யாவுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. உக்ரைன் போர் எதிரொலியாக, அமெரிக்கா, ரஷ்யா-இந்தியா உறவை அவ்வப்போது விமர்சித்துவந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற ராணுவ சேவை கமிட்டியின் வருடாந்தரக் கூட்டத்தில், ரஷ்யாவின் ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்குவது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) பேசியுள்ளார்.

புதின்-மோடி

நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய லாயிட் ஆஸ்டின், ``ரஷ்யாவிடம் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதை இந்தியா குறைக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. மேலும், இந்தியா தொடர்ந்து ரஷ்ய உபகரணங்களில் முதலீடு செய்வது இந்தியாவுக்கு நல்லதல்ல என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் தேவை என்னவென்றால், அவர்கள் முதலீடு செய்யும் உபகரணங்களின் வகைகளைக் குறைத்து, எங்களைத் தொடர்ந்து இணக்கமாக இருக்கச் செய்யும் விஷயங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான்" என்று கூறினார்.

முன்னதாக அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியான ஜோ வில்சன் (Joe Wilson), ``உலகின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் நமது நட்பு நாடான இந்தியா, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் விருப்பங்களைவிட, ரஷ்ய ஆயுத அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கிரெம்ளினுடன் இந்தியா தன்னை இணைத்துக்கொள்ளத் தேர்ந்தெடுத்துள்ளது" என இந்தக் கூட்டத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/international/us-says-expect-india-to-downscale-russian-military-equipment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக