Ad

சனி, 11 ஜூலை, 2020

``ஆரோக்கியம் மட்டுமில்ல, ஆத்ம திருப்தியும் தரும்!'' - `செம்பருத்தி' ஜனனியின் மாடித்தோட்ட அனுபவம்

"பசுமைப் போர்வை போர்த்தின மாதிரி இருக்க இந்த இடம், எங்க வீட்டின் சொர்க்கம். சுத்தமான காத்து, கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமை, இயற்கையான காய்கறிகள்னு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தைக் கொடுக்கும் எங்களுடைய மாடித் தோட்டத்துக்குள்ள வந்தா, எல்லா ஸ்ட்ரெஸ்ஸையும் மறந்து நான் குழந்தை மாதிரி மாறிருவேன். 'செடிகளுக்கு உணர்வு இருக்கு. செடிகளோடு நாம பேசுனா, செடி நம்மோட உணர்வை புரிஞ்சுக்கும்' னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அது என்னளவில் உண்மையும்கூட. செடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, அது பூக்கணுங்கிற என் ஆசையைச் சொல்லுவேன். அடுத்த சில வாரத்திலேயே மேஜிக் நடந்த மாதிரி என்னுடைய செடி பூத்திருக்கும்" - மலர்ந்த முகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் ஜனனி.

மாடித் தோட்டம்

மாடலிங்கில் கலக்கிக்கொண்டிருந்த ஜனனி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய 'மாப்பிள்ளை' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடித் தோட்டம் பற்றி ஜனனி பதிவிடும் தகவல்களுக்கு வரவேற்பு அதிகம். லாக்டௌன் நேரத்தில் முழுவதுமாக தோட்டப் பராமரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஜனனியுடன் உரையாடல் தொடங்கியது.

"எனக்கு சொந்த ஊரு கோயம்புத்தூர். ஷூட்டிங்குக்காக அடிக்கடி சென்னைக்கு வருவேன். கோயம்புத்தூரில் இருக்கும் உள்ளூர் சேனலில்தான் வி.ஜேவாக என்னுடைய கரியரை ஆரம்பிச்சேன். அப்புறம் மாடலிங், சீரியல்னு வாழ்க்கைப் பயணம் போயிட்டு இருக்கு. மீடியா கரியர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி படிப்பு, தோட்டம்னு பிஸியா இருந்தப் பொண்ணு நான். சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்ச பின், ஷூட்டிங் நேரங்களில் என்னோட தோட்டத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அப்பாவுக்கு வீடியோ கால் பண்ணி செடிகளைப் பார்ப்பேன்.

மாடித் தோட்டம்

இப்போ நாலு மாசமா லாக்டவுன்ல இருக்கிறதால் தோட்டத்தில் நிறைய நேரம் செலவழிக்க முடியுது. ஆடி மாசம் காய்கறி விதைப்புக்கான பருவம். அதனால் மண்ணை வளப்படுத்துறது, விதை நடவு செய்றது, உரம் தயாரிக்கிறதுனு தினமும் ஒரு வேலை செய்துட்டு இருக்கேன். காய்கறிச் செடிகள் புதுசா துளிர்விட ஆரம்பிக்கிறதைப் பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு" என்ற ஜனனி, தோட்டம் வைக்கும் ஆர்வம் தோன்றியது பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்.

"சின்ன வயசுலருந்தே செடி வளர்ப்பு மனசுக்கு பிடிச்ச விஷயம். ஸ்கூல் படிக்கும்போது லீவுக்கு எங்க பாட்டி வீட்டுக்குப் போவோம். அங்க நிறைய மரம் செடி கொடிகள் இருக்கும். செடி வளர்ப்பு பத்தி பாட்டி சொல்லிக் கொடுப்பாங்க. செவ்வந்தி, அரளினு சின்னச் சின்ன செடிகளைப் பாட்டி சொல்லுற இடத்துல நட்டு வெச்சுட்டு வருவேன். அடுத்த லீவுக்குப் போகும் போது அந்தச் செடிகள்லாம் நல்லா வளர்ந்து பூக்க ஆரம்பிச்சிருக்கும். அதைப் பார்க்கும் போது வேற லெவல் சந்தோஷம் கிடைக்கும். நானும் என் தங்கச்சியும் ஒரே நேரத்துல செடி நட்டு வைப்போம். யாருடைய செடியில முதல்ல பூ பூக்கும்னு எங்களுக்குள்ள ஒரு போட்டி இருக்கும். இப்படி சின்ன சின்ன விஷயங்கள்தான் தோட்டம் வைக்குற ஆசையை விதைச்சுது.

Also Read: மாடித்தோட்டம் அமைக்க ஏற்ற மாதம் எது? - வழிகாட்டிய ‘பசுமை’ நேரலை பயிற்சி!

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என்னோட டான்ஸ் கிளாஸ்ல ஒரு போட்டி நடத்துனாங்க. அதுல ஜெயிச்சதுக்காக, எனக்கு ரெண்டு மரக்கன்றுகள் பரிசா கொடுத்தாங்க. அந்தச் செடியை எங்க ஸ்கூலில் நட்டு வெச்சேன். அதுக்காக தினமும் வாட்டர் பாட்டிலில் தண்ணி கொண்டு போயி ஊத்துவேன். அதுகிட்ட பேசுவேன். சுத்தி விளையாடுவேன். இப்போகூட அந்த மரம் எங்க ஸ்கூல்ல இருக்கு. ஒவ்வொரு முறை அந்த மரத்தை பார்க்கும் போதும் மனசு குழந்தை பருவத்துக்கே போயிரும்.

இப்படி எனக்கு இருந்த ஆர்வத்தினாலேயே எங்க வீட்டுல எல்லாருக்குமே தோட்டம் வைக்கணுங்கிற ஆசை வந்துருச்சு. நாங்க இதுக்கு முன்னாடி இருந்தது வாடகை வீடு. அந்த வீட்டைச் சுத்தி நிறைய இடம் இருந்ததால் மாதுளை, எழுமிச்சை, மாங்காய், தென்னைனு நிறைய மரங்கள் வெச்சு பராமரிச்சுட்டு இருந்தோம்.

பிரண்டை

சொந்த வீடு கட்ட ஆரம்பிச்சபோது, வீட்டுத் தோட்டத்துடன் சேர்த்து மாடித் தோட்டம் வைக்கவும் பிளான் பண்ணோம். இந்த வீட்டுக்கு வந்து நாலு வருஷம் ஆச்சு. எங்களோட மாடித்தோட்டத்தில் இப்போ 70 தொட்டிகள் இருக்கு. துளசி,வெற்றிலை, திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, சீனித்துளசி, கற்பூரவள்ளினு ஏகப்பட்ட மூலிகைச் செடிகள் இருக்கு. அன்றாடத் தேவைகளுக்காக காய்கறிகள், பழச்செடிகளும் வெச்சுருக்கோம்.

செடிகளுக்கு உரங்களாக, காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடு, பழத்தோல், சாம்பல், மண்புழு உரம்னு இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்துறோம். செடிகளுக்கான விதைகளை எங்க வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்களில் இருந்தே எடுத்துப்போம். நாங்க உணவுக்குச் சமைக்க வாங்குற எதாவது ஒரு பழமோ அல்லது காய்கறியோ நல்ல சுவையோடு இருந்தா அதிலிருந்து விதைகள் எடுத்து தோட்டத்தில் விதைப்போம். அதனால் எங்க தோட்டத்தில் இருக்க ஒவ்வொரு காய்கறியும் தனி சுவையோடதான் இருக்கும். இது எல்லாத்துக்கும் மேல எங்க அம்மா ஹோம் மேக்கர். வீட்டுல இருக்க அவங்களுக்குத் தோட்டம் மிகப்பெரிய ரிலாக்ஸ். புதுசு புதுசான விஷயங்களையும் கத்துக்கிறாங்க. சந்தோஷமா இருக்காங்க.

ஜனனி

இந்த தோட்டம் என் தனிப்பட்ட முயற்சியில்லை. என் குடும்பத்திலிருக்கும் எல்லாருடைய உழைப்பும் கலந்து இருக்கு. சென்னைக்கு ஷூட்டிங்காக வந்து தங்கும் பிளான் இருந்தா என்னோட தோட்டத்து காய்கறிகளை எடுத்துட்டு வந்துருவேன். இயற்கையாக விளையும் இந்த காய்கறிகளை சாப்பிடுறதில் ஆரோக்கியம் மட்டுமில்ல, மிகப்பெரிய ஆத்ம திருப்தியும் இருக்கு. ஷூட்டிங் இல்லாத நாள்களில் செடிகளோடதான் அதிக நேரம் செலவழிப்பேன். உண்மையில் இந்த தோட்டம் எங்க எல்லாருக்குமே ஸ்ட்ரெஸ் பஸ்டர் மட்டுமில்ல, சந்தோஷமும்!" என்று விடைபெறுகிறார் ஜனனி.



source https://www.vikatan.com/news/agriculture/serial-actress-janani-shares-her-gardening-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக