1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பினால், மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதற்கு பல நாடுகள் திண்டாடி வருகின்றன. எனவே, மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் ஆகியவை மக்கள் தொகை பெருக்கத்தினால் நீடித்த பிரச்னைகளை எதிர்கொள்வதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உணவு, நீர், சுற்றுச்சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்னைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகள் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றன. இவை அதிகரிக்கும்போது பொருளாதார நெருக்கடியும் உருவாகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாக்கியம் நாம் வாழும் இந்த பூமிக்கும் பொருந்தும். மார்ச் 2020 நிலவரப்படி 7.8 பில்லியன் மக்கள் பூமியில் வாழ்கின்றனர். மேலும், தற்போது உலகை உலுக்கி வரும் கோவிட்-19 காரணமாகத் திட்டமிடப்படாத கர்ப்பங்களால் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
உலக மக்கள் தொகை தின வரலாறு:
1987 ஜூலை 11, உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது. இதைக் கருத்தில் கொண்டு 1989-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில், ஆளும் குழுவால் உலக மக்கள்தொகை தினமாக, ஜுலை 11-ம் தேதியை அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1990-ம் ஆண்டு, டிசம்பர் 45 /216 தீர்மானத்தின் மூலம் ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.
உலக மக்கள் தொகை தினத்தின் முக்கியத்துவம்:
இது அதிக மக்கள்தொகையின் சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சியில் அதிக மக்கள் தொகையின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், வறுமை, தாய்வழி சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இது பேசுகிறது.
உலக மக்கள் தொகை தினத்தின் தீம் 2020:
ஒவ்வோர் ஆண்டிலும் தனித்துவமான கருப்பொருளின் அடிப்படையில் மக்கள் தொகை தினத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் உலகெங்கிலும் உள்ள பெண்கள், சிறுமிகளின் உடல்நலம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது, குறிப்பாக COVID-19 தொற்றுநோய்களின் போது. சமீபத்திய யு.என்.எஃப்.பி.ஏ ஆராய்ச்சி 6 மாதங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்தால், சுகாதார சேவைகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 47 மில்லியன் பெண்களால் நவீன கருத்தடைகளை அணுக முடியாது. இது 7 மில்லியன் திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும். இது தவிர, பாலின அடிப்படையிலான வன்முறை, பெண் பிறப்புறுப்பு சிதைவு மற்றும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பல்வேறு சவால்கள்
உலக மக்கள் தொகை பல்வேறு சவால்களை, முரண்பாடுகளை, வளங்களில் சமத்துவமின்மைகளை எதிர்கொண்டுள்ளது. 84 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் இவ்வுலகில், 168 கோடி பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 75 கோடியினர் உடல் பருமன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஜனவரி 2020-ல், ஒரே நாளில் 23,474 பேர் உலகெங்கும் பட்டினியால் மடிந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உடல் பருமன் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக 430 கோடி டாலர்கள், 2020 ஜனவரியில், ஒரு நாளில் செலவிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்ப் பேரரசுகள் ஆண்ட காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அனைத்து நவீனங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை. எனவே, இந்திய வரலாற்றைக் கணக்கில் கொண்டால் மௌரியப் பேரரசு காலத்தில் சுமார் 2,370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. வரி விதிக்கவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில் ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.
பழைய வரலாறு:
உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த ரோமப் பேரரசு, சோழப் பேரரசுகள் மட்டுமல்ல பழங்குடி பேரரசுகள் இருந்த காலத்திலும் வருவாயை இலக்காகக் கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன. இப்படி, இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின. இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன. அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய, `அயனி அக்பரி’ என்ற நூலில், அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது.
Also Read: Corona Live Updates: `8 லட்சத்தை கடந்த பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்
அதைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில் (1687) அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்கள் தொடர்பான முழு விவரங்களைச் சேகரித்து தந்தார். பின்னர், 1853-ம் ஆண்டு வடமேற்குப் பகுதியில் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிறிஸ்டோப் குலிமிட்டா என்பவர் தலைமையில், 1871-ல் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போதுதான் மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.
இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி, எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில், பங்கேற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி மையத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுவதற்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டன. அதனடிப்படையில், 16 மொழிகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆண்டில்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியின்போது, இந்தியா - வங்கதேசம் ஒன்றாக இணைந்து, எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியல் இடுதலில், கட்டட எண் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனம் பற்றிய விவரங்கள் உட்பட 35 கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுபடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121,19,03,422 பேர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 62,37,24,248 எனவும், பெண்களின் எண்ணிக்கை 58,64,69,174 எனவும் கணக்கிடப்பட்டது.
``மக்களுக்குக் கல்வி அளிப்பது, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைக்கலாம் என்று காத்திராமல், காலத்தின் அருமையையும், நாட்டின் முன்னேற்றத்தையும் கருதி, நேரடியான குடும்பக் கட்டுப்பாடு முறைகளை மக்கள் பின்பற்றுமாறு செய்ய வேண்டும்” என்பதை 1975-ல் நெருக்கடி நிலை காலத்தில் மத்திய அரசு, தேசிய மக்கள் தொகைக் கொள்கையாக அறிவித்தது. இந்திராகாந்தி தலைமையிலான அரசு, இதற்கு ஓராண்டுக்கு முன் 1974-ல் நடைபெற்ற உலக மக்கள் தொகை மாநாட்டில், `வளர்ச்சியே சிறந்த கருத்தடைச் சாதனம்’ என்று முழங்கியது.
இந்தியாவின் இளவரசர்போல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியின் கெடுபிடியால் 70 லட்சம் பேருக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர். வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில், கருத்தடைச் சாதனங்களும் முறைகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, மக்கள் தொகை கிட்டத்தட்ட சமநிலையை எட்டிவிட்டது. இதற்கு, மக்களின் கல்வியும் வாழ்க்கைத்தரமும், மருத்துவ ஏந்துகளும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றதே காரணங்களாகும். இந்தியாவிலும் இத்தகைய நிலையை உருவாக்குவதன் வாயிலாகவே, கணவன்-மனைவி இணையருக்கு இரண்டு குழந்தைகள் என்ற நிலையை எய்திட முடியும். இந்தியாவில் கேரளமும் தமிழ்நாடும் இந்த இலக்கை அடைந்துள்ளன.
இந்திய அளவில் இந்த நிலை 2060-ல் உண்டாகும் என்றும், அப்போது இந்திய மக்கள் தொகை 165 கோடி என்ற அளவில் நிலைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று உலக மக்கள் தொகை 900 கோடி என்ற அளவில் நிலைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் உலகமயம் என்ற கோட்பாட்டால், பணக்காரன் - ஏழை இடையிலான வேறுபாடு விரிவடைந்துகொண்டே செல்கிறது. அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகி வருகிறது. எனவே, எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைவது ஐயத்திற்கிடமானதேயாகும்.
Also Read: 2200-ம் ஆண்டு உலக மக்கள்தொகை எவ்வளவு இருக்கும் தெரியுமா? #WorldPopulationDay
மக்கள் தொகைக் கோட்பாடு!
தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவரால் 19-ம் நூற்றாண்டில் மக்கள் தொகைக் கோட்பாடு (An Essay on the Principle of Population) ஒன்று வெளியிடப்பட்டது. இவர் தொழிற் புரட்சிக்குப்பின் மக்கள் தொகை வளர்ச்சியடைந்ததையும், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார, சமுதாய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வெளியிட்டார். மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் தலையாய பிரச்னையாகவும், அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ஏழை - பணக்காரர் எனப் பிரிவினை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது எனத் தெளிவுப்படுத்தினார். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, உடல் நலக்குறைவு போன்ற பிரச்னைகள் எழக்கூடும் என வலியுறுத்தினார். உலக அளவில் 30 கோடி ஏக்கர் நிலம் விவசாயத்துக்குப் பயன்படுகிறது. மகசூல் அதிகரிப்பினால் கடந்த 20 ஆண்டுகளில் இந்த விவசாய நிலப்பகுதி சிறிது அதிகரித்துள்ளது. இந்த உலகம் 330 கோடி மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க முடியுமாம்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு!
உலக மக்கள் தொகையில் 2-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதின் மூலம் ஒவ்வொரு நாட்டின் மக்கள் எண்ணிக்கை தெரியவரும். அதன் மூலம் மக்களின் தேவைகளின் அளவை அறியலாம், அவற்றை நிறைவேற்ற வழிகளை, வாய்ப்புகளைக் கண்டறியலாம். எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கணிக்கலாம். அதற்காகத் திட்டமிடலாம் எனப் பல வகைகளிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நமக்கு உதவும். அதனால்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பழக்கம் தொடங்கியது.
2027-ம் ஆண்டில் சீனாவின் எண்ணிக்கையை இந்தியா கடந்து விடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது. மக்கள் தொகைக் கொள்கையின் தந்தையாகப் போற்றப்படும் தாமஸ் ராபர்ட் மால்தஸ் `மக்கள் தொகை பெருகினால் எதிர்காலம் ஆபத்தானதாக மாறிவிடும்’ என்று உலகை எச்சரித்தவர். அதை உதாசீனப்படுத்தாமல் அரசும் மக்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
source https://www.vikatan.com/anniversaries/international/world-population-day-2020-raising-awareness-about-the-health-and-rights-of-women
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக