Ad

திங்கள், 20 ஜூலை, 2020

ஆடி சோமாவதி அமாவாசை - பித்ருக்கள் வழிபாட்டுக்கு உகந்த நாள் இன்று!

பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் சூரிய சந்திரர்களின் தாக்கம் நிறைந்த தினங்கள். தெய்வ வழிபாட்டிற்கும், பித்ருக்கள் வழிபாட்டிற்கும் உரிய தினங்கள். குறிப்பாக, சந்திரன் ஆதிக்கம் நிறைந்த சோமவாரம் எனப்பெறும் திங்கள் கிழமையன்று அமையப்பெறும் அமாவாசைக்கு 'சோமாவதி அமாவாசை' என்று பெயர். ஒரு வருடத்தில் ஓரிரு முறைகள் மட்டுமே நிகழும்

ஆடி சோமாவதி அமாவாசை

இந்த அரிய நிகழ்வன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வருவதாகக் கணக்கீடு. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகள் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

இந்த வருடத்து ஆடி அமாவாசையானது சோம வாரத்தில் வருவது மிகச் சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. இந்த நாளில் அமாசோம விரதம் இருப்பதும், சோம வாரத்திற்குரிய சிவபெருமானைப் பூஜிப்பதும் அதிக புண்ணிய பலன்களைத் தரவல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, `அமாசோம பிரதட்சணம்' எனப்பெறும் விசேஷமான, தொன்மையான விருட்சக வழிபாடும் இந்த நாளுக்குரிய சிறப்பான விஷயமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

ஆடி சோமாவதி அமாவாசை

மரங்களுக்கெல்லாம் அரசன் எனப்பெறுவது அரசமரம். இதை விருட்சக ராஜன் என்று வடமொழியில் கூறுவார்கள். 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்' என்பது கீதையில் கண்ணன் வாக்கு. அரசமரத்தின் அடியில் பிரம்மாவும்; நடுப் பாகத்தில் மஹாவிஷ்ணுவும்; மேற்பாகத்தில் சிவபெருமானும் உறைந்தருளுகின்றனர். சகல தேவர்களும் விருப்பமுடன் அரச விருட்சகத்தில் உறைவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அரசமரத்தைப் பார்த்தாலும், காணும் போது வணங்கினாலும் பாவங்கள் நசியும். புண்ணியபலன்கள் சேரும். செல்வம் பெருகும். ஆயுள் தீர்க்கமாகும். பிரதட்சிணம் செய்பவர்கள் சகல தேவர்களையும் ஒரே நேரத்தில் வலம் வந்து வழிபட்ட அளவற்ற புண்ணியம் பெறுவர்.

திருமணத்தடைகளைப் போக்கி , புத்திர பாக்கியம் தந்திடும் மிக எளிமையான வழிபாட்டு முறை இந்த அஸ்வத்த பிரதட்சிணம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம். வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வோர் அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். ஆடி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம், தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது. எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் இன்று கொடுத்துப் பலனடையலாம்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-adi-somavathi-amavasai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக