Ad

திங்கள், 20 ஜூலை, 2020

`கொரோனா பயம்... இப்போது விரக்தி கலந்த கோபமாக மாறி வருகிறது!'- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

'கொரோனா' கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சீனாவில் பரவும் ஒரு வைரஸாக நமக்கு அறிமுகமாகி தற்போது ஒட்டுமொத்த மக்களின் பரம எதிரியாகவே மாறி நிற்கிறது. காரணம்... நமக்கு ஏற்பட்டுவரும் இழப்புகள்! கல்வி, வேலையில் தொடங்கி உறவுகள், உயிர்கள்வரை எண்ணிலடங்கா, ஈடு செய்யமுடியா எத்தனையோ இழப்புகள். இதனால் ஆரம்பத்தில் 'கொரோனா வைரஸ்' மீது நமக்கு இருந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உச்சமடைந்து இப்போது விரக்தி, கோபமாக மாறி வருகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும்!

stress

சமீபத்தில் ஜே.எம்.ஐ.ஆர் பப்ளிக் ஹெல்த் அண்ட் சர்வேலன்ஸ் (JMIR Public Health & Surveillance) இதழில் 'கொரோனா' மக்களின் மனநிலையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த மனநல ஆய்வின்முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுதும் உள்ள மக்களின் கொரோனா குறித்த சமூக வலைத்தள பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில் 'இந்த நோய் நமக்கு வந்துடக்கூடாதே...' என்றிருந்த ஒரு வித பயம் கலந்த மனநிலை தற்போது 'இந்த நிலைமை எப்போதான் முடிவுக்கு வரும்? இப்படியேபோனா கடைசியில தற்கொலைதான் பண்ணிக்கணும்' என்பதுபோன்ற கோபம் கலந்த விரக்தி மனநிலையாக மாறி வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளும், தட்டுப்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வரவில்லை என்றால் மக்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படும் என்பதே நிதர்சன உண்மை. கொரோனா மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியும், அதற்கான தீர்வுகள் குறித்தும் உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் பேசினோம்.

"70-80 வயது முதியவரிடம் சென்று 'கொரோனாபோல் ஒரு நோய்ப் பரவலை உங்கள் வாழ்நாளில் பார்த்துள்ளீர்களா?' என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே தலையசைக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் வாழும் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரையிலான எல்லா தலைமுறையினருக்குமே கொரோனா பெரும் சவால்தான். சுனாமி, புயல், நிலநடுக்கம், வெள்ளம் என்று நாமும் எத்தனையோ அசாதாரண சூழல்களைத் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் 'கொரோனா'போல் வேறு எதுவும் நமக்கு இந்த அளவுக்கு மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் தந்தது இல்லை. காரணம்... முடிவே இல்லாமல் நீண்டுகொண்டிருக்கும் இதன் பரவலும் பாதிப்பும்தான்.

corona

Also Read: கோவிட்-19: `திருவனந்தபுரத்தில் சமூகப் பரவலாக மாறியுள்ளது!' - அறிவித்த பினராயி விஜயன்

இதற்கு முன்பு வந்த வெள்ளமோ, புயலோ அதிலிருந்து மீண்டு பழைய வாழ்க்கைக்குள் செல்ல நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகபட்சம் ஒருமாதம் மட்டுமே. ஆனால் கொரோனா விஷயத்தில் அப்படியல்ல. 'இந்தப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு. இந்த நோய்க்கு இதுதான் மருந்து' என்று ஏதாவது நம்பிக்கை விஷயம் இருந்தால்கூட இந்த நிலையிலிருந்து மீண்டு வந்துவிடலாம் என்று தைரியமாக இருக்கலாம். இவை எதுவுமே இல்லாததுதான் இங்கு பிரச்னையே. முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கும் கொரோனா, நம் மனதில், நமது நிகழ் காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் ஏராளமான கேள்விகளை எழுப்பி வைத்திருக்கிறது. விடை தெரியாத இந்தக் கேள்விகளால் மிஞ்சுவது மன உளைச்சல் மட்டுமே!

கொரோனாவால் மூன்று முக்கிய பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதில் முதலாவது உடல் சார்ந்தது. பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டார்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களில் சிலரை கொரோனாவிற்கு பலி கொடுத்த பலரையும் காண முடிகிறது. அவர்களின் இழப்பு உண்மையில் ஈடுசெய்ய முடியாதது.

Stress

இரண்டாவது பிரச்னை மனநலம் சார்ந்தது. பல மாதங்களாக வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வெளியில் எங்கேயாவது கடைத்தெருவுக்குச் சென்றால்கூட நிம்மதியாக சுவாசிக்க முடியவில்லை. தீண்டும் காற்றில் கூட ஒருவித பாதுகாப்பின்மையை உணர முடிகிறது. எதிர்ப்படும் அனைவரையும் 'இவருக்கு கொரோனா இருக்குமோ?' என்ற சந்தேகக் கண்களாலேயே பார்க்கிறோம். நண்பர்களுடன் சுற்றியும், பிடித்த இடங்களுக்குச் சென்றும் மாதக் கணக்கில் ஆகிவிட்டன. இதனுடன் லாக்டௌனில் ஏற்பட்ட தனிமையும் சேர்ந்து நம்மை ஒருவழியாக்கிவிட்டன.

Also Read: கொரோனா: `Double-blind' முறையில் மனிதப் பரிசோதனை! - முக்கிய கட்டத்தில் கோவாக்ஸின்

மூன்றாவது முக்கியப் பிரச்னை பொருளாதாரம் சார்ந்தது. கொரோனா காரணமாக எத்தனையோ பேர் வேலையிழந்துள்ளனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் அடிப்படைத் தேவைகளுக்கும், உணவுக்கும்கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைவரும் அவரவர் குடும்பச் சூழலுக்கு ஏற்ப பொருளாதார சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

Stress

இந்தப் பிரச்னைகள் எல்லாம் எதனால் என்று சிந்தித்துப்பார்க்கும்போது அங்கு ஒற்றைச்சொல்லாகத் தொக்கி நிற்பது 'கொரோனா' மட்டுமே. இதன் காரணமாகவே கொரோனா பயம் இப்போது விரக்தி கலந்த கோபமாக மாறி வருகிறது. இந்த மனநிலையிலிருந்து மீள்வது கடினம் என்பதே உண்மை. எனினும் இந்த இக்கட்டான சூழலிலிருந்து நிச்சயம் மீண்டு வருவோம் என்பதை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள். கொரோனா பிரச்னைகள் உங்கள் மனதை அதிகமாக பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அச்சம், ஏமாற்றம், விரக்தி ஏற்படுத்தக் கூடிய கொரோனா குறித்த செய்திகளைத் தவிர்க்கலாம். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் முடிவு என்று ஒன்று இருந்தே தீரும். கொரோனாவால் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் முடிவு வரும் என்று நம்புவோம்!" என்றார் வசந்தி பாபு.



source https://www.vikatan.com/health/healthy/researchers-warn-that-the-coronavirus-fear-is-now-turning-into-frustrated-anger

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக