Ad

திங்கள், 20 ஜூலை, 2020

சென்னை: பார்க் ஸ்டேஷன் டு நேப்பியர் பாலம்! - போலீஸாருக்கு உதவும் தெருநாய்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கையொட்டி சென்னை நேப்பியர் மேம்பாலத்தில் அருகே நேற்று போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீஸாரின் அருகில் தெருநாய் ஒன்றும் நின்றது. அவ்வழியாக வந்த வாகனங்களை தெருநாய் கொஞ்ச தூரம் விரட்டிச் சென்றது. பின்னர், மீண்டும் போலீஸாரின் அருகில் வந்து நின்று கொண்டது. அதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை.

வாகனத்தை விரட்டும் தெரு நாய்

இந்தச் சமயத்தில் சைரன் வைத்த போலீஸ் வாகனம் ஒன்று அவ்வழியாகச் சென்றது. அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது தெரு நாய் அந்த வாகனத்தை துரத்திச் செல்லாமல் அமைதியாக நின்றது. அதை ஆச்சர்யமாக போலீஸார் பார்த்தனர். அதன்பிறகு வந்த வாகனங்களை குரைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் தெரு நாய் விரட்டியது. ஆனால், போலீஸ் வாகனங்களை மட்டும் அந்த தெருநாய் விரட்டாமல் அமைதியாக நின்றது. இந்த நாயின் செயல் குறித்து சக காவலர்களுக்கு தகவல் பரவியது. அவர்களும் நாயின் செயலைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர்.

இதுகுறித்து நேப்பியர் பாலத்தின் அருகில் நின்ற போலீஸாரிடம் கேட்டதற்கு ``நீண்ட காலமாக இந்த நாய், இங்கு உள்ளது. நாங்கள் சாப்பிடும்போது நாய்க்கும் சாப்பாடு போடுவோம். ஊரடங்கு காலத்தில் போலீஸாருக்கு தானாக உதவி செய்து வருகிறது. இது ஆச்சர்யமாக உள்ளது. போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை சைரனை ஒலித்தபடி செல்லும்போது இந்த நாய் குரைப்பதில்லை. மற்ற வாகனங்கள் செல்லும்போது அவர்களை விரட்டுகிறது" என்றனர்.

சின்னபொண்ணு

சென்னை பார்க் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த ஆண்டு சின்ன பொண்ணு என்ற நாய், ரயில்வே போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தது. ரயில் பிளாட்பாரத்துக்குள் வரும்போது வாசலில் தொங்கிக்கொண்டு பயணிப்பவர்களை சின்னபொண்ணு விரட்டிச் செல்லும். அதைப் போல தண்டவாளங்களைக் கடப்பவர்களை எச்சரிக்கும் வகையில் குரைக்கும். சினனபொண்ணுவின் இந்தச் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தற்போது சின்னபொண்ணுவைப் போல நேப்பியர் பாலத்தில் நிற்கும் தெரு நாய் போலீஸாருக்கு உதவிகரமாக உள்ளது.

``வாகனத்தில் செல்லுபவர்களை இந்த நாய் துரத்தும்போது டூவிலரில் செல்பவர்கள் பீதியடைகின்றனர். அதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும், போலீஸார் கவனம் செலுத்த வேண்டும்" என்கின்றனர் வாகன ஓட்டிகள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/chennai-street-dog-helps-city-police-in-lock-down-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக