Ad

சனி, 18 ஜூலை, 2020

``அடுத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற எல்லோரும் எங்க கட்சிக்கு வரலாம்!''- ஆசிரியை சபரிமாலா

"பெரிய மாற்றங்களுக்கு சின்ன முயற்சிகள் போதும். மாற்றத்தை ஏற்படுத்தியே ஆகணுங்கிற வைராக்கியத்தில் எத்தனையோ அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் கடந்து வந்துட்டேன். வேலையை ராஜினாமா செய்து மூணு வருஷம் ஆச்சு. 'நீங்க வேலையை விட்டதுக்காக எல்லாமே மாறிடுச்சா?'னு நிறைய பேர் என்கிட்ட கேட்டுருக்காங்க. நான் வேலையை விட்டதால் எந்த மாற்றமும் நிகழல. அப்படி நிகழணும்னு நான் எதிர்பார்க்கல. ஆனா, நம்மோட எதிர்ப்பை தெரிவிக்கிறது அவசியம்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு

இந்த மூணு வருஷத்தில் பெண்களின் நலனுக்காகவும், கிராமத்து குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கேன். போராட்டத்தின் அடுத்தகட்டமாகத்தான் கட்சி தொடங்கியிருக்கேன். என் கட்சி சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குங்கிற நம்பிக்கை இருக்கு" - நிதானமாகப் பேசுகிறார் சபரிமாலா.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் சபரிமாலா. நீட் தேர்வுக்கு எதிராகவும், இந்தியா முழுவதும் ஒரே கல்விமுறையை வலியுறுத்தியும் தன் மகனுடன் 2017-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். துறை ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்க, தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். தற்போது 'பெண்கள் விடுதலைக் கட்சி' என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக சபரிமாலாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

சபரிமாலா

"தனி மனுஷியா நிறைய இடங்களில் போராடிட்டேன். ஆனா, எந்தப் பிரச்னைக்கும் முழுமையான தீர்வு காண முடியல. இன்னும் சொல்லணும்னா அந்தப் பிரச்னைக்கான விழிப்புணர்வைக்கூட மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்க முடியல. தெருவில் நின்னு போராடும்போது, எதுக்காகப் போராடுறாங்கனு நின்னுகூட கேட்க நேரம் இல்லாமல் மக்கள் என்னைக் கடந்து போயிருக்காங்க. நாட்டுல என்ன பிரச்னை வந்தாலும், நமக்கு நேரடியா பாதிப்பு இல்லைனு, ஒவ்வொருத்தரும் ஒதுங்குறதாலதான், சமுதாய சீர்கேடுகளை சந்திக்கிறோம். ஒரு பிரச்னை வந்ததும், சமூகவலைதளங்களில் அதைப்பத்தி ரெண்டு நாள் ஆவேசமாகப் பேசுறோம். புதுசா இன்னொரு செய்தி வந்ததும், நேற்றைய பிரச்னை நமக்கு மறந்து போயிருது. இந்த அலட்சியமும் மறதியையும் அரசாங்கம் பயன்படுத்திக்குது.

15 வருஷம் கிராமத்தில் ஆசிரியரா வேலைசெஞ்சிருகேன். அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமத்துல பிள்ளைகள் அவ்வளவு கனவோட இருப்பாங்க. அந்தக் குழந்தைகளுக்கு நீட் மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொடுக்காம, நுழைவுத் தேர்வுங்கிற பெயரில் குழந்தைகளின் கனவுகளை கலைப்பதில் என்ன நியாயம் இருக்கு? நீட் வேணாம்னு யாரும் போராடல. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்துட்டு நீட் பத்திபேசுங்கனுதான் சொல்றோம்.

சபரிமாலா

அனிதா நீட்டில் தோல்வி அடைஞ்சு, தற்கொலை செய்தபோது, உளவியல் ரீதியா நிறைய பாதிக்கப்பட்டேன். போராட்டம் நடத்துனேன். நிறைய எதிர்ப்புகள் வந்துச்சு. இப்படி ஒரு கல்வி முறையில் வேலை பார்க்க பிடிக்காமதான் வேலையை விட்டேன். என் முடிவுக்காக நானோ என் குடும்பமோ எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது" என்கிற சபரிமாலா கட்சி தொடங்கிய காரணத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

"வேலையை ராஜினாமா பண்ணதுக்கு பிறகு 2 வருஷம் வீடு திரும்பாத போராட்டத்தை ஆரம்பிச்சேன். என் குடும்பம், குழந்தையை விட்டுட்டு தமிழகம் முழுவதும் பயணம் செஞ்சேன். ஏழு லட்சம் மாணவர்களைச் சந்திச்சு கவுன்சலிங் கொடுத்தேன். அந்தப் பயணத்தில்தான் எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிஞ்சுது. கிராமங்களில் கழிப்பறை வசதியில்லாத பெண்கள் கண்மாய்களுக்குச் செல்லும்போது பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்காங்கனு சொல்றதைக் கேட்டு அதிர்ச்சியா இருந்துச்சு. அறிவியல் வளர்ச்சினு பெருமையா சொல்றோம். ஆனா, அடிப்படை வசதிகள் பத்தி இங்க யாரும் பேசுறது இல்ல.

சபரிமாலா

Also Read: நீட்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு! தமிழக அமைச்சரவை ஒப்புதல் #NowAtVikatan

இது போன்ற நிறைய பிரச்னைகள் வெளியுலகத்துக்கே தெரியவர்றது இல்ல. வந்தாலும், ஒரே சாதி, ஒரே ஊருனு நிறைய கண்துடைப்பு காரணங்கள் சொல்லப்பட்டு குற்றங்கள் மறைக்கப்பட்டுடுது. காவல் துறை, நீதிமன்றங்களோட கதவை தட்டிய எத்தனையோ பெற்றோர்கள், வாய்தாங்கிற பெயரில் பலவருஷம் அலைக்கழிக்கப்படுறாங்க. தன்னோட மரணத்தின் கடைசி நிமிஷத்திலயாவது, யாராவது காப்பாற்ற வரமாட்டாங்களானு துடிச்சு செத்த அந்தப் பெண்களின் மரணத்துக்கு நம்மளோட சமூக கட்டமைப்பைக் காரணம் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கு? கல்வி முறை மாற்றம், பாலியல் வன்கொடுமைனு களையப்பட வேண்டிய பிரச்னைகளை எளிதாகக் கடந்து போயிட்டு இருக்கோம்.

என் மனசுக்கு தவறுனுபட்ட ஒவ்வொரு பிரச்னைக்கும் நான் போராட்டத்தை முன்னெடுத்துருக்கேன். நியாயமான விஷயத்துக்காகப் போராடினாலும், சில நேரங்களில் அனுமதி கிடைக்காம இருந்திருக்கு. சமுதாயம் சார்ந்த பிரச்னைகளை மக்கள்கிட்ட கொண்டு போக தனியா போராடுனா மட்டும் மாற்றங்கள் நிகழாதுனு தாமதமாகத்தான் புரிஞ்சுகிட்டேன். நிறைய யோசனைகளுக்குப் பிறகுதான் கட்சி ஆரம்பிக்கிற முடிவுக்கு வந்தேன். நாடு முழுவதும் ஒரே கல்வி முறை, நீட் தேர்வு எதிர்ப்பு, கிராமம்தோறும் கட்டாயக் கழிப்பறை, பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்புனு 16 கொள்கைகளை அடிப்படையா வெச்சுதான் கட்சியை ஆரம்பிச்சுருக்கேன். ஜூன் 28-ம் தேதி சமூக வலைதளங்கள் மூலமா கட்சியின் சின்னத்தையும் பெயரையும் அறிவிச்சேன்.

Also Read: `` `நாப்கின்ல எதுக்கும்மா இங்க் ஊத்துறாங்க?'னு கேட்ட மகனுக்கு என் விளக்கம்..!" - ஆசிரியர் சபரிமாலா

நிறைய பேர் ஆதரவு தெரிவிச்சுருக்காங்க. இதுவரை 1,500 பேர் கட்சியில் இணைஞ்சுருக்காங்க. அடுத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற யார் வேண்டுமானாலும் எங்க கட்சியில் இணையலாம். சமுதாயப் பிரச்னைகளுக்கு சட்டப் போராடங்களை முன்னெடுப்பேன். இந்தக் கட்சி மக்களால் இயக்கப்படும்; இது மாற்றத்துக்கான ஆரம்பமாக இருக்கும். புதிய தளத்தை, புதிய அரசியலை மக்கள் காண்பார்கள். நீட் இல்லா தமிழகம் உண்டாகும்" புன்னகை சிந்தி விடை பெறுகிறார் சபரிமாலா.



source https://www.vikatan.com/social-affairs/women/teacher-sabarimala-shares-about-her-new-politics-initiative

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக