Ad

சனி, 18 ஜூலை, 2020

`Prank Journalism'... உலக நாடுகளின் முக்கியத் தலைவர்களை அலறவிட்ட இரட்டையர்கள்!

"ஹலோ துபாயா? நான் மார்க் பேசுறேன்" என்ற வடிவேலு, நிஜமாகவே பிரதமர் மோடிக்கு போன் செய்து, ஹலோ மோடியா? நான் பேஸ்புக் ஓனர் மார்க் பேசுறேன் - எனப் பேசினால்?

“ஹலோ சார். நாங்க தமிழ்நாட்டில் இருக்கும் அமுக கட்சில இருந்து பேசுறோம். அடுத்த தேர்தல்ல நம்ம கூட்டணி தொடர்பா எங்க தலைவர் பேச விரும்புறாரு. பேச முடியுமா?” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கால் வருகிறது. அவர் உதவியாளர்களும் அமித் ஷாவிடம் கனெக்ட் செய்துவிடுகிறார்கள். அமித் ஷா பேசியது எல்லாம், அடுத்த நாள் ஓர் இணையதளத்தில் வெளியாகிறது.

Phone call

இதைச் சொன்னால் நம்புவீர்களா? காமெடியாக இருக்கிறதல்லவா? ஆனால், இதைத்தான் சீரியஸாக 'பிராங்க் ஜர்னலிசம்' (Prank Journalism) என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள் இரு ரஷ்ய இளைஞர்கள். இவர்கள் கால் செய்வதெல்லாம் உலக நாடுகளின் பலம்பொருந்திய தலைவர்களுக்கும், எட்டா உயரத்தில் இருக்கும் பிரபலங்களுக்கு. விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளைச் சார்ந்த எதாவது ஒரு முக்கிய நபருக்கு, வேறொரு பிரபலம் போல கால் செய்து, குரலை மாற்றிப் பேசுகிறார்கள் இந்த இளைஞர்கள். பின்னர் அந்த உரையாடலை வெளியிடுகிறார்கள். சாதாரணமாக ஒரு தனிமனிதன் அறிந்துக் கொள்ள முடியாத தகவல்களை எல்லாம் பெற்று வெளியிடும் இந்தச் செயலை பலர் கண்டிக்க, "பத்திரிகைகள் மக்களுக்காக உண்மையை வெளியிடுகின்றன. அதுபோலதான் நாங்கள் மக்களுக்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். நாங்கள் 'பிராங்க் ஜர்னலிஸ்ட்'" என்கிறார்கள்.

வோவன் மற்றும் லெக்சஸ் எனும் புனைபெயர்களில் செயல்படும் அலெக்செய் ஸ்டாலியரோவ், விளாடிமிர் குஸ்ன்ட்சோவ் எனும் இரு இளைஞர்கள் பல ஆண்டுகளாக இந்த பிராங்க் கால்கள் செய்து வருகிறார்கள். “நான் வாயசைக்க ஆரோ டப்பிங் தந்திருக்கிறார்கள்” என்றெல்லாம் எஸ்கேப் ஆக முடியாத வலை இது. சில முக்கிய பிராங்க் கால்களின் தொகுப்பைத் தருகிறோம். படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

Prank Journalism

பிரபல பாடகர் எல்டன் ஜான், ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிக்க, எல்டன் ஜான் "புடின் இடம் நான் பேச வேண்டும்" என ஒரு பேட்டியில் தெரிவித்தார். அவ்வளவுதான் எல்டன் ஜானுக்கு அதிபர் விளாடிமிர் புடின் பேசுவது போல பிராங்க் கால் செய்த வோவன் மற்றும் லெக்சஸ் பத்து நிமிடத்துக்கும் மேலாக எல்டோனிடம் பேசியிருக்கிறார்கள்.

மிகவும் மகிழ்ந்த எல்டன், உலகின் முக்கியத் தலைவரான புடின் என்னிடம் பேசியதில் மகிழ்ச்சி என சமூக வலைத்தளங்களில் பதிவிட, பிறகுதான் அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது. வோவன் மற்றும் லெக்சஸ் இந்த போன் கால் பதிவை வெளியிட கடுப்பாகிவிட்டார் எல்டன். அதன்பிறகு, உண்மையான விளாடிமிர் புடின் எல்டன் ஜானைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். " 'பிராங்க் கால் ' செய்த இளைஞர்கள் ஆபத்தானவர்கள் கிடையாது, விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என பேசியிருக்கிறார் புடின். இம்முறை உண்மையான அதிபர் புடின்தான் பேசுகிறார் என நம்பவைக்க பெரும் பாடு பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், சூழலியல் போராளி க்ரெட்டா தென்பெர்க் போல, இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சார்ந்த (முன்னாள்) இளவரசர் ஹாரிக்கு கால் செய்து அவரது அரசு குடும்ப வாழக்கையைப் பற்றி, அவரது உறவினர்கள், டிரம்ப் பற்றி அவரது கருத்து என நிறைய பேசியிருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் இந்த கால் ரெக்கார்டிங் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்த பெர்னி சாண்டர்ஸ் கூட, க்ரெட்டா தென்பெர்க் என நம்பி இந்த இருவரிடம் பேசியிருக்கிறார். இவர் தவிர அமெரிக்கா காங்கிரஸின் பல முக்கிய தலைவர்களுக்கு அழைத்து பல முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

Greta Thunberg

பிரெஞ்சு நாட்டு அதிபர் இம்மானுவல் மக்ரானுக்கு, உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியின் போர்வையில் அழைத்து ரஷ்யாவின் அதிபர் பற்றிப் பேசியிருக்கிறார்கள். பிரெஞ்சு அதிபர் தரப்பு இந்தச் செய்தியை பற்றி எதுவும் பேச மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டு அதிபர் போல, சுவிஸ் நாட்டில் இருக்கும் அமெரிக்கா பிரதிநிதிக்கு கால் செய்து பேசியது பல சர்ச்சையான விஷயங்களை வெளிக்கொண்டு வந்தது. துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, உக்ரைனின் முன்னாள் அதிபர் பெற்றோ பெரோஷான்க்கோ போல பேசியிருக்கிறார்கள். இதை எர்டோகன் தரப்பு மறுத்திருந்தது.

பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுக்கு அந்த நாட்டின் முன்னாள் அதிபரின் மகன் யானுகோவிச் போல பேசி, அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வேண்டும் எனக் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் சம்மதமும் சொல்லியிருக்கிறார். பின்னர் இந்த பிராங்க் கால் வெளியிடப்பட்டதும் லட்சக்கணக்கில் இவர்களுக்கு ரசிகர்கள் சேர்ந்தனர்.

போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவரை அர்மேனிய நாட்டுப் பிரதமர் நிக்கோல் பஷின்யான் போல பேசி ஏமாற்றி இருக்கிறார்கள். 18 நிமிட உரையாடலில் ரஷ்ய பிரதமர் புடினை எப்படி சமாளிப்பது என விவாதம் நடைபெறுகிறது. ஆனால், வெளியிடப்பட்ட டெலிபோன் குரல் தன்னுடையது என போரிஸ் ஜான்சன் தரப்பு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.

போரிஸ் ஜான்சன்

இவர்களின் 'பிராங்க் கால்' அழைப்புக்கு சமீபத்திய பலி போலந்து நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்று இருக்கும் அட்ரஸிஜ் டூடா. இவருக்கு ஐ.நாவின் பொது செயலாளர் அன்டோனியோ குடெர்ரெஸ் போல அழைத்துப் பேசியிருக்கிறார்கள். போலந்து நாட்டு மதுவைப் பற்றி அவர்கள் பேசியதும் சுதாரித்திருக்கிறார் டூடா. ஆனாலும், 'ட்ரம்ப் தனக்கு வாழ்த்து சொல்ல அழைக்கவில்லை' , 'எதிர்க்கட்சி தலைவர் டோலாந்து டிஸ்க்குக்கு தன்னைப் பிடிக்காது' என்றெல்லாம் பேசியிருக்கிறார். இந்த கால் ரெக்கார்டிங்-ஐ வோவன், லெக்சஸ் யூடியூபில் வெளியிட, தான் பேசியதை உறுதிப்படுத்தியிருக்கிறார் டூடா.

இந்த பதிவை கேட்ட டோலாந்து டிஸ்க், "உங்கள் வெளிப்படைத்தன்மைக்காக எனக்கு உங்களை பிடிக்கும் அதிபர் அவர்களே" என டூடா- வை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், போலந்து நாட்டில் இந்த கால் குறித்து உளவு துறையினர் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த இருவரும் தொடர்ந்து ரஷ்யா நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் எனவும், ரஷ்யா உளவுத்துறையின் அங்கமாகத்தான் செயல்படுகிறார்கள் என்றும் இவர்கள் மீது உலக அளவில் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்களின் இந்த பிராங்க் கால்கள் எந்த விதமான சட்ட சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. இவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரஷ்யா சிறையில் இருக்கும் உக்ரேனியா நாட்டுப் போராளி நடேஸ்ட்டா ச்வசென்கோ (Nadezhda Savchenko). இவர் தன் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டிருப்பதாக சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். உக்ரனியா நாட்டு பிரதமர் போல பேசி இவரது போராட்டத்தை முடிக்கத் தூண்டியிருக்கிறார்கள் வோவன் மற்றும் லெக்சஸ்.

ரஷ்யா

இப்படி, இவர்கள் கால் செய்து ஏமாற்றும் அனைவரும் ரஷ்யாவின் அரசியல் எதிரிகள் என சொல்லப்படுகிறது. மிக உயர்ந்த அதிகாரிகளுக்கு எளிதாக இவர்கள் தொடர்பு கொள்ள முடிகிறது. ரஷ்யா நாட்டுத் தலையீடு இல்லாமல் இது சாத்தியமாகாது என்பது பலரின் வாதம். ஆனால் இதை வோவன் மற்றும் லெக்சஸ் முற்றிலுமாக மறுக்கிறார்கள். நாங்கள் யாருக்கு அழைத்துப் பேசப் போகிறோம் என்பதை நாங்கள் மட்டுமே முடிவு செய்கிறோம், யாருடைய அதிகாரத்துக்குக் கீழும் நாங்கள் செயல்படவில்லை என உறுதியாக கூறுகிறார்கள். உலகம் முழுக்க உண்மையைத் தெரிந்துக் கொள்ள விரும்பும் தங்கள் நண்பர்கள் இணையம் மூலமாக தங்களுக்கு உதவுவதாக சொல்கிறார்கள். ரஷ்யாவின் எதிரி நாடான உக்ரேனிய நாட்டு தலைவர்கள் பலரை இவர்கள் குறிவைப்பது பற்றியும் பல கேவிகள் எழுப்பபடுகின்றன. இதுகுறித்து பேசியிருக்கும் வோவன் மற்றும் லெக்சஸ், ''நாங்கள் ரஷ்யா நாட்டு பிரஜைகள், எங்கள் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு வர விடமாட்டோம். எங்கள் எதிரிகள் யார் என எங்களுக்கு தெரியும்'' என பதிலளித்திருக்கிறார்கள்.

இவர்களின் இந்த பிராங்க் அழைப்புகளை, சிலர் ஒப்புக்கொண்டாலும், முக்கிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக ஒப்புக்கொள்வதில்லை. அதனால், அவர்கள் மீது அதிகாரபூர்வமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதேசமயம் இவர்களின் வெளிப்படையான ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு இவர்களின் அழைப்புகளின் நோக்கத்தை, கேள்விக்குறியாக்குகிறது. சில நிமிட உரையாடல் பதிவுகளை அரசியல் தலைவர்கள் மறுக்க முடியும் என்பதால் இவர்களுக்கு பெரும் எதிர்ப்பும் இருப்பதில்லை.

Also Read: நேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன?

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, யார் எங்கிருந்து வேண்டுமானாலும், யாருக்கும் தொடர்பு கொள்ளலாம் என்பதே உண்மை. ஆனால், சர்வ அதிகாரம் படைத்த, பல பாதுகாப்பு அடுக்குகளை கொண்ட முக்கியத் தலைவர்கள் கூட இதே தொழில்நுட்பத்தின் காரணமாக ஏமாந்து போகலாம் என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இந்தியாவில் இப்படியெல்லாம் நடந்தால் நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் உஷாராக இருக்க வேண்டும்.



source https://www.vikatan.com/social-affairs/international/know-the-story-of-the-russian-prank-journalists-who-are-calling-the-important-world-leaders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக