Ad

திங்கள், 11 ஏப்ரல், 2022

அசைவ உணவு விவகாரம்: ஏபிவிபி அமைப்பினர் எதிர்ப்பு; ஜே.என்.யு மாணவர்களிடையே கடும் மோதல் - 6 பேர் காயம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் வார இறுதி நாள் என்பதால் வழக்கம் போல் அசைவ உணவு பரிமாறப்பட்டது. ஆனால் ராம நவமி என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி அமைப்பினர் விடுதி செயலாளரைத் தாக்கியதால், ஜே.என்.யு மாணவர் சங்கத்தினர் மற்றும் ஏ.பி.வி.பி அமைப்பினர் இடையே மோதல்ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜே.என்.யு மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டம் நடத்தியபோது, இருதரப்பினரும் கற்களை வீசிக்கொண்டு தாக்கிக்கொண்டதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இந்த மோதல் கலவரமாக நள்ளிரவில் மாறியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ், கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

ஜே.என்.யுவில் மாணவர்களிடையே கலவரம்

இதுகுறித்து போலீஸார், ``போராட்டம் நடத்து முடிந்துவிட்டது. இப்போதைக்கு வன்முறை ஏதுமில்லை. இருப்பினும் மாணவர்களிடையே அமைதிகாக்க நாங்கள் முயன்று வருகிறோம் என கூறினர். இந்த சம்பவம் குறித்து ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது குற்றம் சாட்டிய ஜே.என்.யு மாணவர் சங்கத்தினர், ``ஜே.என்.யு மற்றும் அதன் உணவகங்கள் என்பவை அனைத்தையும் உள்ளடக்கியது. இது குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று ஒன்றுமில்லை. ஜே.என்.யு மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கவே இதுபோன்ற கோமாளித்தனமான நடவடிக்கைகளை ஏ.பி.வி.பி அமைப்பினர் செய்கின்றனர்" என்று கூறியது.

தங்கள் மீதான ஐந்து குற்றச்சாட்டை ஏற்க மறுத்த ஏ.பி.வி.பி அமைப்பினர், ``ராமநவமியில் சிறப்பு பூஜை ஒன்றை காவேரி விடுதியில் மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் பல இடதுசாரிகள் வேண்டுமென்றே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூஜையைத் தடுத்தனர்” என கூறினார்.

இது தொடர்பாக ஜே.என்.யு மாணவி சரிகா, ``வார இறுதி நாள்களில் விடுதிகளில் அசைவ உணவுகள் பரிமாறப்படுவது வழக்கம். ஆனால், ஏ.பி.வி.பி அமைப்பினர் அதனை சாப்பிட அனுமதிக்கப்படுவதில்லை. இதன்காரணமாக ஏ.பி.வி.பி அமைப்பினர் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க முயன்றனர். பிற மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது" என ANI ஊடகத்திடம் கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/jnu-students-clash-over-meat-food-at-jnu-hostel-on-ram-navami

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக