திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ``நான் வேப்பம்பட்டு கிராமத்தில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கந்தன் கொள்ளை கிராமம் சிடிஎச் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்திவருகிறேன். 8.7.2020-ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் எனது லாரியில் சரக்குகளைக் கந்தன்கொள்ளையில் உள்ள கடையில் இறக்கிவிட்டு லாரியை அங்கேயே விட்டுவிட்டு எனது பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.
Also Read: ஸ்ரீதர் சம்பவத்தன்று சொன்னது என்ன? சாத்தான்குளம் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்! | Sathankulam
அப்போது வேப்பம்பட்டு பெட்ரோல் பங்க் எதிரே என்னை நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் வழிமறித்தனர். அப்போது அவர்களின் கையில் கத்தி இருந்தது. சிவப்பு, கறுப்பு நிற ஜெர்கின் போட்ட நபர், `ஏய் மச்சி பொருளை எடுங்கடா' என்று குரல் கொடுத்தான். பின்னர் அவன் என் பாக்கெட்டில் கையைவிட்டு பணத்தையும் செல்பானை பிடுங்க முயன்றபோது நான் தடுத்தேன். அப்போது உடன் இருந்த மூன்று பேர் என்னை அடித்துக் கீழே தள்ளினார்கள்.
கத்தியுடன் இருந்த சிவப்பு, கறுப்பு நிற ஜெர்கின் அணிந்திருந்த நபர் என் தலை மற்றும் தோள் மீது மாறி மாறி தாக்கினான். 18,000 ரூபாய், ஒரு சவரன் மோதிரம், ஏடிஎம் கார்டு, வண்டி சாவி, கண்ணாடி, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டான். பின்னர் என்னை விரட்டிவிட்டனர். இரவு நேரம் என்பதால் என்னால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளிக்க முடியவில்லை. எனவே, என்னை வழிமடக்கி தாக்கிய புகாரில் குறிப்பிட்டுள்ள பொருள்களைக் கொள்ளையடித்த நபர்களைக் கண்டுபிடித்து களவுபோன பொருள்களை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இந்தச் சமயத்தில் கொரோனா ஊரடங்கையொட்டி திருவள்ளூர் மாவட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் போலீஸார் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பைக்குகளில் இளம்பெண் உட்பட 5 பேரை போலீஸார் மடக்கி விசாரித்தனர். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவர் தப்பி ஓடினார். அதனால் போலீஸார் மற்ற 4 பேரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``வாகனச் சோதனையில் சிக்கியவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். அதனால் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தோம். விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் (23), சூர்யா (20), லியோஜான் (18), பிரியா (25) எனத் தெரிய வந்தது. இந்தக் கும்பல்தான் தொழிலதிபர் ஹரிதாஸிடம் கத்திமுனையில் மோதிரம், பணம், செல்போனைப் பறித்தது தெரியவந்தது.
Also Read: `பணத்தை எண்ணிக்கூட பார்க்கல; போலீஸ் வரும்னு தெரியும்!’ -பழக்கடை கொள்ளையில் சிக்கிய `அப்பாவி’ திருடன்
மேலும் இந்தக்கும்பல் வெள்ளவேடு பகுதியில் கிருஷ்ணகிரியிலிருந்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஊத்தங்கரையைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரிடம் தொலைபேசி மற்றும் 2,500 ரூபாயையும் பறித்துள்ளது. மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் கிராமத்தில் பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று செல்போன், 8,500 ரூபாய் மற்றும் இரண்டு பைக்குகளையும் கொள்ளையடித்துள்ளது.
இதையடுத்து 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பைக்குகள், பணம், செல்போன்கள், மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். தப்பி ஓடியவரை தேடிவருகிறோம். அதிகாலை நேரத்தில் தனியாகப் பிரியாவை சாலையில் நிற்க வைத்து லிஃப்ட் கேட்பது போல் வாகனங்களில் வருபவர்களை வழிமறித்து கொள்ளை சம்பவங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டுவந்துள்ளது" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/thiruvallur-police-arrested-4-persons-in-theft-charge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக