Ad

சனி, 11 ஜூலை, 2020

சாத்தான்குளம்: வியாபாரிகள் மரணம் முதல் சி.பி.ஐ விசாரணை வரை! - வழக்கு கடந்துவந்த பாதை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பான வழக்கு தற்போது சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ எஸ்.பி-யான விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள்

இதுவரை விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்கள் சி.பி.ஐ வசம் ஒப்படைத்துள்ளனர்.

Also Read: சாத்தான்குளம்: தலையில் உறைந்த ரத்தம்; மருத்துவச் சான்று! - அடுத்த சிக்கலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ

தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விசாரணையில் புதிய தகவல்கள் கிடைக்கும் என்றும் இருவரும் கொல்லப்பட்டதற்கான  உண்மையான காரணம் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையம்

தூத்துக்குடி வந்துள்ள சிபிஐ அதிகாரிகள், தங்களிடம் சிபிசிஐடி ஒப்படைத்த வழக்கின் ஆவணங்களை இரவு முழுவதும் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று சாத்தான்குளத்துக்கு நேரில் சென்று காவல்நிலையம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடமும் விசாரணையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

19.6.2020 (வெள்ளிக்கிழமை)

ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இருவரின் மீதும் 312/2020 என்ற வழக்கை 188, 269, 294(b), 353, 506(ii) IPC ஆகிய 5 பிரிவுகளின்கீழ் பதிவு செய்தனர். மறுநாள் இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

23.6.2020 (செவ்வாய்க்கிழமை)

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் இருந்தபோதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் 5 மணி நேர இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில்  649/2020, 650/2020 என்ற குற்றவழக்கு, 176 (1)A என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டது. 

கோவில்பட்டி குற்றவியல் நடுவர் பாரதிதாசன்

மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் சாத்தான்குளம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்பினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேநாளில் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணையைத் தொடங்கினார்.

1.7.2020 (புதன்கிழமை)

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சாத்தான்குளம் வழக்கைத் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். 

உயர்நீதிமன்ற மதுரை கிளை

சி.பி.ஐ விசாரணைக்கு வருவதற்கு முன்பாக சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிடக் கூடும் என்பதால் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர். அதுவும், உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி சிபிசிஐடி போலீஸார் 01/2020, 02/2020 என இரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய வேகத்தில்  எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2.7.2020 (வியாழக்கிழமை)

சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கிய இரண்டாவது நாள் அதிகாலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

3.7.2020 (வெள்ளிக்கிழமை)

மூன்றாவது நாள் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் முத்துராஜை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் மீதும் Cr.No. 01/2020 u/s 176(1)(A)(i) Crpc மற்றும் 342,302,201 IPC என்ற வழக்கும் Cr.No. 02/2020 u/s 176(1)(A)(i) Crpc மற்றும் 342,302,201 IPC பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

7.7.2020 (செவ்வாய்க்கிழமை)

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை 7-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஏற்றது. அதனால், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றஎண் 649/ 2020, 650/2020 அடிப்படையில் 176 ( 1) A பிரிவின்கீழ் சி.பிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. 

சிபிஐ

சிபிஐ பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் ( RC.0502020S0009 ) சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் ஆகியவை  சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் ஒப்படைத்ததால் இனி முழுவீச்சில் விசாரணை தொடங்கப்பட இருக்கிறது.

Also Read: சாத்தான்குளம்: தலையில் உறைந்த ரத்தம்; மருத்துவச் சான்று! - அடுத்த சிக்கலில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ

8.7.2020 (புதன்கிழமை)

சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கிய மூன்று நாள்களில் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் 8-வது நாளில் சிக்கினார்கள்.

விசாரணை நடத்தும் சிபிசிஐடி அதிகாரிகள்

சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் என மேலும் 5 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 302, 201, 342, 107 IPC பிரிவுகளில் கொலைக் குற்றம், சாட்சியத்தை மறைத்தல், கொடும் செயல்புரிய உதவி செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Also Read: ஸ்ரீதர் சம்பவத்தன்று சொன்னது என்ன? சாத்தான்குளம் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்! | Sathankulam

வழக்கறிஞரின் விளக்கம்

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ரமேஷிடம் கேட்டதற்கு, ``கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் மரணம் அடைந்ததால் அங்குள்ள காவல் நிலையத்தில், முதலில் சந்தேக மரணம் என 649/20 மற்றும் 650/20 என இரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

வழக்கறிஞர் ரமேஷ்

பின்னர், விசாரணை சிபிசிஐடி வசம் சென்றதால் அவர்கள் 1/20 மற்றும் 2/20 என இரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் கோவில்பட்டியில் பதிவு செய்யப்பட்டிருந்த எஃப்.ஐ.ஆரையும் சேர்த்துக் கொண்டிருப்பார்கள்.

தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காகப் புதிய நம்பர் கொடுத்து அதில் கோவில்பட்டி மற்றும் சிபிசிஐடி பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கைகளையும் சேர்த்துக்கொள்வார்கள். 

Also Read: சாத்தான்குளம்: `அனுமதித்த அதிகாரிகள்!' -அதிர்ச்சி கொடுத்த கொரோனா தன்னார்வலர்கள்

சிபிஐ தங்கள் வசதிக்காக ஆர்.சி (ரெகுலர் கேஸ்) என்று எண்ணைப் பதிவு செய்வார்கள். அதில் பழைய விசாரணையின் தகவல்களையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆரம்பம் என்பது கோவில்பட்டியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. அதனால் அங்கிருந்து நடந்த அனைத்தையும் தங்கள் விசாரணை அறிக்கையில் குறிப்பிடுவார்கள்” என்றார்.

சிபிஐ விசாரணை விரைவாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதே சாத்தான்குளம் பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/cbi-took-charge-of-the-sathankulam-case-enquiry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக